வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரைக் காரணங்களால் கருப்பை மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னரே புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது 30 வயதிலேயே பலர் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கருப்பை புற்றுநோய் ஏற்பட 80 வீதம் வரை எச்.பி.வி.வைரசும் ஒரு காரணம் என கண்டறிப்பட்டுள்ளது. இதற்காக திருமணம் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறதா? என்பதை பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு முன்னர் உறவின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ ரத்தம் வெளிப்படுதல், வெள்ளைப் படுதல் அதிகம் இருக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தம் கலந்து வரலாம். இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கருப்பைப் புற்று நோய்க்கான பரிசோதனையை அவசியம் மேற்கொள்ளவேண்டும்.

பயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்று நோய் கண்டறியப்படுகிறது. புற்று நோய் ஆரம்பிக்கும் சமயத்தில் கண்டறிந்தால் கருப்பையை அகற்றுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் பரவிய பின்னர் தாமதமாக கண்டறியப்படும் போது ரேடியோ தெரபி மற்றும் கீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். இதில் தற்போது சத்திர சிகிச்சைகளின் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

ஸைடொமிக்சோமா பெரிடோனி என்னும் உள்ளுறையின் மேற்பரப்பில், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உண்டாகியிருக்கும் கட்டியை சத்திர சிகிச்சை மூலம் அகற்ற முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இது போன்ற சத்திர சிகிச்சையின் போது பின்விளைவுகள் இருப்பதால் அனுபவம் பெற்ற மருத்துவ நிபுணர்களால் மட்டுமே முழுமையான கவனத்துடன் செய்ய இயலும். இதனிடையே குடல்வால், பெருங்குடல், கருப்பை போன்ற புற்றுநோயிலிருந்து வயிற்று உள்ளுறை மேற்பரப்பில் புற்றுநோய் பரவியிருந்தால் அவர்களின் வாழ்நாளை அதிகரிக்க இத்தகைய சத்திர சிகிச்சை அவசியமாகிறது. 

டொக்டர் சிறினிவாசன்

தொகுப்பு அனுஷா