ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்! - வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் விளக்கம் 

Published By: Nanthini

10 Mar, 2024 | 01:57 PM
image

(மா. உஷாநந்தினி)

"லிங்காஷ்டகம் என்பது பொதுவாக லிங்கத்தின் பெருமைகளை கூறும் பாடலாகும். ஆனால், ஈழத்து லிங்காஷ்டகம், இலங்கையில் உள்ள ஒவ்வொரு லிங்கங்களின் வரலாறு, சிவன் கோயில்களின் சிறப்பு, மகிமை போன்றவற்றை ஒரு வரியில் கூறுகிறது" என வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புகழ்பெற்ற 'லிங்காஷ்டக'த்துக்கு மத்தியில், இவர் எழுதி, தயாரித்து, மெட்டமைத்த 'சிவபூமி - ஈழத்து லிங்காஷ்டகத்தை' இசை அல்பமாக தற்போது வெளியாகின்றமை இலங்கை மண்ணுக்கே உரிய பெருமை. 

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனான எஸ்.பி.பி.சரண் பாடிய ஈழத்து லிங்காஷ்டகத்தின் சிறப்பம்சங்களை பற்றி வரலாற்று ஆய்வாளர் தொடர்ந்து விளக்குகையில்,

மெட்டும் இசையும் 

"ஆரம்பத்தில் பாடகர் எஸ்.பி.பி. அவர்களை மனதில் வைத்துக்கொண்டு, இந்திய லிங்காஷ்டகத்தின் மெட்டிலேயே ஈழத்து லிங்காஷ்டகப் பாடலை அமைத்திருந்தேன். 

அடுத்து ஒலிப்பதிவுக்கும் தயாராகிவிட்டோம். அப்போது, எனக்குள் ஒரு சிந்தனை தோன்றியது. இந்திய லிங்காஷ்டக மெட்டில் பாடலை உருவாக்காமல், இலங்கைக்கென தனித்துவமான ஒரு மெட்டை உருவாக்கினாலென்ன என்று நினைத்தேன். 

எனது இந்த கருத்தையே இசையமைப்பாளர் கணேஷ்ராஜும் கொண்டிருந்தார். அதன் பின்னரே எமக்கென புதிதாக ஒரு மெட்டை அமைத்தேன். அதற்கேற்ற அருமையான ஆரம்ப இசை மற்றும் இடையிசை ஆகியவற்றை இசையமைப்பாளர் உருவாக்கினார். ஈழத்து லிங்காஷ்டகம் வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது" என்றார். 

அத்தோடு, ஈழத்து லிங்காஷ்டகம் உட்பட மொத்தமாக 10 பாடல்கள் அடங்கிய இந்த இசை அல்பம் உருவாக காரணமான பாடகர் எஸ்.பி.பி. சரண், இசையமைப்பாளர் ஸ்ரீ கணேஷ்ராஜ், ஈழத்து லிங்காஷ்டகம் தவிர்ந்த ஏனைய பாடல்களை சரணோடும் இணைந்து பாடிய ஜெயராணி கணேஷன், சனுஜா திருச்செல்வம் மற்றும் லண்டன் மீரா ஜுவலரி மார்ட் லிமிட்டெட் உரிமையாளர் பொன்னம்பலம் சங்கர் ஆகியோரை நினைவுபடுத்தியதோடு, அல்பத்தில் சில பாடல்களை தானும் பாடியிருப்பதாக கூறினார். 

தொடர்ந்து அவர், 

ஈழத்து லிங்காஷ்டகம் : 180 வரிகள்... 170 கோயில்கள்... 

ஈழத்து லிங்காஷ்டக பாடலில் மொத்தமாக 180 வரிகள் உள்ளன. இதன் ஒவ்வொரு வரியிலும் ஒரு லிங்கம் சொல்லப்படுகிறது. 

கோணேஸ்வரத்தில் மாதுமை லிங்கம் 

கேதீஸ்வரத்தில் கெளரி லிங்கம் 

முன்னேஸ்வரத்தில் வடிவு லிங்கம்

நகுலேஸ்வரத்தில் நகுல லிங்கம் 

சந்திரசேகர ஈஸ்வர லிங்கம்

ஈஸ்வரமுனி எல்லாளனின் லிங்கம் 

சிவனொளிபாதத்தில் சுமண லிங்கம்

சிவகிரி காசி அப்பனின் லிங்கம்  

....................

இவ்வாறாக பாடல் முழுவதும் லிங்கம் லிங்கம் என்றே வருகிறது.

எனது 25 வருட கால ஆய்வின் அடிப்படையில், இந்த பாடலில் இலங்கையில் அமைந்துள்ள 170 லிங்கக் கோயில்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறேன். இவை சுமார் 150 வருடங்களுக்கு முற்பட்ட சிவன் கோயில்களாகும். 

மொத்தமாக இந்த 180 வரிகளில் கூறப்படும் லிங்கங்களில் சுமார் 100 லிங்கங்கள் நாம் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றன. ஏனைய சுமார் 80 லிங்கங்கள் கண்களுக்கு புலப்படாதபடி மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.

சிவபூமி முழுவதும் சிவலிங்கங்கள் 

இலங்கை முழுவதும் லிங்கங்கள் உள்ளன. இவை லிங்க கோயில்களுக்கான மிக முக்கிய ஆதாரங்கள். 

இலங்கையில் பல கோயில்கள் வழிபாட்டுக்குரியதாக காணப்பட்டாலும், 80க்கும் மேற்பட்ட கோயில்கள் அழிந்துவிட்டன. 

வடக்கில் யாழ். மாவட்டத்தில் நகுலேஸ்வரம், சட்டநாதர் சிவன் கோயில், கைலாசநாதர் கோயில், நாகலிங்கேஸ்வரம், வாரிவானேஸ்வரம்... கிளிநொச்சியில் சோழர்கால உருத்திராபுரம் சிவாலயம்... மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம், திருவிராமேஸ்வரம், செட்டிக்குளம் சந்திரசேகர ஈஸ்வரம், வன்னியில் வவுனிக்குளம் சிவாலயம், பனங்காமம் சிவாலயம், கோயில்குளம் சிவன் கோயில், ஒட்டிசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் போன்ற லிங்கக் கோயில்கள் உள்ளன. 

இவற்றில் திருவிராமேஸ்வரம் போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்ட லிங்கக் கோயிலாகும். இக்கோயில் இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை. 

கிழக்கில் திருக்கோணேஸ்வரம் மிகப் பிரசித்தி பெற்ற லிங்கக் கோயில்.

திருகோணமலை மூதூர் பகுதியில் திருமங்கலாய் சிவன் கோயில் உள்ளது. அதன் இடிபாடுகள் இன்றும் அங்குள்ள காட்டுப் பகுதியில் காணப்படுகின்றன. இதற்கு சற்று தூரத்தில் அகத்தியர் தாபனம் சிவன் கோயில் உள்ளது. இவ்விடத்தில் ஏழெட்டு துண்டுகளாக உடைந்து போயுள்ள சிவலிங்கமும் இருக்கிறது. தற்போது அதன் அருகில் புதிதாக கோயில்  கட்டப்பட்டுள்ளதும் முக்கியமானதொரு விடயம். இப்பகுதியில் கங்குவேலி சிவாலயம் உள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமங்கேஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரம், களுதாவளை சுயம்பு லிங்கம் போன்றவை பிரசித்தி பெற்ற லிங்கக் கோயில்களாகும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகந்தை என்கிற இடத்தில் பண்டைய காலத்தில் சிவன் கோயிலே இருந்தது. அன்று இக்கோயிலில் இராவணனுக்கு தீபமேற்றி வழிபட்டதாகவும் மட்டக்களப்பு மாண்மியம் குறிப்பிடுகிறது.

அக்கரைப்பற்று பனங்காட்டில் பசுபதேஸ்வரர் கோயில் உள்ளது. 

அம்பாறையில் தீகவாபி என்னுமிடத்தில் அகழ்வின்போது நந்தியின் சிலை கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கும் பண்டைய காலத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்துள்ளது.

மேற்கிலங்கையில் கோட்டை இராஜ்ஜியத்திலும் சிவன் கோயில் இருந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளன. எனினும், அந்த கோயில் அழிந்துவிட்டது. கொழும்பில் உள்ள பொன்னம்பலவானேஸ்வரம் இலங்கையில் வழிபாட்டில் உள்ள ஒரே ஒரு பழைய முழுமையான கற்கோயிலாகும்.

இரத்மலானை நந்தீஸ்வரர் கோயில் கோட்டை இராச்சியத்தில் வழிபடப்பட்ட லிங்கக் கோயிலாகும். 

வடமேல் மாகாணத்தில் வில்பத்து காட்டுக்குள் 'அஸ்வ கிரி' எனப்படும் குதிரை மலையில் சிவாலயமொன்று இருந்திருக்கிறது. அது அல்லி ராணி வணங்கிய கோயில் என்பார்கள். ஆயினும், தற்போது அந்த இடத்தில் கோயிலின் எச்சங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக, புத்தளத்தில் உள்ள தோணிக்கல் கல்வெட்டில் அஸ்வகிரி என்பது 'அச்சகிரிய' எனும் பெயரில் பொறிக்கப்பட்டுள்ளது.  

புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிலாபம் நகரின் அருகில் உள்ள முன்னேஸ்வரம் பல வகைகளிலும் சிறப்புப்பெற்ற லிங்கக் கோயிலாகும். 

சற்று தூரத்தில் உள்ள மானாவரி சிவன் கோயில் இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்ட சிவலிங்கமாகும்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள புதுமுத்தாவையில் இருந்த சிவன் கோயில் பற்றி அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

அநுராதபுர மாவட்டத்தில் 6 சிவன் கோயில்கள் இருந்ததை H.C.B. பெல் கண்டுபிடித்துள்ளார். அவற்றின் சிவலிங்கங்கள் மற்றும் தெய்வச் சிலைகள் இன்றும் இலங்கை தொல்பொருள் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

பொலன்னறுவை இராஜதானியில் 10க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் இருந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது, 2ஆம் சிவாலயம் எனும் வானவன் மாதேவி ஈஸ்வரம். இது இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். இது தொடர்பான கல்வெட்டுக்கள் பல தற்போதும் காணப்படுகின்றன.

சோழர் கால வணிகர்கள், படையணிகள் ஆகியோர் சேர்ந்து கட்டிய ஒரு கோயிலுக்கு 5ஆம் சிவாலயம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 

மத்திய இலங்கையில் கண்டி, தலதா மாளிகைக்கு பக்கத்தில் 'நாத தேவாலய' என்றொரு கோயில் இருக்கிறது. இங்கு முன்பு செங்கடன் என்கிற சிவனுக்குரிய கோயில் இருந்ததாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுவே பிற்காலத்தில் நாத தெய்வம் வழிபடப்படும் நாத தேவாலய கோயிலாக மாறியுள்ளது. மேலும், 'செங்கடன்' என்கிற சொல்லே  'செங்கடகல' என்கிற ஊரின் பெயராக திரிபடைந்துள்ளது. செங்கடன், நாதன் ஆகியவை சிவனைக் குறிப்பிடும் பெயர்களாகும். 

மாத்தளை மாவட்டத்தில் பதவித்தீஸ்வரர் கோயில், நுவரெலியாவில் லங்காதீஸ்வரர் கோயில் போன்றவை லிங்கக் கோயில்களாகும்.

சப்ரகமுக மாகாணத்தில் இராஜசிங்க மன்னன் சீதவாக்கையில் கட்டிய சிவன் கோயில் சிதைவடைந்து காணப்படுகிறது.

ரம்புக்கனையில் மொட்டப்புளிய  என்னுமிடத்தில் இருந்து அழிந்து போன சிவன்கோயில் பற்றிக் கூறும் கல்வெட்டு அங்கு உள்ளது.

கேகாலை பகுதியில் உள்ள யட்டகலேன என்னுமிடத்தில் 'சிவநகர' எனும் இடம் இருந்ததை பற்றி அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் உள்ள ஒலகம்கல என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு சிவன் பற்றிக் குறிப்பிடுகிறது.

மொனராகலை மாவட்டத்தில் இராவணன் குகை, இராவணன் அருவி ஆகியவை உள்ளன. இப்பகுதியில் இராவணன் வழிபட்ட லிங்கங்கள் இருந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். 

இம்மாவட்டத்தில் உள்ள கதிர்காமம், கதிரமலையில் முதன் முதலில் சிவனே குடி கொண்டிருந்தார்.

தெற்கில் காலி மாவட்டத்தில் உள்ள காலி நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு ஆதாரமாக அதன் தூண்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

மாத்தறை மாவட்டத்தில் தொண்டேஸ்வரம் எனும் சந்திரசேகர ஈஸ்வரம் போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்ட சிவலிங்கக் கோயிலாகும். அதன் சின்னங்களான லிங்கம், நந்தி, பலிபீடம், கற்தூண்கள் ஆகியவற்றை இன்றும் கோயில் வளாகத்தில் காணலாம்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பிராமிக் கல்வெட்டில் 'சிவ நகரம்' என்கிற ஊர் இருந்ததற்கான ஆதாரமாக, 'சிவ நகரம்' என்ற பெயர் பிராமி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

அப்படியாயின், நிச்சயமாக அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். 

இவை, இலங்கை முழுவதும் இருந்த மற்றும்  அழிந்துபோன லிங்கக் கோயில்களின் ஒரு சில உதாரணங்களே. 

வரிக்கொரு கோயில், வரிக்கொரு லிங்கம்

ஈழத்து லிங்காஷ்டக பாடலின் ஒவ்வொரு வரியிலும் கோயிலின் பெயர், லிங்கத்தின் பெயர், கோயிலோடு தொடர்புடையவர்களின் பெயர்கள், கோயிலின் வரலாறு முதலான பல்வேறு விடயங்களை நான்கைந்து சொற்களுக்குள் நுட்பமாக எழுதியுள்ளேன்.  

"சிவகிரி காசியப்பன் லிங்கம்" - சிவகிரி என்கிற சிகிரியா மலையில் காசியப்ப மன்னன் வணங்கிய லிங்கம். 

"கொக்கட்டி மரத்தில்  தான்தோன்றி லிங்கம் 

ஒட்டுசுட்டானில் அநாதி லிங்கம்"  -  இந்த இரண்டு லிங்கங்களும் தானாக தோன்றிய சுயம்பு லிங்கங்கள். 

"இராவணன் தாயின் கன்னி லிங்கம்" கன்னியாவின் மகனான இராவணன் வணங்கிய கன்னியாவில் உள்ள லிங்கம். 

"இரவிகுல மாணிக்க பதவி லிங்கம்" - தற்போதைய பதவியாவில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட இரவிகுல மாணிக்க ஈஸ்வரத்தில் இருக்கிற லிங்கம். 

"கதிரைமலை கந்தசுவாமியின் லிங்கம்" - கதிர்காமத்தில், கதிரை மலை எனும் ஏழுமலையில் முருகன் வணங்கிய லிங்கம் 

"குதிரைமலை அல்லி ராணி லிங்கம்" - அஸ்வ கிரி எனப்படும் குதிரை மலையில் அல்லி ராணி வணங்கிய லிங்கம்

இந்திய லிங்காஷ்டகம் - ஈழத்து லிங்காஷ்டகம் 

புதியதொரு மெட்டினால் மட்டுமன்றி, இந்த பாடலின் வரிகளும் இந்திய லிங்காஷ்டகத்திலிருந்து வேறுபட்டு, தனிச்சிறப்பை பெறுகின்றன. விசேடமாக, இதன் ஒவ்வொரு வரியும் ஒரு கோயிலின் வரலாற்றை சொல்கிறது. உதாரணமாக,

"கண்தளை சதுர்வேதி மங்கல லிங்கம்"

'கண்தளை' என்பது தற்காலத்தில் 'கந்தளாய்' என அழைக்கப்படுகிறது. கஜபாகு மன்னன், திருக்கோணேஸ்வரத்தை அழித்துவிட்டுச்  செல்லும் வழியில் பார்வையை இழந்துவிட்டாராம். பின்பு அவர் அநுராதபுரம் சென்று கொண்டிருந்தபோது தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தினார். தன்னால் அழிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டி புதுப்பிப்பதாகவும், இன்னும் பல ஆலயங்களை தான் கட்டுவிக்கப் போவதாகவும் உறுதியெடுத்துக்கொண்டாராம். அதன் பின்னரே இழந்த கண்பார்வையை அவர் திரும்ப பெற்றதாக கதைகள் உண்டு. அதனால்தான் அந்த இடத்துக்கு கண்தளை என்ற பெயர் வந்துள்ளது. 

கந்தளாயில் உள்ள ஒரு கல்வெட்டில் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சதுர்வேதி மங்கலம் என்பது பிராமணர் குடியிருப்பு அல்லது அக்கிரஹாரம் என்று சொல்லலாம். 

அதன்படி, கந்தளாயில் அமையப்பெற்ற பிராமணர் குடியிருப்பு பகுதியில் வழிபடப்பட்ட லிங்கம் என்பதை இந்த வரி எடுத்துக் காட்டுகிறது.  

"களனி மலையில் ஒளித்த லிங்கம் 

தம்பலகாமம் கோண லிங்கம்" 

கந்தளாய்க்கு சற்றே தொலைவில் களனி மலை உள்ளது. போர்த்துக்கீசர் திருக்கோணேஸ்வரத்தை அழித்தபோது, அதன் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என ஆலய குருக்கள்மார் சிந்தித்தனர். 

உடனே, அவர்கள் அந்த லிங்கத்தை கையால் தூக்கியெடுத்து, ஒரு சாக்குப் பையில் வைத்துக்கொண்டு, இரவோடு இரவாக திருகோணமலையை விட்டுச் வெளியேறினர். 

சென்றவர்கள், தம்பலகாமம் காட்டுப் பகுதியில் உள்ள களனி மலைக்குள்ளிருந்த கல் குகைக்குள் லிங்கத்தை ஒளித்து வைத்தனர். அதுதான் 'களனி மலையில் ஒளித்த லிங்கம்'. இது திருக்கோணேஸ்வரத்தில் இருந்த லிங்கமாகும். 

சிறிது காலத்துக்குப் பிறகு, போர்த்துக்கீசர் ஆட்சி இல்லாமற்போன பின்னர், தம்பலகாமத்தில் ஒரு கோயிலை கட்டி, மலைக் குகைக்குள் இருந்த லிங்கத்தை இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். அதனால்தான் அதற்கு ஆதி கோணேஸ்வரர் கோயில் என்கிற பெயர் வந்தது. 

"நந்தீஸ்வர முத்து ரஜவெளோ லிங்கம்" 

முன்பு வத்தளைக்கு அப்பாலுள்ள 'உஸ்வடகெய்யாவ' என்ற பிரதேசத்திலிருந்து நீர்கொழும்பு வரை மிகப் பெரிய சதுப்பு நிலம் இருந்தது. அது கோட்டை இராஜ்ஜிய காலத்தில் வயல் நிலமாக காணப்பட்டது. அப்பிரதேசமே முத்துராஜ வெல என அழைக்கப்பட்டது.

நெல் விளையக்கூடிய அந்த நிலத்தில், ஒரு கட்டத்தில் கடல் பெருக்கெடுத்து, கடல் நீர் நிறைந்ததால், அந்த வயல் சதுப்பு நிலமாக மாறியது. அங்கிருந்த 'புத்தூர்' என்றொரு இடமே இன்றைக்கு 'வத்தளை' என பெயர் பெற்றுள்ளது.   

புத்தூரில் (வத்தளை) முத்துராஜவெளி என்ற இடத்தில் அமைந்திருந்த நந்தீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த லிங்கமே 'நந்தீஸ்வர முத்து ரஜவெல லிங்கம்' ஆகும்.

"வெடுக்குநாறி கற்சிலை லிங்கம்" 

வெடுக்குநாறி மலையுச்சிக்கு செல்லும் வழியில் உள்ள மிகப் பெரிய பழங்கால பாறையை இன்றும் அங்குள்ள மக்கள் சிவலிங்கமாக நினைத்து, கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். 

மலையின் மீது கிட்டத்தட்ட 10 அடி உயரமான இந்த பாறையை ஆதி லிங்கேஸ்வரராக மக்கள் நம்பிக்கையோடு வழிபடுகிறார்கள். 

எனினும், எனது ஆய்வுகளின்படி, வெடுக்குநாறி மலைப்பகுதியில் ஒரு நாகலிங்க கோயில் இருந்திருக்கிறது. அது தொடர்பான நாகர்கால குழிக்கற்கள் அங்கு பெருமளவில் காணப்படுகின்றன. கல்வெட்டுக்களில் அந்த இடத்தில் பிராமணர்கள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. 

பிராமணர்கள் இருந்துள்ளனர் என்றால் கட்டாயம் அங்கே கோயில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அது எந்த தெய்வத்துக்குரிய கோயில் என்று உறுதியாக சொல்வதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

எனினும், பிராமணர்கள் அங்கு வசித்திருக்கிறார்கள், அங்கே ஒரு கோயில் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரக் குறிப்புகள் காணப்படுகின்றன. 

"தங்கத் திருமலை திவக்க லிங்கம்" 

அசோக மன்னர் சங்கமித்தையிடம் புத்த பகவான் ஞானம் பெற்ற போதி மரக் கிளையைக் கொடுத்து இலங்கையில் நட்டுவைத்து புத்த மதத்தை பரப்புங்கள்' என்று கூறி இலங்கைக்கு சங்கமித்தையை அனுப்புகிறார். 

அவ்வாறு, சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்து தேவநம்பிய தீசனிடம் கொடுக்க, அவர் அதை அநுராதபுரத்துக்கு கொண்டு செல்லும் வழியில்  உள்ள 'தந்திரி மலை' என்னுமிடத்தில் ஒரே ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் அநுராதபுரத்துக்குக் கொண்டு சென்றார். 

அந்த ஒரே ஒரு இரவு போதி மரக்கிளை இருந்ததால் அந்த மலை 'தங்க திருமலை' ஆனது. தங்கத் திருமலையே 'தந்திரி மலை' ஆனது. அந்த மலைப்பகுதியை 'திவக்கன்' என்றொரு பிராமணர் ஆட்சி செய்தார். அவர் தேவநம்பிய தீசனின் மரியாதைக்கும், மதிப்புக்கும், நட்புக்கும் உரியவர். திவக்கன் என்கிற பிராமணர் வழிபட்ட லிங்கத்தையே 'தங்கத் திருமலை திவக்க லிங்கம்' எனக் குறிப்பிட்டுள்ளேன். 

"மாமாங்க ஈஸ்வர மணல் லிங்கம்" 

மாமாங்கத்தில் ராமர் சீதையை மீட்டுச் செல்லும்போது அங்கே மணலில் லிங்கம் பிடித்து வழிபட்டதாக புராணக்கதை சொல்கிறது.  

