ஜப்பான், வடகொரியாவை உளவு பார்க்கும் புதிய செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

வடகொரியா  அவ்வப்போது ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதை தொடர்ந்து, பசுபிக் பிராந்தியத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வடகொரியாவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த, ஜப்பானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஏவுதளத்திலிருந்து, H-2A ஏவுகணை மூலம் ரேடார் 5 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு புதிய செயற்கைக்கோளானது ஜப்பானின் கடற்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வடகொரியாவை, விண்ணில் இருந்தபடி உளவு பார்ப்பதோடு, அந்நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், புதிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜப்பானை குறிவைத்ததான பசுபிக் கடற்பிராந்திய பகுதிகளில், கடந்த 1998 ஆம் ஆண்டு வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையினை பரிசோதித்ததை தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு முதல் உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை ஜப்பான் விண்ணில் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.