(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் இனம் அரசியல் தீர்வை, அதிகாரபகிர்வை வேண்டி நிற்கின்றபோது கல்முனை மாநகரத்தில் வெறுமனே ஒரு வட்டாரத்தில் 3500 தமிழ் மக்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதற்கு இடமளிக்காது தமிழ் தலைமைகள் எவ்வாறு வட ,கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக அதிகாரப்பகிர்வை எட்ட முடியும்,
நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கல்முனையில் தமிழ் மக்களுக்கென ஒரு எல்லையுடனான பிரதேச செயலகம் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அத்துடன் கல்முனை பிரதேச செயலக பிர்ச்சினைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளோ முஸ்லிம் எம்.பி.க்களோ காரணமல்ல.
மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் தரப்பினர் வேண்டிநிற்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம், காணி அதிகாரம் போன்றவற்றை இடைக்காலத் தீர்ப்பில் நிராகரித்துள்ளநிலையிலும் .வழக்கு இன்னும் முடியாத நிலையிலும். இந்த பிரச்சினையில் அரசு எப்படி தலையிட முடியும்? எனவும் கேள்வி எழுப்பியினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற வங்கி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். கல்முனை நகரத்தில் கல்முனை பிரதேச செயலகம் ஒன்றும் அதே நேரம் கல்முனை உப பிரதேச செயலகம் ஒன்றும் இயங்கி வருகின்றது.
இந்த உப பிரதேச செயலகம் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் ஒரு கடிதத்தின் ஊடாக உருவாக்கப்பட்டது.
ஆனால் அது சம்பந்தமாக அந்த நேரத்தில் இருந்த அமைச்சரவை தீர்மானமோ அல்லது வர்த்தமானி பிரகடனமோ அந்த உப பிரதேச செயலகத்திற்கு இருக்கவில்லை.
அன்றிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக அப்போது கல்முனை பிராந்தியத்தில் இருந்த அன்றைய ஆயுத இயக்கங்களின் உறுப்பினர்கள் பல அச்சுறுத்தல்களை மேற்கொண்டு பலவந்தமான முறையில் இந்த உப பிரதேச செயலக உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது.
இருந்தும் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை காரணமாக அன்றிருந்த முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர் ,அதேபோன்று பின்னர் வந்த அமைச்சர்கள் எல்லோரும் இதனை பேச்சு வார்த்தை ஊடாக தீர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுக்கென வேறு எல்லையுடனான ஒரு பிரதேச செயலகமும் முஸ்லிம் மக்களுக்கென ஒரு எல்லையுடனான பிரதேச செயலகமும் உருவாக்கப்பட வேண்டுமென்ற கொள்கை ரீதியான உடன்பாட்டுக்கு வந்திருந்தார்கள்.
குறிப்பாக இந்த உப பிரதேச செயலகம் ஒரு நிலத்தொடர்பற்ற ரீதியில் இயங்கி வருவதன் காரணமாக பூகோள ரீதியாக பல பிரச்சினைகள், சர்ச்சைகள் இருக்கின்ற சூழ் நிலையில் தான் ஒரு எல்லையினுடனான இரு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற இணக்கப்பாட்டுக்கு சமூகத்தலைவர்கள் முன் வந்திருந்த போதும் துர்ப்பாக்கியமாக அது நடைபெறவில்லை.
இந்த சபையில் திங்கட்கிழமை தமிழரசுக்கட்சியின் தலைவர் சிறிதரன் பேசுகின்றபோது சில உண்மைகளை கூறியிருந்தார். அதாவது கல்முனை வடக்கு உப பிரதேச செயலக எல்லைக்குள் 3500 முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.பள்ளிவாசல்கள், அரபுக்கல்லூரிகள் இருக்கின்றன , முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன என கூறியிருந்தார்.
இந்த விடயத்திலிருந்தே இங்கு தெளிவுபடுத்தலாமென நினைக்கின்றேன். கல்முனையில் இருக்கின்ற தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒரே மொழியை பேசி 4.5 சதுர மைலுக்குள் அடர்த்தியாக வாழ்கின்ற நிலையில் யுத்தகாலத்தில் சுயநல அரசியல் சக்திகளினால் மக்கள் பிரிக்கப்பட்டு கல்முனையில் பொதுவான நிர்வாகத்தின் கீழ் வாழ முடியாது. இன ரீதியான ஒரு உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பிரிந்து சென்றார்கள்
பிரிந்திருந்தும் கூட அந்த பிரிக்கப்பட்ட உப பிரதேச செயலகத்திற்குள் 3500 முஸ்லிம் மக்களை அவர்களின் விருப்பமில்லாமல் நிர்வாகம் செய்து கொண்டிருக்கின்றார்கள் .அங்கு பள்ளி வாசல்கள், முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள், பஸார்கள் உள்ளன, இவை பலாத்காரமான முறையில் உப பிரதேச செயலகத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் மக்கள் பாரிய அநீதிக்குட்படுத்தப்பட்டது தான் வரலாறு.
இவ்வாறு அநீதிக்குட்படுத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக நாம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண விரும்பி 2017 ஆம் ஆண்டு அப்போது பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சராக இருந்த வஜிர அபேவர்தனவின் வீட்டில் இரவு,பகலாக சம்பந்தன், மாவை சேனாதிராஜா,சுமந்திரன் போன்றோருடன் நாம் பேசியிருந்தோம். முஸ்லிம் மக்கள் இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .அதேபோன்று எல்லை நிரந்தரமாக பிரிக்கின்றபோது பிரிக்கப்படுகின்ற முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலக பிரிவில் 3500-4000 தமிழ் மக்கள் வாழ வேண்டிவரும் அவ்வாறு வருகின்றபோது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாமென்று நாம் எமது யோசனையை முன்வைத்தோம்.
எவ்வாறு கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவில் 3500 முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்களோ அதேபோன்று முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலக பிரிவில் 3500-4000 தமிழ் மக்கள் வாழ்கின்றபோது இதற்கொரு நிரந்தரமான தீர்வு குறிப்பாக கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் மட்டுமல்லாமல் ஒரு உள்ளுராட்சி சபையும் கிடைக்கும். எனவே இவ்வாறான ஒரு தீர்வை முன் வைப்போம் எனக்கூறியபோது ஒரு தமிழ் மகனும் கல்முனை பிரதேச செயலகத்திற்குள் வாழ முடியாது ,இதற்கு நாங்கள் உடன்பட முடியாது என்று கூறி இன ரீதியான ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என்பதாகவே யுத்தம் முடிந்த பின்பும் இவர்களின் சிந்தனை இருக்கின்றது.
ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்குள் 3500 முஸ்லிம் மக்கள் வாழ முடியும் ஆனால் தமிழ்மக்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்திற்குள் வாழ முடியாது என்று கூறுவதனால் இன்று அங்கு இரு சமூகங்களையும் அசௌகரியம்,மனவேதனைக்குள்ளாக்குகின்ற விடயத்தை தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்டிருக்கின்றன ,குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் காரைதீவு பிரதேச செயலகத்தினுள் 40 வீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினுள் 40 வீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .
எந்தவித பிரிவினைக் கோஷமோ எந்தவித தமிழ், முஸ்லிம் முரண்பாட்டு கோஷமோ இடம்பெறவில்லை.ஆனால் தேர்தல் நெருங்குகின்றபோது கல்முனையில் இவ்வாறான விடயங்களை உரத்து பேசுவதன் ஊடாக, போராடுவதன் ஊடாக இதனை திசைதிருப்ப ,அரசியல் ரீதியாக தமது இலாபத்தை அடைய ஒற்றுமையாக வாழும் கல்முனை தமிழ்,முஸ்லிம் மக்களை குழப்பும் முயற்சி இடம்பெறுகிறது.
இந்த பிர்ச்சினைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைமகளோ முஸ்லிம் எம்.பி.க்களோ காரணமல்ல. அந்த மாவட்டத்த்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலையரசன் எம்.பி. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.. அந்த வழக்கின் இடைக்காலத்தீர்ப்பு கடந்த நவம்பர் 24 ஆம் திகதி வழங்கப்பட்டது. அதில் அவர்கள் வேண்டி நிற்கின்ற பிரதேச செயலக விடயம்,காணி அதிகாரம் போன்றவை நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளன.வழக்கு இன்னும் முடியவில்லை. அவ்வாறான நிலையில் இந்த பிரச்சினையில் அரசு எப்படி தலையிட முடியும்?
வழக்கை தாக்கல் செய்தவர் கலையரசன் எம்.பி. ,அதில் வாதாடியவர் சுமந்திரன் எம்.பி. மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தீர்ப்பு வழங்கி அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில் எப்படி அரசு இதில் தலையிட முடியும் என்பதுதான் எமது கேள்வி .இப்போதும் நேரமிருக்கின்றது வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் இனம் அரசியல் தீர்வை, அதிகாரத்தை வேண்டி நிற்கின்றபோது கல்முனை மாநகரத்தில் வெறுமனே ஒரு வட்டாரத்தில் 3500 தமிழ் மக்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதற்கு இடமளிக்காது தமிழ் தலைமைகள் எவ்வாறு வட ,கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக அதிகாரப்பகிர்வை எட்ட முடியும் என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் இன்றும் கூறுகின்றோம் நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கல்முனையில் தமிழ் மக்களுக்கென ஒரு எல்லையுடனான பிரதேச செயலகம் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM