(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

அமெரிக்கா இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நம்பியே 2009 ஆம் ஆண்டு எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம்.  எனவே  எமக்கு இணைத்தலைமை நாடுகள் பதிலளிக்கவேண்டும் என்று  வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன். அன்று முதல் கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன். இப்போது அரசியல் அங்கீகாரத்துடன்  ஐ.நா. மனித உரிமை  பேரவையில் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றேன். 

2009 ஆம் ஆண்டு எங்கள் உறவுகளை நாங்கள் இராணுவத்திடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு இணைத் தலைமை நாடுகள் வழிவகுத்திருந்தன. ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதனை செய்தன. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய அங்கம் வகித்திருந்தது. அதனால் எமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலைமையை இணைத் தலைமை நாடுகள் ஏற்படுத்தின.

2009 இல் இராணுவத்திடம் எம்மை சர்வதேசம் விட்டுவிட்டதைப் போன்று 2015 இல் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கத்திடம் விட்டு விட்டது. இவை இரண்டுமே தவறாகும். எமக்கு சர்வதேசம் பதிலளிக்க வேண்டும் என்றார்.