(எம்.மனோசித்ரா)
பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையை 16இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான தண்டனை சட்டக் கோவை திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது இந்த திருத்தத்தை அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (31) பதுளையில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை, அடிப்படை உரிமைகளில் உள்ளடக்குவதற்கான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கின்றேன். 'நவீன பெண்கள்' என்பதே எமது இலக்காகும். நவீன பெண்களை நாட்டில் உருவாக்குவதற்காக மக்கள் சக்தி பெண்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
தொழிற்துறையில் பெண்களின் பங்கேற்பு 33 சதவீதமாவே காணப்படுகிறது. அதனை நாம் 40 சதவீதமாக உயர்த்துவோம். அரச துறைகளில் மாத்திரமின்றி தனியார் துறைகளிலும் சம்பளத்துடனான பிரசவ கால விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாடுபடுவோம். பெண்கள் வீடுகளில் ஆரம்பித்து, போக்குவரத்து, வேலைத்தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகின்றனர்.
இவற்றிலிருந்து பெண்களை முழுமையாக பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 17 910 ஆரம்ப பாடசாலைகள் இலங்கையில் உள்ளன. இவற்றில் 21 557 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதற்கமைய ஆரம்ப மாணவர்களிலுள்ள மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை அரச கொள்கையாக நாம் நடைமுறைப்படுத்துவோம். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் வீட்டுப்பணிப்பெண்ணாக மாத்திரமே எமது பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலைமையை மாற்றி தாதி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை துரிதப்படுத்துவோம். இலங்கையிலுள்ள 16 இலட்சம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கென விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். நுண்கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை அந்த நெருக்கடிகளிலிருந்து முற்றாக பாதுகாப்போம். பெருந்தோட்டத் துறைகளிலுள்ள பெண்களை 'பெருந்தோட்ட தொழிலாளிகள்' என்று அடையாளப்படுத்தாமல் 'மேல்நாட்டு பெண்கள் சமூகம்' என்று அடையாளப்படுத்துவோம்.
அரசாங்கம் செய்ய முனைகின்ற மிக முட்டாள் தனமான செயல் ஒன்று தொடர்பில் தற்போது வெளிப்படுத்தவுள்ளேன். அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள தண்டனை சட்டக் கோவை திருத்தத்தில், குற்றங்களை தடுப்பதற்கன்றி அவற்றை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது. பாலியல் உறவுகள் தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தும் வயதை, 16 இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இதற்கான விருப்பத்தைத் தெரிவிக்க முடியும். இன்று நாடளாவிய ரீதியில் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், சீண்டல்கள் வானளவு உயர்வடைந்துள்ளன. இவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் பதில் யாதெனில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையைக் குறைப்பதாகும். பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது?
அது மாத்திரமல்ல. 22 வயதுக்குட்பட்ட ஆணொருவர் ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது. இது சரியா என்று நான் கேட்கின்றேன்? எம் நாட்டு பெண்களை நாம் இவ்வாறு தான் பார்ப்பதா? 363ஆம் உறுப்புரைக்கமைய பெண்கள் துஷ்பிரயோகம் என்ற விடயத்தில் ஆண்கள் துஷ்பிரயோகமும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான உறுப்புரையை வலுவிழக்கச் செய்வதற்காகவும் அர்த்தமற்றதாக்குவதற்கும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் துஷ்பிரயோகத்தைப் போன்றே ஆண்கள் துஷ்பிரயோகத்துக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் அதற்காக வெ வ்வேறாக உறுப்புரைகள் தயாரிக்கப்பட வேண்டும். தற்போது 365 பீ உறுப்புரையின் ஊடாக, இதற்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் அதனை செய்யாமல், தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக பெண்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு எமது கடும் எதிர்ப்பினை வெளியிடுவோம். பாராளுமன்றம் கூடும் போது, மனசாட்சி இருந்தால் உடனடியாக இந்த திருத்தத்தினை மீளப்பெறுங்கள். அவ்வாறில்லை எனில் அதனை மீளப்பெறும் வரை பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இதற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM