பாரதிராஜாவிற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்க வேண்டும் - இந்திய அரசிற்கு இயக்குநர் ஆர். வி. உதயகுமார் கோரிக்கை

Published By: Digital Desk 7

25 Mar, 2024 | 09:20 PM
image

''கலைத்துறையில் ஒப்பற்ற சேவையை ஆற்றியதற்காக இந்திய அரசு ஆண்டுதோறும் தாதா சாஹேப் பால்கே விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விருது சில தருணங்களில் படைப்பாளி மறைந்த பிறகு இந்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் திசையை மாற்றியமைத்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நம்முடன் இருக்கும் போதே அவருக்கு திரை துறையின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். இதனை மத்திய அரசிற்கு கோரிக்கையாக முன் வைக்கிறேன்'' என இயக்குரும், நடிகரும், பாடலாசிரியரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவருமான ஆர். வி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி. வி. சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கள்வன்' திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, ஜீ. வி. பிரகாஷ் குமார், இவானா, ஞானசம்பந்தம், தீனா, வினோத் முன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் ரேவா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமார், பேரரசு, வெற்றிமாறன், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியேஷன் சிவா, தனஞ்செயன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், '' காட்டை மையப்படுத்தி திரைப்படம் உருவாக்கினால் அது நிச்சயமாக வெற்றி பெறும். இப்படத்தில் நடித்திருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா சினிமா துறையின் கம்பன். அவருக்கு உலகமே வியக்கும் அளவிற்கு பாராட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இந்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறேன். கலை துறையில் ஒப்பற்ற சேவையாற்றியதற்காக வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை பாரதிராஜாவிற்கு வழங்க வேண்டும். இந்த விருதை சிலருக்கு காலம் தாழ்த்தி வழங்குகிறார்கள். எம்முடன் இருக்கும்போதே பாரதிராஜாவிற்கு அத்தகைய விருதினை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு பேசுகையில், '' இந்தப்  படத்தின் தாமதத்திற்கு வனவிலங்குகளை வைத்து படம் எடுப்பதால்... அதற்கான முறையான அனுமதியை பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. உச்சக் காட்சியில் நடிப்பதற்கு முன் படத்தில் நடித்த யானைக்கு மதம் பிடித்து விட்டது. இதனால் நடிக்க வேண்டிய ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் பயந்துவிட்டனர். இதற்காக சிறிது காலம் காத்திருந்தோம்.    அதனால்தான் இந்த திரைப்படம் அறிவிப்பு வெளியான பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகிறது. இருப்பினும் தரம் குறையாமல் மக்களின் ரசனைக்கு ஏற்ப 'கள்வன்' தயாராகி இருக்கிறது. ஏப்ரல் நான்காம் திகதியன்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right