வுல்வாட் அபார சதம் : இலங்கையை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது தென் ஆபிரிக்கா

14 Apr, 2024 | 09:35 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக கிம்பலி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (13) நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவி லோரா வுல்வாட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் தென் ஆபிரிக்கா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்கா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

ஈஸ்ட் லண்டனில் நடைபெற்ற முதலாவது போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டதால் முடிவு கிட்டவில்லை.

தென் ஆபிரிக்க மகளிர் அணியின் தலைவியாக நியமிக்கப்பட்ட பின்னர் வுல்வாட் குவித்த மூன்றாவது சதம் இதுவாகும். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற 6ஆவது சதமாகவும் அது பதிவானது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

கிம்பலி விளையாட்டரங்கில் நிர்ணயிக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி இலக்கை தென் ஆபரிக்கா கடந்து வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

லாரா குட்வில் (7), டெல்மி டக்க (2), சுனே லுஸ் (23) ஆகிய மூவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (86 - 3 விக்.)

இந் நிலையில் லோரா வுல்வாட், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் நிதானத்துடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 147 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கினர்.

பந்துவீச்சில் அச்சினி குலசூரிய (35 - 1 விக்.), இனோக்கா ரணவீர (41 - 1 விக்.), ஓஷாதி ரணசிங்க (45 - 1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

இளம் வீராங்களை விஷ்மி குணரட்ன (7) ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி சமரி அத்தபத்து, ஹாசினி பெரேரா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து ஹன்சிமா கருணாரட்ன, கவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

அதன் பின்னர் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த நிலக்ஷிகா சில்வா, ஓஷாதி ரணசிங்க ஆகியோர் 41 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இந்த மூன்று இணைப்பாட்டங்களும் இலங்கையை ஓரளவு சிறப்பான   நிலையில் இட்டபோதிலும் அவை பின்னர் வீண் போயின.

துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 9 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி 42 ஓட்டங்களையும் நிலக்ஷிகா சில்வா 36 ஓட்டங்களையும் ஹன்சிமா கருணாரட்ன 33 ஓட்டங்களையும் ஓஷாதி ரணசிங்க 20 ஓட்டங்களையும் ஹாசினி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நாடின் டி க்ளாக் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அயாபொங்கா காகா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நொன்குலுலேக்கோ மிலாபா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான கடைசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பொச்சேஸ்ட்ரூமில் புதன்கிழமை (17) நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்