நாகநாதர்
மலையக சமூகம் தொடர்பில் அக்கறை கொள்ளவேண்டிய அம்சங்களில் அழிந்து வரும் கலைகள் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. இப்போதெல்லாம் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காமன் கூத்து, பொன்னர் சங்கர், அருச்சுணன் தவசு போன்ற கூத்துக் கலைகள் அருகி வருகின்றன. தோட்டங்களிலிருந்து பெருமளவான இளைஞர் யுவதிகள் இன்று நகரங்களை நோக்கி சென்றுவிட்டனர்.
தோட்டப் பகுதிகளில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று ஆசிரியர், அதிபர், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் ஆனவர்கள் இவ்வாறு நகரங்களை நோக்கி சென்றதில் தவறில்லை. ஆனால் தமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை பேணி பாதுகாப்பதில் இவர்களுக்கு இப்போது நேரமில்லாது போய்விட்டது.
காமன் கூத்து போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெறும் காலப்பகுதிகளில் இவர்களை அதிதிகளாக அழைக்கச் சென்றாலும் நேரமில்லை என முகத்தை திருப்பிக்கொள்கின்றனர். ஒரு சிலர் விதிவிலக்காக அழைக்காமலேயே வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பல வருடங்களாக கலைகளை வளர்ப்பதில் பாடுபட்ட மூத்த கலைஞர்கள் எந்தவித பொருளாதார வசதிகளும் இன்றி தமது இறுதி காலத்தை கூட ஒரு கலைஞனாக கழிக்காமல் மண்ணாக போய்விட்டனர். அவர்களிடமிருந்து ஓரளவுக்கு வித்தைகள் கற்றவர்கள் இன்று இந்த கூத்து கலைகளை பாதுகாத்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கும் இதே நிலைமைகள் தான். காமன் கூத்து உட்பட பொன்னர் சங்கர் மற்றும் அர்ச்சுணன் தவசு போன்ற கலைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அதற்குரிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கு நிதி உதவிகள் செய்ய எவருமில்லாத நிலை தோன்றியுள்ளது. சில இடங்களில் தோட்ட நிர்வாகங்கள் உதவி வருவதாகக் கூறப்பட்டாலும் எல்லா இடங்களிலும் அந்நிலை இல்லை.
சில தோட்டங்களில் மார்கழி மாத பஜனைக்கு இராமர் பாடல்கள் பாடிச்செல்லும் இளைஞர்களிடம் பல வருடங்களாக இருப்பது ஒரே தபேலா வாத்தியம் தான். காமன் கூத்து பொன்னர் சங்கர் போன்ற கூத்து கலைகளுக்கு தப்பு வாத்தியம் பிரதான இடத்தை வகிக்கின்றது. ஆனால், பல தோட்டங்களில் திருவிழாவுக்கும், கூத்துக்கும், மரண வீடுகளுக்கும் இசைப்பதற்கு இவற்றையே பயன்படுத்துகின்றனர்.
மலையகம் இருநூறு நிகழ்வுகளை நடத்தியவர்கள் தோட்டங்கள் தோறும் ஊடுறுவி பாரம்பரிய கலைகளைப் பற்றி ஆய்வு செய்கிறேன் என அரைகுறையாக அவற்றை அறிந்து சில நிகழ்வுகளில் மேடையேற்றினார்கள். உண்மையான கலைஞர்களை எத்தனை பேர் சென்று அவர்களுக்கு வாய்ப்பளித்தார்கள் என்பது தெரியவில்லை.
மேலும், மலையகம் இருநூறு நிகழ்வுகளில் மலையக பாரம்பரிய கலைகள் பற்றிய எந்த நிகழ்வுகளும் தனித்துவமாக முன்னெடுக்கப்படவில்லை. அந்த கலைஞர்களை எவரும் பாராட்டவில்லை, கெளரவிக்கவில்லை.
சமூகத்தை பாதுகாக்கத் தெரியாதவர்களுக்கு கலைகளை பாதுகாப்பது பற்றி என்ன கவலை? இன்று பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறான கலைகளை வளர்த்தெடுப்பதற்கு எந்த வித திட்டங்களும் இல்லையெனும்போது அதை எவ்வாறு பாதுகாப்பது? இதன் காரணமாகவே ரதி – மன்மதன், பொன்னர் சங்கர் அனைவரும் இன்று கூத்து நடத்துவதற்கு நகரங்களுக்கு வருகை தருகின்றனர்.
கூட்டமாக வருகை தந்து கடைகளின் முன்பாக ஆடுகின்றனர். சில வர்த்தகர்கள் வழங்கும் நிதி அல்லது சிறியளவான பணத்தை வைத்துக்கொண்டு இந்த கலைகளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை தவிர்க்க முடியாது.
கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாக்க ஒரு பொறி முறை அவசியம். கலைகளை வளர்த்தெடுக்க, மேடையேற்ற இன்று தோட்டங்களில் பிரத்தியேக மண்டபங்கள் இல்லை. பல பெருந்தோட்டங்களின் ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கலாசார மண்டபங்களை சிலர் குடியிருப்புகளாக பாவிக்கின்றனர். அதற்கு அரசியல்வாதிகளே ஆதரவாக உள்ளனர். ஏதாவதொரு கலை பற்றிய அறிவும் தேர்ச்சியும் உள்ள ஒரு அரசியல்வாதியை இப்போது காணமுடிவதில்லை.
பின்னர் எப்படி அவர்கள் கலைகளை பாதுகாப்பர்? கலைகள் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிலர் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மூத்த கலைஞர்களை கிண்டலடிப்பது, அவர்களிடம் ஆர்வமாக வரும் இளைஞர்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதென பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். சில தோட்டத் தலைவர்களும் இதை கண்டுகொள்வதில்லை.
தோட்ட ஆலயங்களுக்கு கூரைத்தகடுகள், பாத்திர பண்டங்களை கேட்டு வாங்கும் தோட்டக் கமிட்டி தலைவர்கள் தமது தோட்ட கலைஞர்களுக்கு தாள வாத்தியங்கள் அல்லது அது தொடர்பான உபகரணங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.
அப்படி கிடைத்தாலும் அதை தமது வீட்டுக்கு கொண்டு செல்பவர்களாகவே உள்ளனர். பல தோட்டங்களில் வாழ்ந்து வரும் கூத்து கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது. அவர்கள் கலைகளுக்காகவே தம்மை அர்ப்பணித்தவர்களாக உள்ளனர். பல்கலைக்கழகங்களிலிருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிலிருந்தும் ஆய்வுகளுக்காக வருபவர்கள் இவர்களிடமிருந்து ஏகப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சில நூறு ரூபாய்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். பிறகு இந்த அந்த பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.
பொருளாதார நிலைமைகள் காரணமாகவே இன்று மார்கழி பஜனை கோஷ்டியினரும் காமன் கூத்து கலைஞர் கூட்டமும் உண்டியல்களை குலுக்கிக்கொண்டு நகரங்களுக்குச் செல்கின்றனர்.
தோட்டப் பகுதிகளிலிருந்து நகரங்களுக்கு வந்து நல்ல நிலைமைகளில் இருக்கும் சில வர்த்தகர்கள் தமது சிறுவயதில் கண்டு களித்த கூத்துகளை மனதில் இருத்தி அவர்களுக்கு உதவி செய்கின்றனர்.
தொழிலாளர்களின் சம்பளம், குடியிருப்பு, நிலவுரிமை போன்ற விடயங்களில் அக்கறை காட்டாது அரசியல் செய்பவர்களிடம் சென்று கூத்துக் கலைகளை பாதுகாக்க ஏதாவது செய்யுங்கள் எனக் கேட்பது மடமையான செயல் தான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM