டுபாயில், பசியோடிருந்த இரண்டு நாய்களுக்கு பூனையொன்றை உயிருடன் இரையாக்கிய மூன்று இளைஞர்களை, 90 நாட்களுக்கு மிருகக் காட்சி சாலையொன்றைச் சுத்தம் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வுத்தரவை டுபாய் ஆளுனரும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமருமான ஷெய்க் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் பிறப்பித்துள்ளார்.

தொழிலகம் ஒன்றின் உரிமையாளரும் அவரது இரண்டு ஊழியர்களும் சேர்ந்தே இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளனர். மூவரில் இருவர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். தமது செயலை ஒளிப்பதிவு செய்த இவர்கள், அதை சமூக வலைதளத்திலும் பதிவேற்றியிருந்தனர்.

இந்தக் காட்சியைக் கண்ட பல்லாயிரக்கணக்கானோர் தமது பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட டுபாய் பொலிஸார், சம்பவம் நடந்த மறுநாளே சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்து விளக்கமறியலில் அடைத்தனர்.