மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லடி, வேலூர்ப் பகுதியிலிருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதியிலிருந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிவந்த வானும் மோதியதில், அம்மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவிகள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் கா.பொ.த.சாதாரணதரத்தில் கற்கும் மாணவிகளான வி.சப்னா (16), கே.பஜனா (16) மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற விநாயகமூர்த்தி (55) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக  வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை கைதுசெய்ததுடன், வேனைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி ஒருவரும் அவரது தந்தையும் உறவு முறையான மாணவியுமே மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

- ஜவ்பர்கான்