சி.சிவகுமாரன்
தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகளை இலங்கையில் இன்னும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதில் மலையக பெருந்தோட்ட மக்கள் பிரதான இடம் வகிக்கின்றனர். பண்பாட்டு மரபு வளங்கள் (Cultural heritage) எனும்போது கலைகளும் அது தொடர்பான கலாசார பாரம்பரியங்களும் முன்னிற்கின்றன.
கூத்து கலைகளான காமன் பண்டிகை, பொன்னர் சங்கர், அர்ச்சுணன் தவசு, நல்லதங்காள் மற்றும் ,மருதுபாண்டி கூத்துகள், பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வான மார்கழி பஜனை என்பன அடங்குகின்றன. இலங்கையின் பெருந்தோட்டப்பகுதிகள் அனைத்திலுமுள்ள ஆலயங்களிலும் மார்கழி மாத திருவெம்பாவை பூஜை நிகழ்வுகள் இடம்பெற்று ‘கம்பம் தூக்குதல்’ என்ற பஜனை நிகழ்வுகள் ஒரு மாத காலத்துக்கு இடம்பெறும்.
அதே போன்று வருடத்தின் ஆரம்பத்தில் பொங்கல் பண்டிகையோடு நிறைவடையும் பஜனை நிகழ்வுகளைத் தொடர்ந்து மாசி மாதம் காமன் கூத்து ஆரம்பமாகும். அதைத்தொடர்ந்து அர்ச்சுணன் தவசு, பொன்னர் சங்கர் கூத்துகள் இடம்பெறும். தற்காலத்தில் நல்லதங்காள் கதை மற்றும் மருதுபாண்டி கூத்துகள் மலையகப் பிரதேசங்களில் இடம்பெறுவதில்லை. அந்த கூத்து கலைஞர்கள் மறைந்து விட்டனர். எவ்வாறெனினும் உழைக்கும் வர்க்கத்தினர் மலையகப்பிரதேசங்களுக்கு வருகை தந்து இருநூறு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தமது கலாசார தொன்மையை பறைசாற்றும் வகையில் இப்பாரம்பரியங்களை தொடர்ச்சியாக இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஒருவகையில் இவர்களது வாழ்க்கையோடு இவை ஒன்றித்து விட்டன என்று கூறலாம்.
இலங்கையில் குறித்த கலைகள் முன்னெடுக்கப்படும் காலகட்டங்களில், அதை பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் அந்த தோட்டங்களை நோக்கி படையெடுப்பர். விடியும் வரை விழித்திருந்து இந்த நிகழ்வுகளின் இறுதி கட்டத்தை கண்டு களிப்பர். இந்த நிகழ்வுகள் இடம்பெறும் தோட்டங்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும். தோட்ட ஆலய திருவிழா போன்றே இந்த கூத்து கலைகளும் பிரமாண்டமாக இடம்பெறும்.
இது இவ்வாறிருக்க தற்போது இந்த பாரம்பரிய கலைகளின் புதிய போக்குகள் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளதை மறுக்க முடியாது. மார்கழி பஜனை குழுவினர் தோட்ட ஆலயத்தில் அதிகாலை வழிபாடுகளுடன் கம்பம் சுமக்க ஆரம்பித்து இராமர் பாடல்கள், கீர்த்தனைகளை பாடியவண்ணம் தோட்டம் முழுதும் சுற்றி வருவர். இப்போது இவர்கள் தோட்டங்களை அண்டிய நகரங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளனர். அதிகாலையில் ஆரம்பித்து காலை ஏழு மணியளவில் ஆலயத்தில் முடிய வேண்டிய இந்த பஜனை நிகழ்வு இப்போது பகல் வேளையில் நிறைவடைகின்றது.
பஜனை குழுவினர் மலையக நகரங்களை சுற்றி வருவதென்பது ஒரு புதிய வடிவம். இது இப்போது பல தோட்டப்பகுதிகளில் பரவி வருகின்றது. அதே போன்று காமன் கூத்து நிகழ்வின் பிரதான பாத்திரங்களான ரதி –மன்மதன் இருவரும் குழுவினரோடு இப்போது மாலை வேளைகளில் மலையக நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த குழுவினர் பிரதான வீதி வழியாக செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த புதிய கலாசாரத்தை இரண்டு வகையில் நோக்க வேண்டியுள்ளது. தற்காலத்தில் இளையோர் மத்தியில் பாரம்பரிய கலைகள் குறித்த ஆர்வம் இல்லை. செவிவழியாக பேணப்பட்டு வரும் கூத்து கலை பாடல்களை சேகரித்து வைக்கவோ அல்லது அதை பயிற்சி செய்து இக்கலையை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கோ எவரும் இல்லாத ஒரு நிலைமை பெருந்தோட்டப்பகுதிகளில் உருவாகியுள்ளது. இளைஞர்கள் தமது தொழில்வாய்ப்புகள் காரணமாக இடப்பெயர்வுகளை மேற்கொண்டமை இதற்கு ஒரு காரணம்.
இந்த இடப்பெயர்வுகள் பெருந்தோட்ட சனத்தொகை பரம்பலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்று பெருந்தோட்டப்பகுதி கூத்து கலைகளை பார்ப்பதற்கும் எவருமில்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது. இந்த கலைகளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கு பொருளாதார ரீதியான உதவிகள் எந்த பக்கத்திலிருந்தும் கிடைப்பதில்லை. மலையக பாரம்பரிய கலைகள் பற்றி ஆய்வு செய்வோர் இந்த விடயம் பற்றி சுட்டிக்காட்டினாலும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கக் கூடியவர்கள் எவரும் இல்லை. மலையக பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதற்கான எந்த பொறிமுறைகளும் இன்று எந்த பெருந்தோட்டங்களிலும் இல்லை.
இவ்வாறானதொரு நிலையில் இந்த கலைஞர்கள், பொருளாதார உதவிகளுக்காக நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர் என்றால் மிகையாகாது. ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களில் கலைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவற்றை பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள அலட்சியப் போக்கே இந்த இவ்வாறான சம்பவங்களுக்கும் காரணமாகும்.
மலையகம் இருநூறு என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சகல நிகழ்வுகளிலும் இந்த பாரம்பரிய கலைகள் மேடையேற்றப்பட்டன. அதில் எத்தனை பெருந்தோட்டப் பகுதி கலைஞர்கள் பங்கு கொண்டார்கள் என்பது ஆராயத்தக்கது. பெருந்தோட்டத் தொழிற்றுறையை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள தேயிலைச்செடிகளையும் தொழிலாளர்களையும் மாத்திரம் பராமரித்தல் போதுமானதல்ல. அவர்களின் மத்தியில் உள்ள கலைஞர்களையும் பாதுகாத்தல் அவசியம். ஒரு சமூகத்தின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதில் கலைகள். மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன என்பதை உரியோர் உணர்ந்து செயற்படல் அவசியம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM