சிரிக்க , சிந்திக்க வைத்த எஸ்.ஜெயபாலன் (ஜே.பி) ; ஓர் அஞ்சலி குறிப்பு 

Published By: Vishnu

03 Apr, 2024 | 01:46 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

இலங்கையில் கடந்த 94 வருடங்களாக தமிழ் பேசும் மக்களின் குரலாக வெளிவந்து கொண்டிருக்கும் வீரகேசரி பத்திரிகையின்   கேலி சித்திர வரைஞராகவும்  சிறுகதைகள், கட்டுரைகளுக்கு ஓவியராகவும்  பணியாற்றி வந்த  பத்திரிகையாளர் எஸ்.ஜெயபாலன் தனது 78 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை 25 ஆம் திகதியன்று காலமானார். தனது கேலிச்சித்திரங்களில் ஜே.பி என தமிழிலும் அல்லது JP என ஆங்கிலத்திலும் தனது பெயரை சுருக்கமாக குறிப்பிட்டிருப்பார். இவரது முழுப்பெயரான ஜெயபாலன் என்பதன் சுருக்கமே அது. 

வீரகேசரியுடனான இவரது சேவை காலம் 40 வருடங்களுக்கும் அதிகமாகும். வீரகேசரி பிரசுரங்களான நாளிதழ், வாரஇதழ், மித்திரன், மெட்ரோ நியூஸ், சூரியகாந்தி ஆகியவற்றுக்கு கேலிச்சித்திரங்களையும் சிறுகதை மற்றும் ஆக்கங்களுக்கு ஓவியங்களையும் திறம்பட படைத்தவர். எஸ்.ஜெயபாலனின் பூர்விகம் தமிழகமாகும். இவரது தந்தையார் பொன்னையா சுப்பையா சிவகங்கை மாவட்டத்தின் நாலுகோட்டை எனும் இடத்தைச் சேர்ந்தவர். தாயார் மாணிக்கவல்லி அதே மாவட்டத்தின் கீழப்பூங்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். 

இவர்கள் இருவருக்கும் மூத்த மகனாக கீழப்பூங்குடியில் பிறந்தவரே ஜெயபாலன். இவருக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். சிறுவயதில் குடும்பத்துடன்  அட்டன் தோட்டத்தில் குடியேறியது இவர்களது குடும்பம்.  ஜே.பி அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில்  தனது கல்வியைத் தொடர்ந்தார். 

தந்தை   ஆங்கில வழி கல்வி கற்றவராக விளங்கியதால் அக்காலத்தில்  ஆங்கிலேயர்களுக்கு சொந்தமாக இருந்த நிறுவனங்களில் அவருக்கு உத்தியோகம் கிடைத்தது. இலங்கையில்  பிரபல நிறுவனமாக விளங்கிய பிரவுண்ஸ் நிறுவனத்துக்கு உரித்தானதாக     அட்டன் நகரில் இயங்கிய  அட்டன் வங்கி, அட்டன் ட்ரான்ஸ்போர்ட் ஆகிய கூட்டு நிறுவனங்களின்  பிரதம லிகிதராக அவரது தந்தை கடமையாற்றினார். பின்னர் இந்த நிறுவனங்களில், அட்டன் வங்கி அட்டன் நஷனல் வங்கியாக மாற்றம் பெற்றது. 

ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு ஆக்கங்கள் எழுதுவதில் இவரது தந்தை ஆர்வம் காட்டினார். டைம்ஸ் ஒப் சிலோன் ,சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் வரைந்தார். இவரை விட இதழியலை முழு நேரத் தொழிலாக கொண்டவர் இவரது சிறிய தந்தையார் பொன். கிருஷ்ணசுவாமி.  மோர்னிங் டைம்ஸ், வீரகேசரி, லங்காதீப,சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு பத்தி மற்றும் அரசியல்பத்திகளையும் பிரதேச செய்திகளையும் எழுதி வந்தவர்.

1970 களில் மிகவும் பிரபலமான பத்திரிகையாளராக விளங்கியவர். பின்பு லண்டன் டெய்லி மிர்ரர் பத்திரிகையின் பத்திரிகையாளராகவும் செய்தி ஆசிரியராகவும் இரண்டரை வருடங்கள் பணியாற்றி தமிழகத்தில் காலமானார். 

ஜெயபாலனுக்கு இதழியலில் ஆர்வம் ஏற்பட இவர்கள் இருவருமே காரணகர்த்தாக்கள். தலைநகர் கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் 1970 களில் வீரகேசரியில் இணைந்து கொண்டுள்ளார். 

அச்சந்தர்ப்பத்தில் வீரகேசரி மற்றும் மித்திரன்  வாரமலர் ஆகிய பத்திரிகைகளே வெளிவந்து கொண்டிருந்தன. அதில் தனது திறமையை வெளிக்காட்டினார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுமிக்க ஜெயபாலன் கேலிச்சித்திரத்தில் அதை பயன்படுத்தினார். மித்திரன் வாரமலரில் வெளியான பிரபல கேள்வி பதில் பகுதியான பூரம் பதில்கள் பகுதியை நகைச்சுவையாக தொகுத்து வழங்கினார். 

ஆசிரியப்பீடத்தில் தனக்கென தனக்கென ஒதுக்கப்பட்ட மேசையில் அமர்ந்து மிகவும் அமைதியாக கேலிச்சித்திரங்கள் ,ஓவியங்களை படைக்கும் ஜே.பி, யாரிடமும் தானாகச் சென்று அதிகமாக கதைப்பதில்லை. ஆனால் அதீத நகைச்சுவை உணர்வு மிக்கவர். அரசியல் கேலிச் சித்திரங்களில் பொதுஜனம் என்ற பாத்திரத்தை நடமாட விடுவார். இடையில் ஒரு ஆடை மாத்திரம் உடுத்தி தோளில் ஒரு துணிப்பையை மாட்டி அதில் அரை இறாத்தல் பாணுடன் அந்த பாத்திரம் சம கால நிகழ்வுகளை அவதானிப்பது போன்றும் கருத்து சொல்வது போன்றும் கேலிச்சித்திரங்களை படைத்திருப்பார். 

சமகால  மற்றும் பூகோள அரசியல் நிகழ்வுகளை கேலிச்சித்திரமாக வெளிக்கொணர சகல பத்திரிகைகளையும் வாசித்தல் அவசியம். பத்திரிகைகளை வாசிப்பதற்காக   ஆசிரியப் பீடத்துக்கு முதலாவதாக வருகை தருபவராக ஜே.பி இருப்பார். 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து வருடந்தோறும் நடத்தும் சிறந்த ஊடகவியல் விருது வழங்கும் நிகழ்வில் 2005 ஆம் ஆண்டின்    சிறந்த கேலிச்சித்திர ஓவியருக்கான  விருதை தமிழ்ப்பிரிவில் வீரகேசரி பத்திரிகைக்காக பெற்றுக்கொண்டார். ஜே.பியின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு நித்தியகெளரி பாலமுருகன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.  

தான் பத்திரிகைகளுக்கு வரைந்த கேலிச்சித்திரங்களை தொகுத்து ஜே.பியின் கார்ட்டுன்கள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் அவர் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். தனது படைப்புகள் மூலம் வாசகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜே.பி என்றும் அவர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறைவேறாமல் போன புத்தாண்டு கனவு : ...

2024-04-11 17:06:23
news-image

நாட்டில் பெண்களை அச்சுறுத்தும் 'மாதவிடாய் வறுமை'...

2024-04-11 16:33:05
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கிய அல்ஸிபா மருத்துவனையிலிருந்து...

2024-04-10 16:33:44
news-image

சர்வதேச கடன் மறுசீரமைப்பில் அடுத்து நடக்கப்போவது...

2024-04-10 14:29:48
news-image

சுதந்திரம் வழங்கிய சிங்களக் குடியேற்றங்கள்

2024-04-10 14:15:40
news-image

வியட்நாமின் ‘எரியுலை’

2024-04-10 14:01:33
news-image

பாமர மக்களுக்கு, சட்ட அறிவை ஏற்படுத்துவதன்...

2024-04-09 12:44:47
news-image

வடக்கில் நிலவும் அமைதி, வழமைநிலையின் அடிப்புறத்தில்...

2024-04-09 12:45:13
news-image

3 ஆவது தடவையாகவும் பாரதப் பிரதமராக...

2024-04-09 12:23:45
news-image

முஸ்லிம் எம்.பிக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

2024-04-08 19:00:36
news-image

டமஸ்கஸ் தாக்குதல் : திறக்கிறதா மத்திய...

2024-04-08 18:50:01
news-image

அரபுலகின் யதார்த்தம்

2024-04-08 17:52:50