(நெவில் அன்தனி)
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ், 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஏழாவது அல்லது அதைவிட கீழ் வரிசை இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி ஒரே டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமைக்குரிய சாதனையையே கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார்.
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (25) நிறைவுக்கு வந்து முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்காற்றிய ஐவரில் கமிந்து மெண்டிஸும் ஒருவராவார்.
போட்டியின் முதலாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (22) இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று திணறிக்கொண்டிருந்தபோது அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் 7ஆம் இலக்க வீரராக இணைந்த கமிந்து மெண்டிஸ், 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
அவர்கள் இருவரும் தலா 102 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தனர். இதன் பலனாக இலங்கை 280 ஓட்டங்ளைப் பெற்றது.
பங்ளாதேஷை 188 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பின்னர் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
அன்றைய தினம் 5ஆவது விக்கெட் வீழ்ந்தபோது தனஞ்சய டி சில்வாவுடன் இராகாப்பாளராக விஷ்வா பெர்னாண்டோ இணைந்து அன்றைய நாளை மேலதிக விக்கெட் இழப்பின்றி முடிவுக்கு கொண்டுவந்தார்.
ஆனால், போட்டியின் மூன்றாம் நாள் காலை விஷ்வா பெர்னாண்டோ ஆட்டம் இழந்ததும் 8ஆம் இலக்க வீரராக களம் நுழைந்த கமிந்து மெண்டிஸ், மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை மீட்டெடுத்தார்.
இதனிடையே தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவருடன் 7ஆவது விக்கெட்டில் 173 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ் சதம் குவித்ததன் மூலம் கீழ் வரிசையில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற அற்புதமான சாதனையை நிலைநாட்டினார்.
இதேவேளை, இலங்கை சார்பாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது அணித் தலைவர் என்ற அரிய சாதனையை தனஞ்சய டி சில்வா நிலைநாட்டினார்.
அதேவேளை தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது இலங்கை ஜோடி என்ற மற்றொரு சாதனையை நிலைநாட்டினர்.
அவர்களது சதங்களின் உதவியுடன் 2ஆவது இன்னிங்ஸில் இலங்கை 418 ஓட்டங்களைக் குவித்தது.
டெஸ்ட் போட்டி ஒன்றில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த மூன்றாவது ஜோடி
கடந்த 50 வருடங்களில் டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் 1974இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் செப்பெல் சகோதரர்களான இயன் (145, 121) மற்றும் க்றெக் (247, 133) ஆகியோரே முதன் முதலில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது ஜோடி என்ற சாதனையை நிலைநாட்டினர்.
40 வருடங்கள் கழித்து அவுஸ்திரேலியாவுக்கு எதராக நடுநிலையான அபு தாபியில் 2014இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தானின் அஸார் அலி (109, 100 ஆ.இ.), மிஸ்பா உல் ஹக் (101, 101 ஆ.இ.) ஆகிய இருவரும் சதங்கள் குவித்திருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து அந்த சாதனைக்கான ஏடுகளில் இப்போது தனஞ்சய டி சில்வாவும், கமிந்து மெண்டிஸும் இணைந்துகொண்டுள்ளனர்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் காலியில் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் அதன் பின்னர் இப்போதுதான் மீளழைக்கப்பட்டுள்ளார்.
தனது மீள்வருகையில் ஒரே போட்டியில் முதலிரண்டு சதங்களைக் குவித்தன் மூலம் கமிந்து மெண்டிஸ் பெரும் பாராட்டைப் பெற்றார்.
பங்களாதேஷ் 2ஆவது இன்னிங்ஸில் 182 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM