(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.
பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், உதவி அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் மற்றும் அவர்கள் பகிர்ந்த சாதனைமிகு 4ஆவது விக்கெட் இணைப்பாட்டம், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே ஆகியோர் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 34 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றிபெறச் செய்தன.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 47.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பங்களாதேஷைப் போன்று இலங்கையும் ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோவை (0) முதலாவது ஓவரிலேய இழந்தது. (1 - 1 விக்.)
பெத்தும் நிஸ்ஸன்க, அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (18) ஆகிய இருவரும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய உற்சாகத்தைக் கொடுத்தனர்.
குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (1) ஆகிய இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அழுத்தத்தை எதிர்கொண்டது.
எனினும், பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 185 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
அவர்கள் இருவரும் பகிர்ந்த 185 ஓட்டங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சகல நாடுகளுக்கும் எதிராக இலங்கையினால் பகிரப்பட்ட அதிசிறந்த 4ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக அமைந்தது.
ஆனால், அவர்கள் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தமை இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. (235 - 5 விக்.)
பெத்தும் நிஸ்ஸன்க 113 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 114 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் பெற்ற 6ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதமாகும்.
மறுபக்கத்தில் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க, 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.
முதலாவது போட்டியில் அரைச் சதம் குவித்த ஜனித் லியனகே இந்தப் போட்டியில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (251 - 6 விக்.)
ஆனால், வனிந்து ஹசரங்கவும் துனித் வெல்லாலகேயும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இலங்கைக்கு உதவினர்.
வனிந்து ஹசரங்க 16 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 25 ஓட்டங்களைப் பெற்றார்.
துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.
பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தத் தொடரில் இரண்டாவது தடவையாக லிட்டன் தாஸின் விக்கெட்டை முதலாவது ஓவரிலேயே டில்ஷான் மதுஷன்க வீழ்த்தினார்.
ஆனால், சௌம்யா சர்க்கார், அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
ஷன்டோ 6 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து சர்க்கார், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
சர்க்கார் 11 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 68 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (130 - 3 விக்)
அதே மொத்த எண்ணிக்கையில் மஹ்முதுல்லா ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார்.
ஆனால், முஷ்பிக்குர் ரஹிம் (25), மெஹிதி ஹசன் மிராஸ் (12), தன்ஸிம் ஹசன் சக்கிப் (18) ஆகியோர் தௌஹித் ரிதோய்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கினர்.
ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தௌஹித் ரிதோய், பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மதுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியின் மொத்த எண்ணிக்கையை 286 ஓட்டங்களாக உயர்த்தினார்.
தௌஹித் ரிதோய் 102 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 96 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் தனது ஏழாவது ஓவரில் உபாதைக்குள்ளாகி ஒய்வு பெற்ற டில்ஷான் மதுஷன்க 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM