துயர் களையும் தீப பரிகார வழிபாடு

Published By: Digital Desk 7

01 Apr, 2024 | 05:32 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களின் சக்திகளுக்கு ஏற்ற வகையில் உழைத்துக் கொண்டிருந்தாலும் பற்றாக்குறை என்பது நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.

அவை வளர்ச்சி அடைந்து பெரும் சுமையாக மாறி மனதை அழுத்தும் போது, எம்முடைய உழைப்பின் வேகம் குறைவதுடன் விரக்தியும் இணைந்து விடுவதால்... மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் சோர்வடைகிறோம். இதனால் மனதில் இருக்க வேண்டிய உற்சாகம் குறைந்து, சகிப்புத்தன்மை குறைந்து, மற்றவர்களை வெறுக்க தொடங்கி, இறுதியில் நம்மை நாமே சுயவிரக்கம் கொண்டு வெறுக்க தொடங்கி விடுகிறோம். இத்தகைய நிலையை வேரறுக்க எம்முடைய முன்னோர்கள் தீபமேற்றி வழிபட வேண்டிய பரிகாரத்தை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள்.‌

இறைவனுக்கு தீபமேற்றி வழிபடுவது என்பது எளிமையான பரிகாரம் மட்டுமல்ல வலிமையான பரிகாரமும் கூட. இதனால் உங்களுக்கு கிடைக்கும் பலன் கணக்கில் அடங்காதது. உங்களுக்கு கடன்கள் அதிகம் இருந்தால் அதிலிருந்து மீள வேண்டும் என விரும்பினால் அல்லது அதற்கு ஒரு வழிகாட்டல் வேண்டும் என நினைத்தால் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஐந்து விளக்குகளை ஏற்றி வழிபடத் தொடங்குங்கள். உடனே எம்மில் சிலர் நல்லெண்ணெய் விளக்கா? அல்லது பசுநெய் விளக்கா..?  என கேட்பர். இங்கு ஐந்து என்ற எண்ணிக்கை தான் முக்கியமே தவிர... நல்லெண்ணெய் என்பதோ சுத்தமான பசு நெய் என்பதோ முக்கியமல்ல..அது உங்களது விருப்பம் மற்றும் உங்களது பொருளாதார சக்தியைப் பொருத்தது.

செய்து கொண்டிருந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது அல்லது எதிர்பார்த்த லாபம் என்பது கிடைக்கவில்லை அல்லது வந்து கொண்டிருந்த குறைவான லாபமும் வெகுவாக குறைந்து விட்டது... இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்பவராக நீங்கள் இருந்தால்.. அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று 11 என்ற எண்ணிக்கையிலான தீபங்களை ஏற்றி வழிபடுங்கள். இதனை நாளாந்தமாகவோ வாரம் ஒரு முறையாகவோ அல்லது மாதம் ஒரு முறையாகவோ நீங்கள் தொடரும்போது உங்களது கஷ்டம் விலகி, இஷ்டம் போல் லாபம் வருவதை அனுபவத்தில் உணர்வீர்கள்.

உங்களது குடும்பத்தில் உள்ள மூத்த வாரிசுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று மூல நட்சத்திரம் தினத்தன்றோ அல்லது வியாழக்கிழமைகளிலோ ஆஞ்சநேயர் பகவானுக்கு ரெண்டு அல்லது ஐந்து ஆகிய எண்ணிக்கைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுகம் கிடைக்கும்.  உங்களது குடும்பத்தில் உள்ள இரண்டாவது பிள்ளைக்கு உடல்நிலை சுகவீனம் என்றால், அருகில் உள்ள உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயத்திற்கு சென்று ஐந்து விளக்குகளை ஏற்றி வழிபட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

உங்களுடைய பெற்றோர் அதாவது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அருகில் உள்ள மலை மீது இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று ஐந்து நெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும். உங்களுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அருகில் உள்ள ஆலயத்திற்கு மாலை ஆறு மணிக்கு பிறகு சென்று ஐந்து விளக்குகளை ஏற்றி வழிபட்டால் அவர்களின் உடல்நலம் தேறும்.

குடும்பத்தை வழி நடத்தும் உங்களுக்கு ஏதேனும் சுகவீனம் ஏற்பட்டால்.. பிரதோஷ வழிபாட்டை உறுதியாக பற்றி கொள்ளுங்கள். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து ஐந்து விளக்குகளை ஏற்றி வந்தால் உங்களது ஆரோக்கியம் மேம்படுவதை அனுபவத்தில் உணரலாம்.

செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு -கேது தோஷம் என பல்வேறு தோஷங்களால் உங்களது திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டிருந்தால் அருகிலுள்ள ஆலயத்திற்கு சென்று 21 விளக்குகளை ஏற்றி வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல வரன் கூடி திருமணம் நடப்பதை அனுபவத்தில் காணலாம்.

உடனே எம்மில் சிலர் எங்களது குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடைபெறவில்லை. விபத்து, சுகவீனம், அசௌகரியம், மரணம்... என அசுப நிகழ்வுகள்தான் தொடர்ந்து நடைபெறுகிறது. வணிகத்தின் மூலமாக வருவாயும் குறைந்து குடும்பம் தள்ளாடுகிறது. குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் மகிழ்ச்சி என்பதே இல்லை. சோகமே உருவாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் பாரிய தடை ஏற்பட்டு, சோர்வும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது என கவலை கொண்டவர்களாக இருந்தால் .... அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று,  54 விளக்குகளை ஏற்றி, உங்களது இஷ்ட தெய்வத்தை மனம் உருக வழிபடத் தொடங்குங்கள். மாற்றம் என்பது ஏற்படுவதை காணலாம்.

எப்போது ஆலயத்திற்கு சென்றாலும் இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய எண்ணிக்கையில் அகல் விளக்கு ஏற்றுவதை வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பொருளாதார ரீதியில் சற்று வசதியானவராக இருந்தால் உங்களது வயது என்ன என்பதனை தெரிந்து கொண்டு அதைவிட கூடுதலாக ஒரு விளக்கினை ஏற்றி வழிபடத் தொடங்கினால் வெற்றி மீது வெற்றி வந்து சேர்வதை காணலாம் உதாரணத்திற்கு உங்களது வயது 35 என்றால், நீங்கள் 36 என்ற எண்ணிக்கையில் தீபத்தை ஏற்றி வழிபடத் தொடங்கினால் உங்களது காரியம் வெற்றி அடைவதை காண்பீர்கள்.

தீபங்கள் அக்னியின் அவதாரம். அக்னி பகவான் இந்த பிரபஞ்சத்தில் பரவியிருக்கும் ஐந்து பிரபஞ்ச சக்திகளில் முதன்மையானது. நீங்கள் தீபத்தை ஏற்றி இறைவனை மனம் உருக பிரார்த்தித்தால் வெற்றி பெறுவீர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right