(நெவில் அன்தனி)
எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கக் கிடைத்ததை ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன் என வீரகேசரிக்கு 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி வீராங்கனை அமுருதா சுரேன்குமார் தெரிவித்தார்.
இலங்கையில் இன்னொரு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தனது தந்தையிடம் கோரவுள்ளதாகவும் சகலதுறை வீராங்கனையான அமுருதா குறிப்பிட்டார்.
காலி சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நிறைவடைந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் ஒருநாள் மும்முனை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் வீரகேசரிக்கு அளித்த பேட்டியின்போதே அமு என எல்லோராலும் பாசமாக அழைக்கப்படும் அமுருதா தனது கருத்தை வெளியிட்டார்.
கேள்வி: தந்தை கிரிக்கெட் விளையாடியதால் நீங்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தீர்களா?
பதில் (அமுருதா): 'எனது பெற்றோர் இருவருமே கிரிக்கெட்டின்பால் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எனது தந்தை (சுரேன்குமார்) இலங்கையில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாடி இருந்தார். எனது தாயார் (லோஜினி) இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியதுடன் வலைபந்தாட்டத்திலும் ஈடுபட்டார். அவர்கள் அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமுமே என்னை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வைத்தது.
'நான் ஆறு வயதாக இருந்தபோது கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். சிறு பராயத்தில் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களித்தேன். எனக்கு 7 வயதானபோது நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகத்தில் இணைந்தேன். அங்குதான் எனது கிரிக்கெட் வளர்ச்சி அடையத் தொடங்கியது. படிப்படியாக எனது கிரிக்கெட் ஆற்றல் முன்னேற்றம் அடைந்தது. எனக்கு 16 வயதானபோது சன்ரைசர்ஸ் கழகத்தின் சிரேஷ்ட அணியில் விiளாயாட வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர் மிட்ல்செக்ஸ் அணிக்காக பிராந்திய கிரிக்கெட் விளையாடியதுடன் இப்போது இசெக்ஸ் அணிக்காக விiளையாடுகிறேன். இவை அனைத்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததுடன், என்னிடம் இருந்த கிரிக்கெட் ஆர்வம், பேரார்வமாக மாறியது.'
கேள்வி: 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடக் கிடைத்தைப் பற்றி என்ன கூற விரும்பகிறீர்கள்?
பதில் : 'உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் திறமையை வெளிப்படுத்தி வந்ததன் பலனாக 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சிக் குழாத்தில் என்னை இணைத்துக் கொண்டனர். இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை முன்னிட்டே இந்த குழாம் தெரிவுசெய்யப்பட்டது. அப்போது, இலங்கைக்கு பயணம் செய்து இங்கிலாந்து யுவதிகள் அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னில் இயல்பாகவே புகுந்துகொண்டது.
'ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுடான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு விளையாடக் கிடைத்தது. அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஏனேனில் எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக் கிடைத்ததை நான் ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.
'இங்கிலாந்திலிருந்து வருகை தந்த எனது பெற்றொரும் இளைய சகோதரிகளும் அந்தப் போட்டியை நேரடியாக கண்டு களித்தனர். அத்துடன் இலங்கையில் உள்ள எமது உறவினர்கள் சிலரும் அந்தப் போட்டியைக் கண்டு களித்தனர். காலியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு எனது தந்தையின் சகாக்கள் சிலர் வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தியதை நான் மறக்க மாட்டேன்.'
கேள்வி: இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியதன் மூலம் என்ன அனுபவத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்?
பதில்: 'இலங்கையில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குகளில் விளையாடக் கிடைத்தை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கடும் உஷ்ணத்துக்கு மத்தியிலும் வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கிரிக்கெட் விளையாடுவது பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய சவால்களுக்கு மத்தியில் விளையாடியதன் மூலம் மறக்க முடியாத சிறந்த அனுவங்களை நானும் எனது சக வீராங்கனைகளும் பெற்றுக்கொண்டோம். போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் எங்களது கிரிக்கெட் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகுகிறது. நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். இங்கும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டோம் . இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை என்னால் மறக்க முடியாது.'
கேள்வி: இலங்கையின் இளம் வீராங்கனைகளுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?
பதில்: 'இலங்கை யுவதிகளிடம் திறமை இருக்கிறது. மனதை தளரவிடாமல் விடா முயற்சியுடன் தொடர்ந்து விளையாடினால் உயரிய நிலையை அடைய முடியும். அவர்கள் ஒருநாள் அதனை நிலைநாட்டுவார்கள் என நம்புகிறேன்.'
கேள்வி: உங்களது எதிர்கால இலட்சியம் என்ன?
பதில்: 'எல்லா இளையோரையும் போன்று இங்கிலாந்து தேசிய மகளிர் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த இலக்கை அடைய நான் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும். அத்துடன் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. எனது பெற்றோர், பயிற்றுநர் ஆகியோரின் ஆசியுடன் அந்த இலக்கை அடைந்தே தீருவேன்.'
அமுருதாவின் தந்தை எஸ். சுரேன்குமார், வடக்கின் கிரிக்கெட் சமரில் துடுப்பாட்டத்துக்கான சாதனையை நிலைநாட்டியவராவார். 1990இல் நடைபெற்ற யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பரி. யோவான் அணி சார்பாக சுரேன்குமார் குவித்த 145 ஓட்டங்களே வடக்கின் சமரில் தனி நபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இன்றும் இருந்துவருகிறது.
அமுருதாவின் இளைய சகோதரிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM