யுத்தக் காலப்பகுதியில் எனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது, கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்ட ஊடகவியலாளர்களையும் அரசியல் விமசர்களையும் மரணப் படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச தேசிய புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஊடாக இரகசிய சிறப்பு படை பிரிவு ஒன்றை இயக்கியதாகவும் குறித்த இரகசிய பிரிவானது தனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாகவும்  முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கடந்த திங்கட்கிழமை(20) கல்கிச்சை நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இக் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ஷ,

2005 டிசம்பர் மாதம் முதல் 2009 ஜீலை மாதம் வரை சரத் பொன்சேகாவே இலங்கை இராணுவத்தை வழிநடத்தினார். எனவே இந்த குற்றச்சாட்டுக்கு அவரே பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனது தலைமையில் மரணப் படை ஒன்று செயற்பட்டதாக கூறுவதை முற்றாக நிராகரிக்கின்றேன். அவ்வாறு ஒரு படை செயற்பட்டிருந்தால் ஒரு இராணுவத்தளபதியாக பொன்சேகா இதற்கெதிராக எதனை செய்தார் என கேள்வியெழுப்பியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இராணுவத்தை தலைமை தாங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிக்கொண்ட பொன்சேகா அதற்கு அடுத்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 17 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்தில் தொழில்புரிந்த பலர் கொலை செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது.

இவ்விடயம் தொடர்பான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் 6ஆவது சந்தேக நபராக இராணுவ அதிகாரியை பொலிஸார் கைது செய்தனர். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பத்திரிகை ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டதோடு மேலும் 5 பேர் கடந்த மாதம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை பின்னணியிலும் மரணப் படை இருந்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆயுதம் கொள்வனவின் போது ஊழல் இடம்பெற்றதாவும் மிக் ஜெட் விமானங்கள் கொள்வனவின் போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கோத்தபாயவுக்கு எதிராக லசந்த விக்கிரமதுங்க குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி 2015 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்ததில் இருந்து ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஊழல் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் அரசியல் பழிவாங்களுக்காவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுதாக உரிய தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.