90களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகை, 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகை யார்? என்பதை கீழே பார்ப்போம்.

பிராம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘2.0’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கும் ரஜினி அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். “கபாலி' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி - பா.ரஞ்ஜித் இணையும்  பெயரிடப்படாத படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தலைப்பில் தயாரிக்க உள்ளார். 

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவருடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக செய்திகள்  வெளியாகின. அதனை மறுத்த இயக்குநர் ரஞ்சித், மாறாக படத்திற்கான நாயகி குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக  தெரிவித்திருந்தார். 

2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகைகளே நடித்திருந்தனர். இந்நிலையில், 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க உள்ளதாக  கூறப்படுகிறது. 

இதற்கு முன்பாக ரஜினி - குஷ்பு கூட்டணி இணைந்து அண்ணாமலை', மன்னன்', பாண்டியன்', நாட்டுக்கு ஒரு நல்லவன்'  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதியதாக தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இரண்டாவது பாதியில் ஆரம்பமாகிறது.