(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிரான தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிர்ச்சிக்கான மாற்று வீரராகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த தன்ஸித் ஹசனும் மத்திய வரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாத் ஹொசெய்னும பங்களாதேஷுக்கு 4 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (18) ஈட்டப்பட்ட இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் கைப்பற்றியது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் ஈட்டிய இரண்டாவது தொடர் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் மிர்பூரில் 2021இல் நடைபெற்ற தொடரில் இலங்கையை 2 - 1 ஆட்டங்கள் அடிப்படையில் பங்களாதேஷ் வெற்றிகொண்டிருந்தது.
இப் போட்டியில் இலங்கை சார்பாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே கன்னிச் சதம் குவித்தபோதிலும் அதனை தன்ஸித் ஹசன், ரிஷாத் ஹொசெய்ன் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் வீணடித்துவிட்டன.
சௌம்யா சர்க்கார் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது பந்து தாக்கி அதிர்ச்சிக்குள்ளாகி ஓய்வுபெற்றதால் அவருக்குப் பதிலாக தன்ஸித் அஹ்மத் மாற்று வீரராக இடம்பிடித்து தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்திக்கொண்டார்.
பங்களாதேஷ் அணியில் சௌம்யா சர்க்கார் உட்பட ஐந்து வீரர்கள் இன்றைய போட்டியில் உபாதைக்குள்ளாகினர். அவர்களில் மூவர் கடைசி 3 ஓவர்களில் உபாதைக்குள்ளாகினர்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 40.2 ஓவர்ளில் 6 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
சௌம்யா சர்க்கார் அதிர்ச்சிக்குள்ளாகி ஓய்வுபெற்றதால் மாற்று வீரராகத் துடுப்பெடுத்தாடிய தன்ஸித் ஹசன் 81 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்து அணிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது தனிப்பட்ட அதிகப்பட்ச எண்ணிக்கை இதுவாகும்.
அனாமுல் ஹக்குடன் ஆரம்ப விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோயுடன் 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் தன்ஸித் ஹசன் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
ஆனால், 26ஆவது ஓவரில் பங்களாதேஷின் 5ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணக்கை 130 ஓட்டங்களாக இருந்தது.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த முஷ்பிக்குர் ரஹிம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
மிராஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்த ரிஷாத் ஹொசெயன் துணிச்சலுடன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 18 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
முஷ்பிக்குர் ரஹிமும் திறமையை வெளிப்படுத்தி ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினர்.
பந்துவீச்சில் லஹிரு குமார 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, தடுமாற்றத்துக்கு மத்தியல் ஜனித் லியனகே குவித்த முதலாவது சர்வதேச ஒருநாள் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாவது போட்டியில் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க இப் போட்டியில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். தஸ்கின் அஹ்மத் வீசிய பந்து அவரது முழங்கால் அளவில் பட்டதுடன் அவர் விக்கெட்டை முழுமையாக மறைத்திருந்தார். எனினும் பந்து விக்கெட்டுக்கு மேலாக செல்லக்கூடும் என கருதப்பட்டது. ஆனால், பெத்தும் நிஸ்ஸன்க மத்தியஸ்தரின் தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்தாமல் வெளியேறினார்.
அவிஷ்க பெர்னாண்டோ 3ஆவது தடவையாக பிரகாசிக்கத் தவறி 4 ஓட்டங்களை மட்டும் பெற்றார்.
சதீர சமரவிக்ரம (14), குசல் மெண்டிஸ் (29) ஆகியோரும் பெரிய எண்ணிக்கைகளை எட்டவில்லை.
சரித் அசலன்க (37), ஜனித் லியனகே ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 117 ஓட்டங்களாக உயர்த்தினர்.
எனினும் சரித் அசலன்க, துனித் வெல்லாலகே (1), வனிந்து ஹசரங்க (11) ஆகியோர் ஆட்டம் இழக்க இலங்கை அணி 35ஆவது ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.
ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்த போதிலும் மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 102 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள் ஒரு சிக்ஸ் உட்பட 101 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவர் 8ஆவது விக்கெட்டில் மஹீஷ் தீக்ஷனவுடன் பகிர்ந்த 60 ஓட்டங்கள் இலங்கை அணியை கௌரவமான நிலையில் இட்டது. மஹீஷ் தீக்ஷன 15 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு உதிரிகளாக 18 ஓட்டங்கள் சேர்ந்தன.
பந்துவிச்சில் தஸ்கின் அஹ்மத் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ரிஷாத் ஹொசெய்ன்.
தொடர்நாயகன்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM