பெங்களூரை வீழ்த்தி அணிகள் நிலையில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியது லக்னோவ்

Published By: Vishnu

03 Apr, 2024 | 01:36 AM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்ரங்கில் இன்று (02) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 15ஆவது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 28 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 4ஆம் இடத்துக்கு லக்னோவ் முன்னேறியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.

குவின்டன் டி கொக், அணித் தலைவர் கே. எல். ராகுல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 33 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும் ராகுல் (20), தேவ்தத் படிக்கல் (6) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து குவின்டன் டி கொக், மாக்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஸ்டொய்னிஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குவின்டன் டி கொக் 56 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள். 5 சிக்ஸ்களுடன் 81 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.

டி கொக்கைத் தொடர்ந்து படோனி (0) ஐந்தாவதாக ஆட்டம் இழந்தபோது மத்திய வரிசை வீரர் நிக்கலஸ் பூரன் 8 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

அவர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 21 பந்துகளில் 5 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி அடங்கலாக 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் க்ருணல் பாண்டியாவுடன் 33 ஓட்டங்களைப் பகிர்ந்தார். 

ஆனால், க்ருணல் பாண்டியா ஓட்டம் பெறவில்லை. அந்த இணைப்பாட்டத்தில் ஒரு வைடைவிட மற்றைய ஓட்டங்களை 5 சிக்ஸ்கள் அடங்கலாக பூரண் தனியாகப் பெற்றார்.

பந்துவீச்சில் க்ளென் மெக்ஸ்வெல் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

182 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக்கில் 4 போட்டிகளில் பெங்களூர் அடைந்த 3ஆவது தோல்வி இதுவாகும்.

விராத் கோஹ்லி (22), பவ் டு ப்ளெசிஸ் (19), ராஜாத் பட்டிடார் (29) ஆகியோர் வேகமாக ஓட்டங்களைப் பெற்றது போலவே வேகமாக ஆட்டம் இழந்தனர். இது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

தொடர்ந்து சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர்களான க்ளென் மெக்ஸ்வெல் (0), கெமரன் க்றீன் (9) ஆகிய இருவரும் அனுஜ் ராவத்தும் (11) துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

கடந்த இரண்டு போட்டிகளில் அசத்திய தினேஷ் கார்த்திக் 4 ஓட்டங்களுடனும் மயான்க் தகார் ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர்.

எல்லைக் கோட்டுக்கு சற்று முன்பாக களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த நிக்கலஸ் பூரண் தன்னை நோக்கி வந்த பந்தை பிடித்து அங்கிருந்து நேராக விக்கெட்டை நோக்கி எறிந்து தகாரை ரன் அவுட் ஆக்கினார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மஹிபால் லொம்ரோ 13 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களைக் குவித்தார்.

கடைநிலை வீரர் மொஹமத் சிராஜ் 12 ஓட்டங்களுடன் கடைசியாக ஆட்டம் இழக்க, லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பந்துவீச்சில் மயன்க் யாதவ் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 25  ஓட்டங்களுக்கு    2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

RCBயை பந்தாடி சரிமாரியாக ஓட்டங்களைக் குவித்து...

2024-04-12 00:55:47
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண்...

2024-04-11 17:40:44
news-image

அப்ரிடிக்கு மேலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்...

2024-04-11 10:37:32
news-image

கடைசிப் பந்தில் வெற்றியை சுவைத்தது குஜராத்...

2024-04-11 01:10:42
news-image

40 வயதுக்குட்பட்ட, 40 வயதுக்கு மேற்பட்ட ...

2024-04-11 00:32:22
news-image

தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட்...

2024-04-10 20:09:20
news-image

லங்கா பிறீமியர் லீக்கில் வெளிநாட்டு வீரர்களைப்...

2024-04-10 18:01:30
news-image

மழையினால் வீண் போனது தஸ்மின் ப்றிட்ஸின்...

2024-04-10 15:45:53
news-image

பரபரப்பான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை...

2024-04-10 02:57:57
news-image

19இன் கீழ் மகளிர் 50 ஓவர்...

2024-04-09 23:51:15
news-image

ஐ.பி.எல். தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த்

2024-04-09 19:13:05
news-image

ஏப்ரல் 13, 14 இல் தெல்தோட்டையில்...

2024-04-09 13:23:22