இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்துக்கு மத்தியில் பலமான நிலையில் இலங்கை

Published By: Vishnu

01 Apr, 2024 | 07:32 PM
image

(நெவில் அன்தனி)

சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பங்களாதேஷுக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 455 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

முதலாவது இன்னிங்கில் 6 துடுப்பாட்ட வீரர்கள் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் 531 ஓட்டங்களைக் குவித்த இலங்கை, பங்களாதேஷை அதன் முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

பங்களாதேஷை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக 190 ஓட்டங்களுக்குள் இலங்கை கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 188 ஓட்டங்களையும் 182 ஓட்டங்களையும் பெற்றது.

அசித்த பெர்னாண்டோ, லிஹரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, ப்ரபாத் ஜயசூரிய ஆகியோர் திறமையாக பந்துவீசி பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 353 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்தை  எதிர்கொண்டது.

பங்களாதேஷின் அறிமுக வீரர் ஹசன் மஹ்முத், தனது 14ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் காலித் அஹ்மத் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி 6 விக்கெட்களைப் பகிர இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

திமுத் கருணாரட்ன (4), குசல் மெண்டிஸ் (2) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

இந் நிலையில் நிஷான் மதுஷ்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியைத் தற்காலிகமாக தடுத்தனர்.

எனினும் நிஷான் மதுஷ்க (34) உட்பட வீரர்கள் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தங்களது விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

தினேஷ் சந்திமால் (9), தனஞ்சய டி சில்வா (1), கமிந்து மெண்டிஸ் (9) ஆகியோர் கவனக்குறைவால் ஆட்டம் இழந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களுடனும் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் காலித் அஹ்மத் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை (01) காலை தனது முதலாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஒரு கட்டத்தில் 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து நல்ல நிலையில் இருந்த பங்களாதேஷ், எஞ்சிய 9 விக்கெட்களை 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஸக்கிர் ஹசன் (54), மொமினுள் ஹக் (33), தய்ஜுல் இஸ்லாம் (22) மஹ்முதுல் ஹசன் ஜோய் (21) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு குமார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் பங்களாதேஷ் அணி அதிசயம் நிகழ்த்தினாலன்றி இலங்கையின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் தடுக்க முடியாமல் போகும்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கிப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 178 (ஸக்கிர் கான் 54, மொமினுள் ஹக் 33, தய்ஜுல் இஸ்லாம் 22, மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, அசித்த பெர்னாண்டோ 34 - 4 விக்., லஹிரு குமார 19 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 65 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 102 - 6 விக். (ஏஞ்சலோ மெத்யூஸ் 39 ஆ.இ., நிஷான் மதுஷ்க 34, ஹசன் மஹ்முத் 51 - 4 விக்., காலித் அஹ்மத் 29 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26
news-image

ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு...

2024-07-19 15:10:11
news-image

இலங்கை வரும் இந்திய ஒரு நாள்...

2024-07-19 12:00:51
news-image

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு கைகொடுத்த கமிந்து,...

2024-07-19 01:54:56
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ்;...

2024-07-19 01:48:33
news-image

அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட்

2024-07-18 16:17:16
news-image

ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட வீரர் பாலியல்...

2024-07-18 16:08:49
news-image

20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய பெண்கள் ...

2024-07-18 15:59:19
news-image

மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ்...

2024-07-18 15:54:48
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே கபடி போட்டி...

2024-07-18 13:28:36
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-18 00:38:34