அணு ஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தும், வடகொரியாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டுள்ளமையானது கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தென் கொரியாவின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து வடகொரியா தனது ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. 

தென் சீனக்கடல் விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்க மற்றும் சீனாவிடையே ஏற்பட்ட முறுகல் நிலையை தாண்டி, வடகொரியாவிற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இரு நாடுகளும் ஒன்றிணைவதாக அறிவித்துள்ளன. 

வடகொரியாவின் ஆயுத பரிசோதனைகளை நிறுத்தக்கோரி ஐ.நா பொருளாதார தடைகளை விதித்தபோதும், அந்நாடு அதனைக் கண்டுகொள்ளவில்லை. அத்தோடு வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் பொருளாதாரத் தடையை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்குட்பட்டு வந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ரெக்ஸ் டில்லர்சன், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்யை சந்தித்து மேற்கொண்ட கலந்துரையாடல்களில், வடகொரியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு அமெரிக்காவின் அழுத்தத்தை டில்லர்சன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின்போது, அணு ஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி அச்சுறுத்தும் வடகொரியாவின் செயற்பாடுகளை தடுப்பதற்கும், கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை அபாய எல்லையை தாண்டியுள்ளதால் சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.