நிறைவேறாமல் போன புத்தாண்டு கனவு : தொழிலாளர்களை அலட்சியப்படுத்திய கம்பனிகள்

11 Apr, 2024 | 05:06 PM
image

சி.சி.என்

இவ்வருடம் சித்திரைப் புத்தாண்டை  சம்பள அதிகரிப்புடன் கொண்டாடலாம் என்றிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கனவை  பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகள் தகர்த்துள்ளன. 10ஆம் திகதி புதன்கிழமை தொழில் அமைச்சில் தொழிற்சங்கங்களுடனான தொழிலாளர்களின் சம்பளம் குறித்த தீர்க்கமான பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளாது இறுதி நேரத்தில் நழுவியுள்ளன கம்பனிகள்.

அரச தரப்பில் தொழில் அமைச்சர் மற்றும் சம்பள நிர்ணய சபையுடனான முதலாவது கலந்துரையாடலே 10ஆம் திகதி ஏற்பாடாகியிருந்தது. 

இந்த பேச்சுவார்த்தை குறித்து தமக்கு இறுதி நேரத்திலேயே  தகவல் வந்ததாகவும் ஆகையால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும் கம்பனிகள் அறிவித்திருந்தன. மேலும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,  பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரையும் கம்பனிகள் அலட்சியப்படுத்தியுள்ளன என்ற விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம், தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ரூபா 1700ஐ வழங்கக் கோரி கம்பனிகளின் நிலைப்பாட்டை  அறியத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் டிசம்பர் மாத கடைசி வரை கம்பனிகள் வாய் திறக்கவில்லை. ஜனாதிபதியின் உத்தரவையே நிராகரித்துள்ள கம்பனிகளை தொழிற்சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. 

10ஆம் திகதி இடம்பெறவிருந்த பேச்சு வார்த்தைகளில் கம்பனிகள் கலந்து கொள்ளாதது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கருத்துத்தெரிவித்த போது, ‘ இந்த சம்பவம் கம்பனிகளின் அலட்சியப்போக்கையே வெளிப்படுத்தியுள்ளது.  தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தீர்வு எட்டப்படவிருந்த நிலையிலேயே அவர்கள் வருகை தராது பேச்சுக்களை தவிர்த்துள்ளனர். சம்பள நிர்ணய சபை என்பது அரசாங்கத்தின் ஒரு அங்கமாகும்.  ஆகவே இவர்கள் அரசாங்கத்தையும் அலட்சியப்படுத்துகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் நாம் கம்பனிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டியிருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதே வேளை இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கூறுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று உரிய வகையில் தமது வாக்கை பயன்படுத்த வேண்டும்."   'சம்பள நிர்ணயசபை  10ஆம் திகதி கூடியது.  10 தொழிற்சங்கங்களில் 9 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். தோட்ட சேவையாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. பெருந்தோட்டக் கம்பனிகளும் வரவில்லை.

10ஆம் திகதி சம்பள நிர்ணயசபைக் கூடும் என முதலாம் திகதியே அறிவித்திருந்தோம். எனினும், தம்மால் வரமுடியாது என கம்பனிகாரர்கள் 9 ஆம் திகதியே  அறிவித்திருந்தனர்.

சம்பள உயர்வு தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பேச்சு நடத்தி வருகின்றோம். எனவே, உரிய கால அவகாசம் இல்லை என்பது உட்பட கம்பனிகள் கூறிவரும் காரணங்கள் ஏற்புடையானவையாக அல்ல.

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித சட்டசிக்கலும் இல்லை என சட்டமா அதிபரிடமே நாம் ஆலோசனை பெற்றுவிட்டோம். ஆனால் சட்ட சிக்கல் எனக்கூறி கூட்டு ஒப்பந்தத்துக்கு வருவதற்கு கம்பனிகள் மறுக்கின்றன.

அதேபோல நாம் அடிப்படை சம்பளத்தையே அதிகரிக்குமாறு வலியுறுத்துகின்றோம். ஆனால் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்காது கொடுப்பனவு என்ற அடிப்படையில் 33 சதவீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கம்பனிகள் யோசனை முன்வைத்துள்ளன. 33 சதவீத சம்பள உயர்வு நல்லதுதானே, அதனை ஏற்கலாம் அல்லவா என சிலர் கேட்கின்றனர். இது ஏற்புடையது அல்ல. அதனால்தான் நாம் நிராகரித்தோம். இது விடயத்தில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை.

சம்பள நிர்ணய சபையை இரண்டு தடவைகள் கூட்ட வேண்டும்.  2ஆவது கூட்டம் 24ஆம் திகதி கூடும். இதன்போது சம்பள உயர்வு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும். தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுக்காமல் இருந்தால் தீர்வைப் பெறலாம். 24 ஆம் திகதி தோட்ட சேவையாளர் சங்கமும் பங்கேற்கும் என எதிர்பார்க்கின்றோம். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அஞ்சாமல், தொழிலாளர்கள் பக்கம் நிற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்." -என்றார்.

மார்ச் மாதமன்று நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், இன்னும் முப்பது நாட்களில் நிச்சயமாக 1700 ரூபாய் நாட்சம்பளம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியாக தெரிவித்திருந்தார். அதன் படி 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இது சாத்தியமாகியிருந்தால் தொழிலாளர்கள் சித்திரைப் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருப்பர். வைகாசி மாதம் அவர்களுக்கு புதிய சம்பளத் தொகை கிடைத்திருக்கும். தற்போது கம்பனிகளின் செயற்பாட்டால் தொழிலாளர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். 

கம்பனிகளின் செயற்பாட்டால் அவர்களுக்கெதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஆகப்போவதொன்றுமில்லை. ஏனென்றால் தொழிலாளர்களின்  சம்பளம் சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்படுகின்றது. தொழில் திணைக்களத்தில் கீழ் இந்த சபை இயங்குகின்றது. தொழில் திணைக்களமானது தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்றது. ஆகவே அரசாங்கம் நினைத்தால் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். மேலும் அரசாங்கத்தின் பக்கமிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கலாம்.  

மேலும், இ.தொ.கா கூறுவது போன்று, 24ஆம் திகதி இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களிலும் கம்பனிகள் தமக்கு இந்த சம்பளத்தொகையை வழங்க முடியாது என்று கூறினால் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்தே போராட்டங்களுக்குச் செல்ல வேண்டும். இது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும். மட்டுமல்லாது தற்போது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் இ.தொ.காவுக்கும் இந்த விடயத்தில் தொழிலாளர்களிடம் பொறுப்பு கூற வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரைவில் இலங்கை - பிரான்ஸ் பொருளாதார...

2024-05-24 18:17:40
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 18:03:49
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 13:26:57
news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48