ரொபட் அன்டனி
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு செயற்பாட்டில் இந்தியா பாரிய மற்றும் வேகமான வளர்ச்சியை பெற்றுவருகின்றது. இந்தியாவின் பொருளாதார உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துவருகின்ற சூழலில் அந்நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியும் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. அதாவது இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள UPI எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக செயற்பாடும் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கை தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்துறையில் விரைந்து முன்னேற்றமடையவேண்டிய நிலையில் இருப்பதுடன் அதற்கான வேலைத்திட்டங்களில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த பின்னணியில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.
சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டது.
மேலும் மாநாட்டில் ஆரம்ப அமர்வும் பின்னர் இரண்டு குழுநிலைக் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. “Accelerating Digital Sri Lanka’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பானது எவ்வாறு ஆட்சியினை இலகுவாக்குகின்றது என்பது தொடர்பாகவும், குறித்த சேவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இரண்டாவதாக “Unlocking the Digital Stack” என்ற தலைப்பிலான குழுநிலை கலந்துரையாடலில் முதல் நிலை தளங்கள், இணைப்பு தொழில்நுட்பம், சந்தை மற்றும் ஆட்சி உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த இரு அமர்வுகளும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் ஆட்சியியல் குறித்த நோக்கினையும் அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளையும் சேர்ந்த இந்திய, இலங்கை நிபுணர்கள் பங்கேற்று விடயங்களை முன்வைத்தனர்.
ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் உரையாற்றினர். அத்துடன் ஆரம்ப அமர்வில் இந்தியா எவ்வாறு டிஜிட்டல் துறையில் வளர்ச்சியடைந்தது? எந்த துறைகளில் இதன் பங்களிப்பு பெறப்படுகின்றது என்பது உள்ளிட்ட முக்கியமான விடயங்களை இந்திய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மையத்தின் இணைத் தலைவர் டாக்டர் பிரமோத் வர்மா விளக்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆய்வு கலந்துரையாடல்களில் டிஜிட்டல் இலங்கையை விரைவுபடுத்தல் மற்றும் டிஜிட்டல் தாமதத்தை திறத்தல் ஆகிய கருப்பொருள்களில் இந்திய, இலங்கை மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
2008 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த இந்தியா அடுத்த சில வருடங்களில் அபாரமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியை அடைய 50 வருடங்கள் செல்லும் என மதிப்பிடப்பட்டது, ஆனால் இந்தியா 10 வருடங்களில் இந்த வளர்ச்சியை அடைந்ததாக கருத்தரங்கில் நிபுணர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக இந்திய மக்களுக்கு ஆதார் அடையாள இலக்கத்தை வழங்கியதிலிருந்து மக்களுக்கான பல்வேறு சேவைகளை வழங்குவதில் டிஜிட்டல் வளர்ச்சி துறை மிக முக்கிய பங்கை வழங்கிவருகிறது.
இந்திய உயர்ஸ்தானிகர் இந்த மாநாட்டில் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி குறித்த பல விடயங்களை வெளிப்படுத்தினார். அதாவது தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை வெளியிடுவதற்கு நாங்கள் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவைப் போன்றே இது இலங்கைக்கான டிஜிட்டல் மெஜிக்கின் ஆரம்பம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று உயர்ஸ்தானிகர் அறிவித்தார்.
மேலும் ‘’ டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு சமூகங்களை மேம்படுத்தும் சேவை வழங்கலை செயல்படுத்துகிறது. உள்ளடக்கத்தை வளர்ப்பது மற்றும் புதுமைகளை இயக்குவதன் மூலம் பொருளாதாரத்தை வளப்படுத்துகிறது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு டிஜிட்டல் மாற்றத்தின் சக்திக்கு இந்தியாவின் சொந்தப் பயணம் சான்றாக நிற்கிறது. இந்தியாவில் கடந்த தசாப்தத்தில் அல்லது அதற்கும் மேலாக இந்த டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு பயணத்தின் திறந்த நெறிமுறைகள் அடிப்படைத் தேவையுடன் தொடங்கப்பட்டன. இதுவே இந்தியாவின் டிஜிட்டல் அடையாள எண் ஆதார் ஆகும். 2016 இல் இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தை உருவாக்கியது. இது டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் அடிப்படைக் கட்டுமானத் தொகுதியாக மாறியது, இங்குதான் மெஜிக் தொடங்கியது. எங்கள் குடிமக்களுக்கு பொது சேவைகள் மற்றும் அரசாங்க சலுகைகளை நேரடியாக அணுகுவதற்கு இது உதவியது. இதுவே இந்தியாவின் டிஜிட்டல் அடையாள எண்ணை உருவாக்கியது.’’ என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறான சேவைகளை இந்தியா டிஜிட்டல் ஊடாக வழங்குகின்றது, அது எவ்வாறு சேவைகளை இலகுபடுத்துகிறது, சரியான பயனாளர்களை கண்டுபிடிப்பதல் எவ்வாறு உதவுகிறது என்பது உள்ளிட்ட பல விடயங்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் குறிப்பிடுகையில்
நுகர்வோருக்கு நலன்புரிக் கொடுப்பனவுகள் முதல் கடன் விண்ணப்பங்கள் மற்றும் முதலீடுகள் வரை அனைத்திற்கும் தடையற்ற அணுகலை வழங்குவதற்காகவும் இது பயன்படுவதுடன் மாநில சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பயன்பாடுகளை உருவாக்கவும் முடியும். இது சமமான, வெளிப்படையான மற்றும் மிகவும் புதுமையான நிலையை உருவாக்குவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வழி செய்கிறது. உலகை வெல்லும் தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான பாதையில் இந்தியா செல்கிறது என்று ஆதார் வடிவமைப்பாளர்கள் கூட கற்பனை செய்யவில்லை.
இன்று ஆதார், 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மாற்றத்தின் அளவு, வேகம் மற்றும் நோக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இது சமூகநல அமைப்புகளை செயல்படுத்தியுள்ளது. 450 மில்லியன் நேரடி பணப் பரிமாற்றங்கள் அல்லது 850 மில்லியனுக்கு உணவுப் பொருட்களை ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு நேரடியாக முழு வெளிப்படைத்தன்மையுடன் மாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு உதவியுள்ளது. வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்துள்ளதுடன் ஊழல் நடைமுறைகளின் சாத்தியக்கூறுகளை வெளியேற்றியுள்ளது. ஒவ்வொரு மாதமும், கிட்டத்தட்ட 10 பில்லியன் பரிவர்த்தனைகள் எங்களின் உடனடி கட்டண முறையான UPI இல் நடைபெறுகின்றன என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இந்த மாநாட்டில் இலங்கை எவ்வாறு இந்த வளர்ச்சியை அடைய முடியும்? இந்தியாவிடம் எவ்வாறான ஒத்துழைப்பை பெறலாம்? ஏன் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கியத்துவமிக்கது என்பது குறித்த பல விடயங்கள் ஆராயப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரையை நிகழ்த்தியதுடன் பல்வேறு முக்கிய விடயங்களை இலங்கை சார்ந்து வெளிப்படுத்தினார். அதாவது டிஜிட்டல் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படை சட்ட தேவைகள் மற்றும் இந்தியாவிடம் இருந்து எவ்வாறு ஒத்துழைப்பை பெறலாம்? எந்தளவு பெறலாம் பாடசாலைகள், பல்கலைகங்களில் எவ்வாறு இந்த டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டுவருதல் என்பன என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
அதாவது ‘’ டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்குவதற்கான சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். துரித டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும். புதிய சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரமாக இலங்கையின் பொருளாதாரத்தை மாற்ற முடியும் .
நாட்டின் பொருளாதார மாற்றத் திட்டத்தை இலகுபடுத்தும் வகையில் புதிய நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். தகவல் தொழில்நுட்ப சபை போன்ற தற்போதுள்ள கட்டமைப்புகளில் இருந்து விலகி, டிஜிட்டல் மாற்றத்திற்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI மையம்) உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது‘’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் விவசாயத்தை மேம்படுத்துதல், வறுமையை குறைத்தல் உள்ளிட்டவற்றில் டிஜிட்டலில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்தும் ஜனாதிபதி முக்கிய விடயங்களை வெளிப்படுத்தினார்.
‘’விவசாயத்தை நவீனமயமாக்குவது, வறுமையை நிவர்த்தி செய்வது மற்றும் கல்வி முறையை சீர்திருத்துவது போன்றவற்றில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்களில் வறுமை 10 வீதத்தை தாண்டாது என்பதை உறுதிப்படுத்துவது எமது நோக்கமாகும். பொருளாதார நோக்கங்களை அடைவதில் வலுவான நிறுவன கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் துல்லியமான தரவுகளை சேகரிப்பது முக்கியமானது. இந்தத் தரவுகள் ஊடாக கல்வி, சுகாதாரம் மற்றும் வருமான மட்டங்கள் போன்ற பல்வேறு பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை அளிக்க வேண்டும் ‘’ என்றும் ஜனாதிபதி கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.
அந்தவகையில் இலங்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதன் அவசியம் மற்றும் அதன் சவால்கள் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்த கருத்தரங்கில் ஆராயப்பட்டது. ஏற்கனவே இந்திய உயர்ஸ்தானிகராலயமும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து இந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த விடயத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்க சேவை மற்றும் ஏனைய செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும்போது ஊழல் செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பங்கள் விலகிச்செல்லும் தன்மை காணப்படுகின்றது. காரணம் அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படையாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இடம்பெறும்போது ஊழல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் அற்றுப்போகின்றது. அத்துடன் நேர விரயமும் தவிர்க்கப்படுகின்றது.
இந்த கருத்தரங்களில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டிஜிட்டல் மய வளர்ச்சியில் நாம் இன்னும் பின்னணியில் இருக்கின்றோம். மந்தகதியிலும் இருக்கின்றோம். விரைவான முன்னேற்றம் எமக்கு அவசியமாகின்றது. இந்தியாவின் மாதிரியை நான் ஆதரிக்கின்றேன். அமெரிக்கா, மேலைத்தேய நாடுகளை விட இந்தியாவின் முறை சிறப்பாக இருக்கிறது. இதனை முன்னெடுப்பதில் ஒருநாள்கூட காத்திருக்கக்கூடாது. இந்தியா, இதில் பெற்றிருக்கின்ற வளர்ச்சியிலிருந்து நாம் பாடங்களை கற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
டிஜிட்டல் வளர்ச்சியில் இந்தியா அபார முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. குறிப்பாக தற்போது இந்தியாவில் சிறியளவிலான வர்த்தக நிலையங்களில் கூட கி.யூ. ஆர். முறையிலேயே கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் இந்தியா என்ற எண்ணக்கரு சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. உண்மையில் அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கை வகித்திருக்கின்றது. அதேபோன்று இலங்கையும் டிஜிட்டல் பரிமாற்றத்தை மிக விரைவாக உள்வாங்கவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் செயற்பாட்டில் எரிபொருள் விநியோகத்துக்காக செயற்படுத்தப்பட்ட கி.யூ.ஆர். முறை முக்கிய பங்கை வகித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் இலங்கைக்கு பல சவால்கள் காணப்பட்டன. எப்படியிருப்பினும் டிஜிட்டல் வளர்ச்சியில் டிஜிட்டல் மய உள்வாங்களில் இந்தியாவிடமிருந்து பாடங்களை கற்று இலங்கை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதில் டிஜிட்டல்மய செயற்பாடுகளை மேற்கொள்வது முக்கியமாகும்.
பல நாடுகள் இன்று நாணய பயன்பாடு இல்லாத டிஜிட்டல் மயத்துக்குள் சென்றுவிட்டன. எனவே இலங்கையும் டிஜிட்டல் செயற்பாடுகளை உள்வாங்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது. அதற்கு இந்த டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு ஒரு முக்கிய கதவுகளை திறக்கும் செயற்பாடாக அமைந்திருக்கின்றது. இதிலிருந்து முக்கியமான விடயங்களை இலங்கை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM