நடப்பு சம்பியன் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது டெல்ஹி; தோனியின் கடைசி நேர அதிரடி பலனளிக்கவில்லை

01 Apr, 2024 | 06:10 AM
image

(நெவில் அன்தனி)

விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 13ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 20 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டது.

இப் போட்டியில் சகலதுறைகளிலும் சென்னை சுப்பர் கிங்ஸை விஞ்சிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இந்த வருடம் முதலாவது வெற்றியை  சுவைத்தது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் தோனி அதிரடியில் இறங்கிய போதிலும் அதனால் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு பலன் கிட்டவில்லை.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சார்பாக 6 வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட 7 பந்துவீச்சாளர்கள் மிகவும் சாதுரியமாக பந்துவீசி டெல்ஹியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ், முன்வரிசை வீரர்களின் அதிரடிகளின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது.

ப்ரித்வி ஷா, டேவிட் வோர்னர் ஆகிய இருவரும் அபாரமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 57 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததுடன் மதீஷ பத்திரண ஒரே ஓவரில் 2 விக்கெட்களைக் கைப்பற்றி சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சிறு ஆறுதலைக் கொடுத்தார்.

35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52

ஓட்டங்களைப் பெற்ற டேவிட் வோர்னர் முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 103 ஓட்டங்களாக இருந்தபோது ப்ரித்வி ஷா ஆட்டம் இழந்தார்.

27 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட ப்ரித்வி ஷா 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

மிச்செல் மார்ஷ் (18), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (0) ஆகிய இருவரும் மதீஷ பத்திரணவின் யோக்கர் பந்துகளில் ஒரே ஓவரில் களம் விட்டகன்றனர்.

மறுபக்கத்தில் ரிஷாப் பான்ட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 51 ஓட்டங்களைப் பெற்று பத்திரணவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

அக்சார் பட்டேல் 7 ஓட்டங்களுடனும் அபிஷேக் பொரெல் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

சென்னை சுப்பர் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

அதிரடி ஆரம்ப வீரர்களான அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் (1), ரச்சின் ரவிந்த்ரா (2) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களுக்குள் கலீல் அஹ்மதின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். (7 - 2 விக்.)

இந் நிலையில் அஜின்கியா ரஹானேயும் டெரில் மிச்செலும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

டெரில் மிச்செல் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 102 ஓட்டங்களாக இருந்தபோது அஜின்கியா ரஹானே (45), சமீர் ரிஸ்வி (0) ஆகிய இருவரின் விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் முக்கேஷ் குமார் கைப்பற்றி டெல்ஹி கெப்பிட்டல்ஸை பலமான நிலையில் இட்டார்.

இதன் காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸின் ஓட்ட வேகம் குறைந்துகொண்டுபோனது.

கடைசி 5 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு மேலும் 79 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

16ஆவது ஓவரை வீசிய அன்ரிச் நோக்யா ஒரு வைட் உட்பட 7 ஓற்றைகளைக் கொடுத்து சென்னைக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.

அடுத்த ஓவரில் ஷிவம் டுபே 18 ஓட்டங்களுடன் முக்கேஷ் குமாரின் பந்துவீச்சில் களம் விட்டு வெளியேறினார்.

இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக்கில் முதல் தடவையாக துடுப்பெடுத்தாடிய 42 வயதான எம்.எஸ். தோனி வழமையான அதிரடி ஆட்டத்தில் இறங்கினார்.

அந்த ஓவரில் 14 ஓட்டங்கள் பெறப்பட்டது.

எனினும் 18ஆவது ஓவரை கலீல் அஹ்மத் விசியதுடன் அந்த ஓவரில் 3 வைட்களுடன் மேலும் 9 ஓட்டங்கள் பெறப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் (12 பந்துகள்) சென்னையின் வெற்றிக்கு 46 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

முக்கேஷ் குமார் அந்த ஓவரை வைட்டுடன் ஆரம்பித்தார். ஆனால் தோனி 3 பந்துகளை வீணடிக்க அந்த ஓவரில் மேலும் 4 ஓட்டங்களே பெறப்பட்டது.

போட்டியில் வெற்றிபெறுவதற்கு சென்னைக்கு 41 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் டெல்ஹியின் வெற்றி உறுதியாயிற்று.

அன்ரிச் நோக்யாவின் கடைசி ஓவரில் தோனி 4, 6, 0, 4, 0, 6 என 20 ஓட்டங்களை விளாசி இரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்திய போதிலும் டெல்ஹி கெப்பிட்டல் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தோனி 16 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ரவிந்த்ர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் முக்கேஷ் குமார் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29
news-image

வெற்றியைக் குறிவைத்து றக்பி அனுசரணையாளர்களை கௌரவித்த...

2024-05-25 18:27:17
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம்

2024-05-25 15:26:19
news-image

ரி20 உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில்...

2024-05-25 14:18:01