செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும் 'இரவின் கண்கள்'

Published By: Digital Desk 7

27 Mar, 2024 | 09:28 PM
image

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புதிதாக அறிமுகமாகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி 'இரவின் கண்கள்' எனும் பெயரில் திரைப்படமொன்று தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது. 

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இரவின் கண்கள்' எனும் திரைப்படத்தில் பொப் சுரேஷ், டாலி ஐஸ்வர்யா, கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கீதா கரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சார்லஸ் தனா இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம்.கே. என்டர்டெய்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரித்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு, நடிகர் பிரஜின் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், " தகவல் தொழில்நுட்ப துறையில் நாயகன் பணியாற்றுகிறான். அவன் IRIS எனும் பெயரிடப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவியினை உடன் வைத்திருக்கிறான். இந்த கருவிக்கும் நாயகனுக்கும் இடையேயான நட்பை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பெங்களூரு நகரத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை களம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு திருமணமாகி பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய நாளாந்த கடமைகளை ஐரிஸ் எனும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவியின் துணையுடன் திறமையாக நிறைவேற்றுகிறார். எதிர்பாராத விபத்து ஒன்று நடைபெறுகிறது. அதன் பிறகு அந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் நாயகன் சந்திக்கும் சிக்கல் என்ன? அதிலிருந்து நாயகன் எவ்வாறு தப்பிக்கிறார்? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை. ரசிகர்களுக்கு சுவாராசியம் குறையாமல் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறோம். வித்தியாசமான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியாக நம்புகிறோம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right