ப்ரபாத், கமிந்துவின் சுழல்பந்துவீச்சு ஆற்றல்களால் தொடர் வெற்றியை அண்மித்துள்ளது இலங்கை

Published By: Vishnu

02 Apr, 2024 | 07:56 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களான ப்ரபாத் ஜயசூரிய, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியதன் பலனாக 2 - 0 என்ற தொடர் வெற்றியை இலங்கை அண்மித்துள்ளது.

இந்தத் தொடரில் இலங்கையினால் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக நிர்ணயிக்கப்பட்ட 511 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இலங்கையின் வெற்றிக்கு 3 விக்கெட்கள் தேவைப்படுவதுடன் பங்களாதேஷின் வெற்றிக்கு மேலும் 243 ஓட்டங்கள் தெவைப்படுகிறது.

இந்த வெற்றி இலக்கை பங்களாதேஷ் அடையுமா என்பது நினைத்துப்பார்க்கக் கூடிய ஒன்றல்ல. ஆனால், விசித்திரமான விளையாட்டான கிரிக்கெட்டில் சாதனைமிகு வெற்றி இலக்குகள் கடக்கப்பட்டுள்ளதை மறக்கலாகாது.

போட்டியின் கடைசி நாளான நாளைய தினம் பங்களாதேஷ் தடுத்தாடும் உத்தியைக் கையாளும் என்பதால் அவ்வணி பெரும் அழுதத்தை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதலாவது டெஸ்டிலும் பங்களாதேஷுக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் நிர்ணயித்த இலங்கை 328 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

இந்தத் தொடரில் முதல் தடவையாக இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தி வருவதால் கடைசி தினத்தன்று அவர்கள் பங்களாதேஷை 300 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழக்கச் செய்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய கமிந்து மெண்டிஸ் இந்தப் போட்டியில் ஒவ் ஸ்பின் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ள போதிலும் கடைசி நாளன்று அவர் இடது கையாளும் பந்துவீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சொந்த நாட்டில் மிகவும் இக்கட்டான நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் சார்பாக முன்வரிசை வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியபோதிலும் நீண்ட நேரம் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்த மூவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவுடன் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்த மொமினுள் ஹக் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த சூட்டோடு ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

எனினும் ஆறாவது பந்துவீச்சாளராக அறிமுகமான கமிந்து  மெண்டிஸ் தனது 4ஆவது ஓவரில் அனுபவசாலியான ஷக்கிப் அல் ஹசனின் விக்கெட்டைக் கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இந்த டெஸ்ட் தொடரில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவந்த கமிந்து மெண்டிஸ் தனக்கு பந்து வீச கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி சக வீரர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.

ஷக்கிப் அல் ஹசன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் லிட்டன் தாஸை லஹிரு குமார களம் விட்டு வெளியேற்றினார்.

அதன் பின்னர் ஷஹாடத் ஹொசெய்னை எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழக்கச் செய்த கமிந்து மெண்டிஸ் தனது 2ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் மெஹிதி ஹசன் மிராஸ் 44 ஓட்டங்களுடனும் தய்ஜுல் இஸ்லாம் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டு பங்களாதேஷுக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஏஞ்சலோ மெத்யூஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் அவருக்கு ப்ரபாத் ஜயசூரிய சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சலரும் ஆட்டம் இழந்து 178 (ஸக்கிர் கான் 54, மொமினுள் ஹக் 33, தய்ஜுல் இஸ்லாம் 22, மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, அசித்த பெர்னாண்டோ 34 - 4 விக்., லஹிரு குமார 19 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 65 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 157 - 7 விக். டிக்ளயார்ட் (ஏஞ்சலோ மெத்யூஸ் 56, நிஷான் மதுஷ்க 34, ப்ரபாத் ஜயசூரிய 28 ஆ.இ., ஹசன் மஹ்முத் 65 - 4 விக்., காலித் அஹ்மத் 34 - 2 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 268 - 7 விக். (மொமினுள் ஹக் 50, மெஹிதி ஹசன் மிராஸ் 44 ஆ.இ., லிட்டன் தாஸ் 38, ஷக்கிப் அல் ஹசன் 36, கமிந்து மெண்டிஸ் 22 - 2 விக்., லஹிரு குமார 41 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 79 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிஸ் ஒலிம்பிக் : குறுந்தூர ஓட்டங்களில்...

2024-04-23 12:28:48
news-image

புளோரிடாவில் திறந்தவெளி நீச்சலில் டிலன்க ஷெஹான்...

2024-04-23 12:29:46
news-image

வரலாறு படைத்துவரும் டுப்லான்டிஸின் உலக சாதனை...

2024-04-23 12:18:34
news-image

மும்பை இண்டியன்ஸை எதிர்த்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2024-04-23 02:27:37
news-image

ஐபிஎல்லில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல்...

2024-04-22 23:34:30
news-image

பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர்...

2024-04-22 20:13:21
news-image

சப்மனின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து ...

2024-04-22 17:07:36
news-image

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் வலை பந்துவீச்சாளராக...

2024-04-22 15:38:44
news-image

குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட போட்டியில்...

2024-04-22 01:19:28
news-image

பரபரப்பான போட்டியில் பெங்களூருவை கடைசிப் பந்தில்...

2024-04-21 21:19:55
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2024-04-21 15:13:32
news-image

பவர் ப்ளேயில் சாதனை படைத்து நடராஜனின்...

2024-04-21 06:23:36