(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பையும்,பாராளுமன்ற நிலையியல் கட்டளையையும் வேண்டுமென்றே மீறியுள்ளார்.அத்துடன் வெலிகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் செயற்படுகிறார்.இவரது சுயாதீனம் மற்றும் நடுநிலைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சபாநாயகர் செயற்பட்ட விதம்,பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு வாக்களித்தமை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட போது சட்டமூலம் விரிவாக ஆராயப்பட்டது. சட்டமூலத்தில் 57 சரத்துக்களில் 31 சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரண் என்று வியாக்கியானம் வழங்கியது.
சட்டமூலத்தின் 13,17,20,21,22,31 உள்ளிட்ட பெரும்பாலான சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரண் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.இந்த ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மை அவசியம்,அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஒருசில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மூன்றாவது வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் ஏதும் பின்பற்றப்படவில்லை.சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை.திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிடப்பட்ட சரத்துக்கள் திருத்தம் செய்யப்படாமல் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் உட்பட உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை சபாநாயகர் கவனத்திற் கொள்ளவில்லை.முறையற்ற வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் சபாநாயகர் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்.தேசிய அரசு பேரவையில் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக நால்வரும்,எதிராக இருவரும் வாக்களித்துள்ளனர்.இரு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை. வாக்களிப்பில் சமநிலை காணப்படும் நிலையில் மாத்திரமே சபாநாயகர் வாக்களிக்க முடியும்.
அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் சபாநாயகர் ஜனாதிபதிக்கு ' புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு நால்வர் ஆதரவாகவும்,இருவர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.இருவர் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
ஆகவே வாக்களிப்பில் கலந்துக் கொள்ளாதவர்களின் வாக்கினை ' முன்மொழிவுக்கு எதிர்ப்பு' என்று கருதி எனது வாக்கினை முன்மொழிவுக்கு ஆதரவாக அளிக்கிறேன் ' என்று எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து புதிய பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.இந்த விடயத்தில் ஜனாதிபதியும் கை பொம்மையாகவே செயற்பட்டுள்ளார்.
சபாநாயகர் அரசியலமைப்புக்கும்,பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கும் முரணாகவே செயற்பட்டுள்ளார்.இவர் வெலிகம பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும் செயற்படுகிறார்.சபாநாயகர் என்பவர் சுயாதீனமாக நடுநிலையாக செயற்பட வேண்டும்.ஆனால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM