குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் - 2024

04 Apr, 2024 | 03:24 PM
image

ந்த ஆண்டு குரு பெயர்ச்சி எதிர்வரும் 01.05.2024 அன்று மாலை 05.21 மணிக்கு மேஷ ராசியிலிருந்து கார்த்திகை 1ம் பாதத்திலிருந்து ரிஷப ராசி கார்த்திகை 2ம் பாதத்தில் பெயர்ச்சி ஆகிறார். கால புருச தத்துவப்படி, இரண்டாம் வீட்டுக்கு குரு வருவது குடும்ப ஒற்றுமை, தன வரவு, தடைப்பட்ட பண வரவுகள் விரைவில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் அமையும். 

வெளிநாடுகளில் வாசிப்பவர்கள் பொருளாதார மேன்மை அடைவார்கள். டொலரின் மதிப்பும், யூரோவின் மதிப்பும் பிற நாடுகளில் உயர்வு ஏற்படுவதால், தங்க நகைகளின் விலை ஏற்றம் உண்டாகும். தங்கத்தின் விற்பனை குறைந்தாலும் இருப்பு வைத்துக்கொள்ள கொள்முதல்களில் வளர்ச்சி ஏற்படும். 

பருவ மழை மாற்றத்தால் சீரகம், வெந்தயம், மஞ்சள் விலை ஏற்றம் உண்டாகும். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். யாரும் எதிர்பாராத சூழ்நிலை உண்டாகும். பல இடங்களில் ஆன்மிக பயிற்சி முகாம்கள், தியான பயிற்சி கூடங்கள் மூலம் மக்கள் உடல்நலனின் அக்கறை எடுத்துக்கொள்வது அதிகரிக்கும். வாழ்வாதாரங்களையும் பெருக்கிக்கொள்வார்கள்.

பெண்களின் வேலை வாய்ப்பு, திருமணம், வீடு, மனைகள், வாகனங்கள் வாங்க தேவையான வசதி வாய்ப்புகள் அமையும். தங்களது நாட்டின் நாணயங்களின் மதிப்பை கூட்டுவதற்கு உலக வங்கியின் ஆலோசனைகளை எல்லா நாடுகளும் கடைப்பிடிக்கவேண்டிய சூழ்நிலை அமையும்.

புதிய வியாதிகள் வராதிருக்கும். நோய்க்கு போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்வார்கள். இது மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். மழை செழிக்கும். விவசாய நிலங்களின் விளைச்சல் நன்றாக இருக்கும்.

இயற்பெயர் - பிரகஸ்பதி

திசை ஆண்டுகள் - பதினாறு (16)

மனைவி பெயர் - தாரா

நட்பு - சனி, சூரியன், சந்திரன், செவ்வாய்,கேது

பகை - புதன், சுக்கிரன்

ராசி சஞ்சரிக்கும் காலம் - சுமார் ஓராண்டு

சமித்து - ஆலமரம்

தானியம் - கொண்டை கடலை

நவரத்தினம் - கனக புஷ்ப ராகம்

உலோகம் - தங்கம்

திசை - வட கிழக்கு

பார்வை -  5, 7, 9

மலர் - மஞ்சள் நிற பூக்கள்

மேஷம்

விரும்பியதை விரும்பியபடி அமைத்துக்கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!

இந்த வரும் 01-05-2024 முதல் இதுவரை ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் இனி தனஸ்தானத்திற்கு வருகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன வரவுகளும், நன்மையும் பெறக்கூடிய பாக்கியம் உண்டாகும்.

உங்களின் பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்து ஆறாமிடத்தையும், எட்டாமிடத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுவது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். காரணமின்றி கடன்படுவது, உடல் நலக்குறைவு, எதிர்ப்புகள் இதிலிருந்து உங்களின் வளர்ச்சிப் பாதைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

உடல் நலனில் சிறு செலவு செய்து, குணமடையும் வாய்ப்புகள் ஏற்படும். எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் மறையும். பல காலம் நிலுவையில் இருந்துவந்த வழக்கு முடிவுக்கு வரும். கருத்து வேற்றுமையில் பிரிந்த தம்பதியினர் இணைவதற்கான காலகட்டம் அமையப்பெறும்.

சட்டத்துறையினருக்கு பதவி உயர்வும், மேலதிகாரிகளின் மூலம் காரிய அனுகூலம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் அமையும். சிலருக்கு வங்கி கடன் மூலம் தொழில் தொடங்கவும் பழைய தொழிலை புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் அமையும். சரியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்ய நிறைய நண்பர்கள் வந்து சேருவார்கள்.

தங்க நகை அடகு வைத்து சிலர் தொழிலில் முதலீடு செய்யும் சூழ்நிலை உருவாகும். இதனால் வளர்ச்சி ஏற்பட்டு மேன்மை அடைவீர்கள். கலைத்துறையினருக்கு தேவையான வசதிகள் வந்து சேரும். உயர்கல்வி பயில ஆதரவுகள் கிடைக்கப் பெற்று, உங்களின் ஆசை நிறைவேறும். மறைவு ஸ்தானங்களை குரு பார்வையிடுவதால் கெடுபலன்கள் குறையும் வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலையில் சிறந்த உயர் நிலையை அடைவீர்கள்.

பரிகாரம்:

குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் மூன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல காரியங்களும் நன்மையை தரும்.

ரிஷபம்

தன்னை மதிப்பவர்களை மதிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி வாசகர்களே!

இந்த வருடம் இதுவரையில் விரைய குருவாக இருந்த குரு பகவான் 01-05-2024 அன்று ஜென்ம குருவாக வரவிருக்கிறார். பல்வேறு இழப்புகளிலிருந்து மீண்டு வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும் வாய்ப்புகளைப் பெறுகிறீர்கள்.

ஜென்ம குருவாக அமரும்போது உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுவது அந்த இடம் பலம் பெறும் வழியை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வழி கிடைக்கப் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகள் செய்வதும், குல தெய்வம் தெரியாதவர்கள் கடைபிடிக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். காதலை வெளிப்படுத்தவும், காதலர்கள் திருமணம் செய்துகொள்ளவும். இது சரியான காலமாக அமையும்.

எதிர்த்து பேசியவர்கள் அடங்கிப் போவார்கள். வெளிநாடு செல்லவும், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் அமையும். திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும்.

நண்பர்களின் உதவியும், பொருளாதார ரீதியான ஒத்துழைப்பும் உங்களுக்கு உதவியை தரும். தீர்த்த யாத்திரை சென்று வருதல், ஆலய தரிசனம், குருவின் அருள் ஆசி பெறுதல், உயர் பதவியில் இருப்பவர்களின் சந்திப்பு மூலம் நட்பும் நன்மையும் உண்டாகும். உங்களின் இலட்சியத்தில் ஒரு பகுதியை செயலில் காட்டி மேன்மை பெறுவீர்கள்.

உங்களுக்கு நட்பு வீடு என்பதால் பெரும்பாலும் நன்மையை தரும். புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலைகளுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்துகொள்வீர்கள். வங்கிக் கடன் பெறுவது, அதற்கு தேவையான ஆவணங்களை சரிசெய்துகொள்வது போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்வீர்கள். பொது வாழ்வில் உங்களுக்கு சென்று ஓர் இடத்தை தக்கவைத்துக்கொள்வீர்கள். பசியுடன் இருக்கும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த தான தர்மம் செய்வீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்கி மஞ்சள் நிற பூ வைத்து நெய் தீபமேற்றி வாங்கி வர நினைத்த காரியம் கைகூடும்.

மிதுனம்

துணிச்சலுடன் எதையும் செய்து பலன் பெறும் மிதுன ராசி வாசகர்களே!

இந்த வருடம் 01-05-2024 அன்று குரு பெயர்ச்சி... இதுவரை லாபஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் இனி விரையஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் பாதகாதிபதி மறைவு பெறுவதும் நன்மையை தரும்.

விரையாதிபதி வீட்டில் குரு அமர்ந்து உங்களின் சுகஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும், அட்டமஸ்தானத்தையும் பார்ப்பது நற்பலன்களை தரும். சுகஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தை வாங்குவீர்கள். 

வீடு கட்டும் யோசனை மூலம் புதிய வீடு மனை வாங்குதல், வங்கி மூலம் கடன் பெற்று வீடு கட்டுதல், கட்டிய மனையை வாங்குதல் போன்ற சந்தர்ப்பங்கள் உருவாகும். உங்களின் தங்க நகைகளை அடகு வைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். உடல் நலனில் கவனம் செலுத்தி சரி செய்துகொள்வீர்கள்.

கடன் பட்டாலும் விரைவில் அடைக்கும் சூழ்நிலையை குரு தருவார். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகலாம். சிலருக்கு இருக்கும் இடத்தில் வேறு பணிக்கு மாற்றலாகி செல்லவேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். எதிலும் உங்களின் செல்வாக்குக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்கொள்வீர்கள்.

அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பலரின் கவனம் உங்கள் மீது இருக்கும். சரியான நேரத்தில் எதையும் செய்து முடித்துவிடும் உங்களின் திறமையை கண்டு வியப்பார்கள். பல காலம் உங்களை பகையாக நினைத்த நிலை மாறி உறவு கொள்வார்கள். புதிய முயற்சிகளுக்கு சிலரின் உதவியுடன் நன்மை பெறுவீர்கள்.

பெண்களுக்கு திருமணம் அமையும். மறுமணம் செய்ய இந்த காலம் உதவியாக அமையும். வெளிநாட்டுத் தொடர்புகள் நல்ல பலனைத் தரும். கருத்து ஒற்றுமையும், காரிய அனுகூலமும் உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் தொடர்ந்து கொண்டை கடலை மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி, வணங்கி வர நினைத்த காரியம் விரைவில் நடந்து நலம் பெறுவீர்கள்.

கடகம்

சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!

எதிர்வரும் 01-05-2024 முதல் உங்களின் தொழில் ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனிமேல் லாபஸ்தானத்தில் வந்து அமர்வதும் அவர் பார்க்குமிடங்களால் சிறப்பான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். 

அட்டம சனியின் தாக்கத்தால் கடந்த காலத்தில் சில பாதிப்புகளை அடைந்து வந்த உங்களுக்கு, குரு லாபஸ்தானத்தில் அமர்வதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். தனி திறமையுடன் செயல்படும் வல்லமை உண்டாகும். உங்களின் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்ப்பது நற்பண்புகளையும் மேன்மையையும் உண்டாக்கும். 

உங்களின் கடந்த கால தொய்வு நிலை மாறி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செயல்பட தொடங்கும். எவ்வளவு காலத்தில் முடியும் என்று இருந்த நிலை மாறி, விரைவில் முடிவு எட்டும். பூர்வ புண்ணிய பலம் பெற்று உங்களின் பூர்வீக சொத்துகள் சம்பந்தமான பிரச்சினை தீரும். காதல் திருமணம் நிறைவேறும்.

உங்களின் எண்ணம் போல் வாழ்வு சிறக்கும். குலதெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். எடுத்த காரியம் தடையின்றி நடக்கும். உங்களின் கூட்டுத் தொழிலில் நிதானமான போக்கு உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வெளிநாடு செல்லும் சூழ்நிலைகள் வளம் பெறச் செய்யும். காரியத்தில் கவனம் செலுத்தி மேன்மையை அடைவீர்கள்.

குறுகிய கால தொழிலில் முதலீடு செய்து, விரைவான வளர்ச்சியைப் பெறுவீர்கள். திருமண காரியம் இனிதாக நடக்கும். மறுமணம் செய்ய உகந்த காலமாக அமையும். திருமண தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன்கள் அமையும். பொருளாதார மேன்மை உண்டாகும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டும், தட்சணாமூர்த்தி ஒரு நெய் தீபமேற்றியும் வேண்டிக்கொள்ள, சகல காரியங்களும் கைகூடும். மேன்மை உண்டாகும்.

சிம்மம்

நம்பியவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் சிம்ம ராசி வாசகர்களே!

எதிர்வரும் 01-05-2024 முதல் இதுவரை உங்களின் ராசியை பார்த்துவந்த குரு பகவான் இனி தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், ஆறாமிடத்தையும் பார்ப்பதோடு, உங்களின் தொழில் ஸ்தானத்திலும் அமர்வதால் நன்மைகள் உண்டாகும். மேலும் உங்களுக்கு குருவால் சமபலன்கள் அதாவது லாப நஷ்டங்கள் இரண்டும் இருக்கும்.

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பது போல தனஸ்தானத்தின் குரு பார்வையால் உங்களின் பொருளாதார வளர்ச்சி மேன்மை பெறும். சிறந்த பொருளாதார நிபுணர் போல மனத்தில் கணக்கு போடுவீர்கள். தேவைக்கேற்ப உதவிகளும் கிடைக்கும். பொருளாதாரத்தில் பலரும் பங்குபற்றுவார்கள். சுகஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும்.

கடந்த கால உடல் நல குறைபாடுகளிலிருந்து விடுபட்டு, மருத்துவத்தாலும், சித்த மருத்துவத்தாலும் உடல் நலனில் முன்னேற்றம் பெறுவீர்கள். வீடு, மனை பராமரிப்பு, வீடு கட்டுதல், வீட்டு கடன் பெறுதல், மனை வாங்குதல் போன்ற காரியங்களில் முயற்சி செய்தால் நல்ல பலன் கிட்டும். இதுவரை கடன் பட்ட நிலை மாறி, உங்களின் கடன் முழுவதும் தீர்ந்து, வருமானத்தை பெருக்கிக்கொள்வீர்கள்.

தொழிலுக்காக கடன் படவேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு உண்டாகும். ஆன்மிக நாட்டம், பொது விடயங்களில் அக்கறை கொள்ளுதல் போன்றவை ஏற்படும். தான தர்ம காரியங்களில் சிலர் ஈடுபாடு கொள்வீர்கள். ஆலய பணிகள் சிலருக்கு கடமையாக அமையும். மனதில் பட்டதை வெளிப்படுத்தி முக்கிய பங்குகளை உருவாக்குவீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைகடலை மாலை, மஞ்சள் தூள் அர்ச்சனை செய்து வழிபட்டு, தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நினைத்தபடி நடக்கும்.

கன்னி

மற்றவர்களின் விருப்பத்தை அறிந்து செயற்படும் கன்னி ராசி வாசகர்களே!

எதிர்வரும் 01-05-2024 முதல் இதுவரை அட்டம ஸ்தானத்தில் அமர்ந்த குரு பாக்கியஸ்தானத்தில் அமர்வதும், உங்களின் ராசியை பார்ப்பதும், உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களின் ராசியையும் உங்களின் முயற்சி ஸ்தானத்தையும் பூர்வ புண்ணியஸ்தானத்தையும் பார்ப்பதும் சிறப்பான பலன்களை பெற்று தருவதுடன், இதுவரை இருந்த உங்களின் அனைத்து கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களின் முக்கியமான காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி, மனமகிழ்ச்சியையும், குடும்ப ஒற்றுமையும் ஓங்கும்.

திறமையுடன் தினம் செயற்பட்டு, உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் மேன்மை பெறுவீர்கள். நம்பிக்கையுடன் ஒவ்வொரு காரியத்தையும் செயற்படுத்தி, அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தனித்து விடப்பட்ட சிலருக்கு புதிய உறவு வந்து சேரும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு சொந்த நாடு வரவும், பல காலம் சந்திக்காத நட்பு உறவுகளையும் பார்க்கும் பலன்களும் அமையும்.

உங்களுக்கு ஒரு விடயத்தில் செய்தேயாக வேண்டுமென்ற நிலை வரும்போது தவறாமல் அதனை செய்து முடித்து, நல்ல பலனைப் பெறுவீர்கள். சரியான காலகட்டம் வரும்போது உங்களுக்கு எதை கொடுத்து விருத்தி செய்யச் சொன்னார்களோ அதனை பல மடங்கு செய்து முடித்துவிடுவீர்கள்.

பூர்வ புண்ணிய பலன்களில் இருந்த தடை நீங்கி, பூர்வீக சொத்து சம்பந்தமான விடயங்கள் விரைவில் நல்ல முடிவை எட்டும். பொது வாழ்விலும், அரசியல் பிரவேசத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவு, நினைத்த காரியம் நன்மையைத் தரும். சுமைதாங்கியாக சிலருக்கு உதவி செய்வீர்கள். பணப்புழக்கம் இருக்கும். கேட்ட இடத்திலிருந்து பண வரவு வரும்.

புனித யாத்திரை சென்று வர பலருக்கு சந்தர்ப்பம் அமையும். வாகன வசதிகளும் ‍அமையும். அடிக்கடி வெளியூர் பயணம் சென்றும் வருவீர்கள். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குவீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களுக்கு உதவியும் நற்பலனும் தரும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற பட்டுத்துணி எடுத்து, குரு பகவானுக்கு சாற்றி, மஞ்சளால் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ள, சகல காரியங்களிலும் வெற்றியையும் நன்மையையும் பெறுவீர்கள்.

துலாம்

எதையும் நுட்பமாக செய்து மகிழ்ச்சியடையும் துலாம் ராசி வாசகர்களே!

எதிர்வரும் 01-05-2024 முதல் குரு உங்களின் ராசிக்கு இதுவரை களத்திரஸ்தானத்திலிருந்து அட்டம ஸ்தானத்தில் அமர்வதும் மறைவு ஸ்தானத்தை பார்வையிடுவதும் நன்மையாக அமையும்.

குருவின் அருள் இருந்தால் எல்லாம் ஜெயம்தான். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் உங்களின் பண்பு சிறப்பாக அமையும். உங்களின் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால், சுப விரையம் உண்டாகும். குடும்பத்தில் வீடு கட்டுதல், திருமணம் செய்து வைத்தல், தான தர்மம் செய்தல் போன்ற புண்ணிய காரியங்கள் உண்டாகும். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கும். 

அதுபோல் வெளிநாடு செல்ல முயற்சி செய்து வருபவருக்கு வெளிநாடு செல்லவும் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் வாய்ப்பை பெறுவதும் குடும்ப நன்மைக்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதும் நடக்கும். உங்களின் தனஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் எந்த தொழில் செய்தாலும், உத்தியோகத்தில் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியையும் வருமானத்தையும் அதிகரித்துக்கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். சுகஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய வாகனம் வாங்கவும், காலிமனை வாங்கவும், வங்கி மூலம் வீடு கட்டவும், புதிதாக வீடு வாங்கவும்  வாய்ப்புகள் அமையும். தந்தை வழி சொத்து தொடர்பான வழக்குகளில் சிலருக்கு சற்று முன்னேற்றம் உண்டாகும்.

பொது விடயங்களில் ஈடுபாடு இருந்தாலும் முழு கவனம் செலுத்தமாட்டீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் விரைந்து முடிக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். அட்டம குரு என்பதால் பிணயம் இடுவதை தவிர்த்துவிடுவது நல்லது. கடன்கள் வாங்கும்போது கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் நல்லது. சரியான நேரத்தில் உங்களின் கடமைகளை செய்யும் வழிகள் நியாயமாக அமையும். அடுத்தவரை பற்றி நினைக்காமல் உங்களின் சேவையை தொடர்ந்து செய்து வருவீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் குரு காயத்ரியை சொல்லி, குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர, உங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.

விருச்சிகம்

வலிமையான செயல்களை திறமையுடன் செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!

எதிர்வரும் 01-05-2024 முதல் இதுவரை ஆறாம் இடத்திலிருந்த குரு பகவான் இனி களத்திரஸ்தானத்தில் அமர்வதால், சிறப்பான நல்ல பலன்களையும், ஏற்கனவே இருக்கும் அர்த்தாஷ்டம சனியால் வரும் துன்பமும் நீங்கப் பெறுவீர்கள்.

குருவின் பார்வை உங்களின் ராசியிலும், மூன்றாமிடமான முயற்சிஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் படுவதால் இந்த ஓராண்டு காலத்துக்கு சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் உங்களின் திறன் மேலும் பலப்படும். பத்தாம் பார்வையாக சனி உங்களின் ராசியை பார்ப்பதால் வரும் கெடுபலன்கள், குரு பார்வையால் குறையும். உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். 

சாதுர்யமாக பேசி சில காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். புனிதமான உங்களின் முயற்சிகள் அத்தனையும் எதிர்பார்த்ததை விட நன்மைகளை தரும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு நீங்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்காலத்தை கணித்து நீங்கள் செயல்படும் காரியம், அதற்கான செயல்களின் ஆதிக்கம் செலுத்தும் துணிச்சல் உண்டாகும். 

அரசியலிலும் உங்களுக்கு புதிய செல்வாக்கும், எதிர்பார்த்த நன்மையும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். சீக்கிரம் சிலருக்கு திருமண வாய்ப்பு அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த சொத்துகள், இழந்த பணம் கிடைக்க உங்களின் முயற்சிகளின் மூலம் நன்மை உண்டாகும். உங்களின் லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழிலில் முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும்.

பணியில் இருப்பவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி உறவுகளில் இருந்துவந்த பிரிவினை, கருத்து வேறுபாடுகள் நீங்கி, நன்மை உண்டாகும். பிரிந்த உறவுகள் மீண்டும் வந்து சேர்வார்கள். புத்திரரால் வந்த பல கஷ்டங்கள் நீங்கும். கடன் தொல்லைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற பூ சாற்றி, சந்தனம் வாங்கி கொடுத்து வேண்டிக்கொள்ள, சகல காரியங்களிலும் நன்மையும் அனுகூலமும் உண்டாகும்.

தனுசு

தாராள மனமும் தியாக குணமும் கொண்ட தனுசு ராசி வாசகர்களே!

எதிர்வரும் 01-05-2024 முதல் இதுவரை பஞ்சமஸ்தானத்தில் இருந்த குரு, இனி ஆறாமிடமான ருண சத்ரு ஸ்தானத்தில் அமர்கிறார். உங்களின் ராசிநாதன் என்பதால் ஆறாமிடமாக இருந்தாலும் உங்களின் மேல் அக்கறை கொள்வார்.

குரு பார்வை பெறும் இடமான தனஸ்தானத்திலும், தொழில் ஸ்தானத்திலும், விரையஸ்தானத்திலும் குருவின் பார்வை இருப்பதால் குடும்பத்தில் பல காலம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். இனி எதையும் சிறப்பான வளர்ச்சியை பெறுவதற்கு சில முக்கியத்துவம் அளிப்பீர்கள். தனஸ்தானாதிபதி சனி உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக யோக சனியாக இருப்பதால் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

குறுகிய காலத்தில் உங்களின் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு தேவைகளுக்கான பொருளாதார மேன்மை உண்டாகும். தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால், செய்யும் தொழிலை விருத்தி செய்துகொள்ளவும் புதிய தொழிலில் முதலீடு செய்யவும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற விடயங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். செய்யும் தொழிலில் உண்மையும் நேர்மையும் கொண்டு விளங்குவீர்கள்.

காரியத்தில் கவனமும், செயலில் முன்னெச்சரிக்கையும் கொண்டு விளங்குவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களுக்கு நன்மையை பெற்றுத் தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். விருப்பமற்ற வேலையில் இருப்பவருக்கு இதை விட வேறு பணிக்கு சென்று பொருளாதாரம் ஈட்டும் வாய்ப்பு அமையும். 

சுப விரையங்கள் உண்டாகும். காலிமனை வாங்குவதற்கு உகந்த நேரமாக அமையும். தொழில் அமையாதவர்களுக்கு நல்ல தொழில் அமையும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் :

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு ஆறு நெய் தீபமேற்றி, மஞ்சள் தூள் அர்ச்சனை செய்து, வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நினைத்தபடி சிறப்பாக அமையும்.

மகரம்

வசதிகளை தேடி செல்லாமல், இயல்பாகவே வாழ நினைக்கும் மகர ராசி வாசகர்களே!

இந்த வருடம் இதுவரை சுகஸ்தானத்தில் இருந்த குரு 01-05-2024 முதல் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதும் சிறப்பான பலன்களாக அமையும்.

உங்களின் ராசிக்கு குரு பகவான் மறைவு ஸ்தானாதிபதி என்பதால் குரு பார்க்குமிடம் சிறப்பு. உங்களின் பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதுடன் உங்களின் ராசியை பார்ப்பதால் நற்பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசியை பார்ப்பதால், கடந்த கால தேக்க நிலைகள் மாறி நன்மைகள் உண்டாகும். பாக்கியஸ்தானத்தை பார்ப்பதால், தொழிலில் புதிய மாற்றங்களுடன் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிகளும் சலுகைகளும் பெறுவீர்கள்.

தனித் திறமையுடன் பல சாதனைகளைச் செய்வீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வந்து செயற்பட வேண்டிவரும். நேர்மையான உங்களின் தன்மைக்கு எப்பொழுதும் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். புனித யாத்திரை சென்று வருதல், ஆன்மிக தொடர்புகள் மூலம் சிறப்பான வளர்ச்சியை பெற்று பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.

இனி லாபஸ்தானத்தின் பார்வையால் சிலருக்கு இழந்த செல்வம் மீட்டிக்கொள்ளவும், பெரிய கடன்களை குறைத்துக்கொள்ளவும் சுமையாக இருந்துவந்த காரியம் வளம் பெறவும், இனி நினைத்தது நடக்கும் காலமாக அமையும். மூத்த சகோதரர் மூலம் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு மறுமணம் செய்யும் வாய்ப்புகள் அமையும்.

எண்ணங்கள் நிறைவேறும். துணிச்சலுடன் எதையும் செய்து மேன்மை பெறுவீர்கள். தொழிற்சங்கத்தின் சில பொறுப்புகள் வந்து சேரும். இதன் மூலம் பலரின் வாழ்வில் ஒளி வீசும்படியான பல நல்ல காரியங்களை நடத்தித் தருவீர்கள். உங்களை ஏமாற்றியவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மூன்று நெய் தீபமிட்டு, கொண்டைகடலை மாலை போட்டு, எலுமிச்சை சாதத்தை  நைவேத்தியமாக படைத்து, வேண்டிக்கொள்ள சகல நலன்களும் உண்டாகும்.

கும்பம்

காரியத்தை செயல்படுத்தில் கவனம் செலுத்தும் கும்ப ராசி வாசகர்களே!

இந்த வருடம் 01-05-2024 முதல் இதுவரை மூன்றாமிடத்தில் இருந்து குரு பகவான் இனி சுகஸ்தானத்தில் அமர்வதும், உங்களின் மறைவு ஸ்தானத்தை பார்ப்பதும் தடைகள் நீங்கி, சுபீட்சம் பெற நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த குரு பெயர்ச்சி மூலம் இதுவரை குரு பார்வை பெற்ற இடங்களில் சிறப்பு பெற்ற நீங்கள் இனி உங்களின் மறைவு ஸ்தானமான அட்டமஸ்தானத்தை பார்ப்பதன் மூலம் தடைப்பட்ட பல காரியங்கள் நடைபெற தொடங்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சரவுகள் நீங்கி, சுகமாக இருக்க குரு உதவி செய்வார். நீண்ட காலம் நீடித்து வந்த வழக்குகள் நல்ல முடிவை எட்டும்.

உங்களை ஏசியவர்கள் உங்களின் உறவை எதிர்பார்த்திருப்பார்கள். குரு உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் இல்லாமல் இருந்தவருக்கு நல்ல தொழிலை ஏற்படுத்திக் கொடுப்பார். வேலை தேடுபவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்வார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவருக்கு நல்ல வேலையும் விரைவில் விசாவும் கிடைக்க வழி உண்டாகும்.

வெளிநாடுகளில் வேலை செய்பவருக்கு கூடுதல் ஊதியம் கிடைக்கவும். வேறு நிறுவனத்தில் கூடுதல் சம்பளம் கிடைக்கும் வாய்ப்புகளும் அமையும். உங்களின் ராசிநாதனின் மூலம் உங்களின் எதிர்கால நலன் சிறப்பாக அமையும். கொடுத்த இடத்தில் பணம் திரும்ப கிடைக்க, நீங்கள் எடுக்கும் முயற்சிகள் விரைவில் நிறைவேறும்.

அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு நல்ல நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தங்கள் அமையப் பெறுவீர்கள். புதிய கடன் மூலம் பழைய கடன்களை நீக்கி நிம்மதி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் சீரான நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் அல்லது காலை 6 - 7 மணிக்குள் நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் அர்ச்சனை செய்து வர வருடம் முழுவதும் நற்பலன்களை பெறுவீர்கள்.

மீனம்

அறிவுடனும் ஆற்றலுடனும் செயற்படும் மீன ராசி வாசகர்களே!

இந்த வருடம் 01-05-2024 முதல், இதுவரை தனஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனி முயற்சி ஸ்தானத்தில் அமர்கிறார். வருமானத்துக்கு தகுந்தபடி உங்களின் பொருளாதார நிலையை உயர்த்தித் தருவார்.

குரு வரும் காலத்தில் கீர்த்தி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும் பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். திருமண காரியங்களும், வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் விரைவில் நடக்கும். நினைத்தபடி செயலில் இறங்கி வளம் பெற செய்வீர்கள். 

எந்த வித காரியமாக இருந்தாலும் யாரையாவது துணை கொண்டு செயல்படும்போது அது வெற்றியைப் பெற்றுத் தரும்.

விரும்பிய பெண்ணை அல்லது ஆணை மணப்பதற்கும், குடும்ப ஒற்றுமைக்கும் நல்ல பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுமையாக இருந்த சில காரியங்கள் மேன்மை அடையும். எதிரிக்கும் தீங்குகள் நினைக்காத உங்களின் பண்புக்கு மேலும் நல்ல காலம் வந்து சேரும். உறுதுணையாக உதவி செய்ய உங்களின் நண்பர்கள் பயன்படுவார்கள். 

தீர்த்த யாத்திரை சென்று வருதல், ஆன்மிக செயல்களில் ஈடுபாடு கொள்தல் என பல விடயங்களில் சரியான நேரத்துக்கு உங்களின் கடமையையும் செய்து வருவீர்கள். புதிய திட்டங்களுக்கான செயல் வடிவம் உங்களை தேடி வந்தடையும்படி அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். எதை தெரிவு செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த உங்களுக்கு விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும்.

முக்கிய நபரின் சந்திப்பு உங்களின் வாழ்வில் மேன்மையை பெற்றுத் தரும். லாபாதிபதி சனி விரையத்தில் இருந்தாலும் குரு பார்வையால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய பணம் தாமதமின்றி கிடைக்கும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வெளிநாட்டு தொடர்புகளில் முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வரவேற்பும் புதிய ஒப்பந்தங்களும் அமையும். அரசியலில் ஆலோசகராக இருந்து வழிநடத்துவீர்கள். பணப்புழக்கம் இருக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் காலை 6 - 7 மணிக்குள் நவகிரக குருவுக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு, மஞ்சள் அர்ச்சனை செய்து வர, உங்களின் வாழ்வில் எதிர்பாராத திருப்பமும், பண பலமும் உண்டாகும்.

கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்- சிம்மம்..!?

2024-05-29 17:41:04
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் !

2024-05-28 15:12:02
news-image

வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்-...

2024-05-27 16:04:42
news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24