சிவலிங்கம் சிவகுமாரன்
2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தொழிலாளர் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 17.500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் படி 12.500 ரூபாவாக இருந்த மாதாந்த வேதனம் ஐயாயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளை ஆகக்குறைந்த நாளாந்த சம்பளத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மேற்படி சட்டத்தின் பிரகாரம் இதுநாள் வரை 500 ரூபாயாக இருந்த நாளாந்த சம்பளத்தில் 200 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டு 700 ரூபாயாக அது மாற்றம் பெறும் வகையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. குறைந்த பட்ச வேதன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தானாக முன்வந்து சமர்ப்பிக்கவில்லை. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைப்புகளின் பிரகாரம் நியமிக்கபட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்தருநர்களையும் உள்ளடக்கிய முத்தரப்பு உபகுழுவொன்றின் சிபாரிசுகளுக்கமையவே மேற்படி அமைச்சரவை பத்திரத்தை தொழில் அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.
நாட்டில் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்கள் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். சிலர் மாதாந்த வேதனைத்தைப் பெறும் அதே வேளை நாளாந்த கூலியையும் பெறுகின்றனர். தொழிலாளர் குறைந்த பட்ச வேதனச் சட்டம் பற்றி தொழிலாளர்கள் பலருக்கு தெளிவுகள் இல்லை. இதன் காரணமாக பல தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கேற்ற வேதனத்தை இவர்களுக்கு வழங்காது, சில தொழில்தருநர்கள் தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
எனினும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்றுறை ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள தொழிலாளி ஒருவர் பெற்றுக்கொள்ளப்போகும் ஆகக் குறைந்த மாதச்சம்பளமாக 17,500 ரூபா இருக்கப்போகின்றது.
சம்பள அதிகரிப்பு விவகாரங்களோடு தொடர்பட்டதாக நாட்டில் இரண்டு விடயங்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன. தோட்டத்தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக்கு கம்பனிகளின் எதிர்ப்பு. அடுத்தது மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரிப்பதற்கு மத்திய வங்கி ஆளுநரின் சுயமான தீர்மானங்கள்.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் பாராளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இதற்கு தமது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலில் ஒரு பிரிவினர் மாத்திரம் சலுகைகளையும் வரப்பிரசாங்களையும் அனுபவிக்கும் வண்ணம் செயற்பட அனுமதிக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநரின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கங்களும் கேட்கப்பட்டன.
எனினும் தனது நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் தனக்கு பொறுப்பு உள்ளது என்றும் அந்த பொறுப்பையே தான் நிறைவேற்றியதாகவும் ஆளுநர் கூறுகின்றார்.
மத்திய வங்கியானது பொது மக்களின் நிதியமாகவே விளங்குகின்றது. பொது நிதிக்கு பாராளுமன்றம் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் மக்களுக்காகவும் அவர்களின் நிதிக்காகவும் களமிறங்கியுள்ளனர்.
ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இப்படியான எந்த தேசிய ரீதியான நகர்வுகளையும் காணமுடிவதில்லை. நியாயமாகப் பார்த்தால் இந்நாட்டில் குறைந்த பட்ச வேதனத்தைப்பெறும் வர்க்கத்தினராக தோட்டத்தொழிலாளர்களே உள்ளனர். தொழில் அமைச்சராக விளங்கும் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தில் நழுவல் போக்கை கடைப்பிடிப்பதாகவே தெரிகின்றது. தொழில் அமைச்சில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான பேச்சு வார்த்தைகளின் போது, தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1700 ரூபா நாட்சம்பள கோரிக்கையை கம்பனிகள் நிராகரித்திருப்பதாகவே அறிய முடிகின்றது. கம்பனிகள் 33 வீதம் அதிகரிப்பை மேற்கொள்ளவே இணங்கியுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
அப்படியானால் இவர்களின் நாட்சம்பளத்தை 1330 ரூபாயாக கம்பனிகள் நிர்ணயம் செய்திருக்கின்றனர். இதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜீவன் கொந்தளிக்கின்றார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் எந்த காலத்திலும் திருப்தியான முடிவை தந்தததில்லை. கம்பனிகள் அல்லது தொழிற்சங்கங்கள் தீர்மானிக்கின்றன தொகையையே அவர்கள் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான நியாயமான சம்பளத்தை தீர்மானிக்கும் பொறிமுறையொன்றை வகுக்க எந்த அரசாங்கமும் முன்வந்ததில்லை.
கூட்டு ஒப்பந்தம் அல்லது சம்பள நிர்ணய சபையைத் தவிர்த்து வேறு தெரிவுகளுக்குச் செல்ல அரசாங்கமும் கூடவே தொழிற்சங்கங்களும் விரும்பவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. அப்படியான தெரிவுகள் இருந்தால் தொழிற்சங்கங்கள் ஏன் அது குறித்து பரிந்துரைப்பதில்லை? குறைந்த பட்ச வேதன சட்டங்களிலெல்லாம் திருத்தம் கொண்டு வர முயற்சிப்பவர்கள் தோட்டத்தொழிலாளர்கள் என்ற பிரிவினரும் இந்த நாட்டில் தான் வாழ்கின்றனர் என்பதை அறியாதுள்ளனர் போலும்.
நாட்சம்பளமாக 1700 ரூபாவை வழங்க வேண்டும் என ஜனாதிபதியே முதலில் கம்பனிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இப்போது அவர் தேர்தல்கள் தொடர்பில் பேசி வருகின்றார். எப்படியும் தேர்தலை இலக்கு வைத்தே தொழிலாளர்களின் சம்பள விவகாரம் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றதோ என்ற சந்தேகமும் இல்லாமலில்லை. இவ்வருடம் முழுதும் இந்த விவகாரம் இழுபறியாகினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM