இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன -  அருட்தந்தை மா.சத்திவேல்

06 Apr, 2024 | 10:24 PM
image

இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. 

அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய தொழிலில் ஈடுபடும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்துக்கு ஆதாரமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், கால்நடைகளை கொல்வதற்கு குண்டர்களுக்கு இடம் அளித்தும் தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வை அழித்து வீதியில் தள்ளி இருப்பது இன அழிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது என்பதன் வெளிப்பாடு எனலாம்.

தமிழ் கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இனவாத குண்டர்களை அரச பயங்கரவாதம் பார்த்துக்கொண்டிருப்பதோடு பாதுகாப்பும் கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். 

1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளிலும் அரச பயங்கரவாதம் இதையே செய்தது.

இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன. யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் விவசாய நிலங்கள் எல்லாம் பறிபோன நிலையில் தற்போது சுயமாக தொழில் செய்யும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை சீரழித்து நிலத்தை ஆக்கிரமிக்க குண்டர்களை ஏவிவிட்டுள்ள பேரினவாதம் மகாவலி அதிகார சபையின் கீழ் வெறும் நிலங்களை சூறையாடவும் திட்டமிட்டு இருப்பது இஸ்ரேல் வழிமுறையிலான இன அழிப்பாகும்.

பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களின் நியாயத்தன்மையை ஏற்று நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்பினையும் அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்த பின் நிற்பது மனித உரிமை மீறலோடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும். அது மட்டுமல்ல, தங்களுடைய பிரச்சினையை கதைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் போதுமான காலத்தை அளிக்காது தீர்வு காண வழிகளையும் திறக்காதிருப்பது பண்ணையாளர்களை அழிக்கும் செயலுக்கு அப்பால் தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் சாதியாகும். 

ஆயிரம் பொங்கல் வைத்து தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழாவினை எடுத்தவர் பண்ணையாளர்களுக்கு எதிராக நிற்பது பேரினவாதத்தின் கைக்கூலியாக செயல்படுவதன் அடையாளம் எனலாம்.

இத்தகைய பின்புலத்தில் தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் என்பது அவர்கள் சார்ந்த விடயமாக இருந்தாலும் அது தமிழர்களின் பாரம்பரியம் தமிழர் அடையாளம் மற்றும் அரசியல் சார்ந்த விடயமாகும். இதற்கு கிழக்கின் தமிழ் பண்ணையாளர்களால் மட்டும் முகங்கொடுக்க முடியாது. அது வடகிழக்கு சார்ந்த மக்கள் அரசியல் போராட்டமாக உருமாறல் வேண்டும்.

ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவைத் தவிர பொதுவாக தாம் கைவிடப்பட்டுள்ளோம் என்ற மன நிலையிலேயே 200 நாட்களை கடந்தும் பண்ணையாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதனை பயன்படுத்தி தமிழர்களின் தாயக அரசியலை ஏற்காத தெற்கின் போராட்டக் குழு ஒன்றும் தமது அரசியலுக்காக இவர்களை பயன்படுத்த முனைகிறது.

எமது போராட்டங்கள் குடும்ப விழாக்களைப் போன்றும், ஊர் திருவிழாக்களை போன்றும், மாவட்ட, மாகாண மட்ட விழாக்கள் போன்றும் காலத்துக்கு காலம் நடத்துவது தோல்விக்கே வழிவகுக்கும். இதனையே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் தாயக அரசியலுக்கு எதிரான சக்திகளும் விரும்புகின்றன. இதற்கு இடமளிக்காமல், புதிய வடிவிலான மக்கள் போராட்டங்கள் முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

வடகிழக்கு தமிழர்களின் சுதந்திரம், கௌரவம் என்பன தாயகம் காக்கும் அரசியல் செயற்பாடு என்பதை நாம் அறிவோம். அதற்காகவே ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைக்க போராட்ட மையம் தோற்றுவிக்கப்படல் வேண்டும். இது குளிர் அறையில் இருந்து கதைக்கும் விடயமல்ல. போராட்டம் மையம் என்பது சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய தலைமைத்துவ குழுவின் தன்மையைக் கொண்டது. பொதுவானதும் உறுதிமிக்கதுமான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் போராட்ட வடிவங்களை உருவாக்கி அதனை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் போராடுவது அரசிடமிருந்து இலவசங்களையோ சலுகைகளையோ பெற்றுக்கொள்வதற்கு அல்ல என்பது நாம் அறிந்ததே. இது வலுவிழக்கக் கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47
news-image

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான...

2025-03-16 09:47:17
news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:46:44
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14