"அநுராபுரேச அரச லிங்கம்" 

அநுராதபுரத்தில் பண்டைய அரசர்கள் கோயில் கட்டி வணங்கிய இந்த லிங்கம், வெள்ளரசு மரத்துக்கு கீழே இருந்ததாக தக்ஷிண கைலாய புராணம் கூறுகிறது. இன்றைக்கும் வெள்ளரசு மரத்தின் அடிப்பகுதியில் ஒரு மிகப் பழமையான கட்டட சிதைவுகளைப் பார்க்கலாம். வெள்ளரசு மரத்துக்கு கீழே அடித்தளத்தில் கண்ணாடிப் பெட்டி வழியே கட்டடத்தின் சிதைந்த பகுதி தென்படுகிறது. அது பழங்கால கட்டடப் பகுதியின் எச்சம் என்று சொல்கிறார்கள். எனினும், அது பழைய சிவலிங்க கோயிலின் எச்சமாக இருக்கலாம்.

"கல்யாணி நகரில் விபீஷன லிங்கம்"

'கல்யாணி' என்பது தற்போதைய களனியை குறிக்கிறது. இராவணனின் தம்பியான விபீஷணனுக்கு களனியில் தான் முடி சூட்டப்பட்டது. அங்கே இராவணன் காலத்தில் வழிபடப்பட்ட லிங்கம், விபீஷணனாலும் வழிபடப்பட்டது. அதுதான் 'கல்யாணி நகரில் விபீஷன லிங்கம்'.

"பூதவராயர் வீதியன் லிங்கம்" 

பூதவராயர் என்றொரு கோயில் நல்லூரில் 'மந்திரி மனை'க்கு பின்னால் கட்டப்பட்டுள்ளது. அந்த காலத்தில் சிவனையே 'பூதவராயர்' என வழிபட்டுள்ளனர். 

அக்காலத்தில் இலங்கையில் இரண்டு இராஜ்ஜியங்கள் இருந்தன. ஒன்று, கோட்டை இராஜ்ஜியம். மற்றையது, யாழ்ப்பாண இராஜ்ஜியம். அப்போது யாழ்ப்பாண இராஜ்ஜியத்தை சங்கிலிய மன்னன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். அதேவேளை கோட்டை இராச்சியத்தை 7ஆம் புவனேகபாகு ஆட்சி செய்துகொண்டிருந்தான். மன்னன் நோய்வாய்ப்பட்டதால், கோட்டை இராஜ்ஜியத்தின் தளபதியாக இருந்த, அவரது மருமகனான 'வீதிய பண்டார' கோட்டை இராஜ்ஜியத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, போர்த்துக்கீசரோடு போரிட்டு வந்தான். 

ஒரு கட்டத்தில் போர்த்துக்கீசர் கோட்டை இராஜ்ஜியத்தை கைப்பற்ற, வீதிய பண்டார யாழ்ப்பாண இராஜ்ஜியத்துக்கு தப்பிச் சென்றான். அங்கே, அவருக்கு சங்கிலிய மன்னன் அடைக்கலம் கொடுத்தான். 

மந்திரி மனையின் பின் பகுதியிலேயே வீதிய பண்டார பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டான். அப்போது சங்கிலியன் - வீதிய பண்டார இருவருக்கும் இடையே ஆழமான நட்பு ஏற்பட்டது. 

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீதிய பண்டார உள்ளிட்ட சிலர் இறந்துவிட்டனர். 

தன்னிடம் அடைக்கலம் நாடி வந்த நண்பனான வீதிய பண்டாரவின் திடீர் மரணத்தால் சோகமடைந்த சங்கிலிய மன்னன், வீதிய பண்டாரவின் நினைவாக பூதவராயர் கோயிலைக் கட்டினார். அந்த கோயிலில் இருந்த லிங்கமே 'பூதவராயர் வீதியன் லிங்கம்'

"வந்தாறுமூலை பொத்தானை லிங்கம்"

இது வந்தாறுமுலையில் வழிபடப்படும் லிங்கம். பொத்தானை காட்டுக்குள்ளிருந்து இந்த லிங்கம் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

பொத்தானை காட்டுக்குள் முன்னர் இருந்த லிங்கக் கோயிலொன்று அழிந்துபோக, பின்னர், அங்கு காணப்பட்ட லிங்கத்தையும், இரண்டு துண்டாக உடைந்த மிகப் பெரிய நந்தி சிலையையும் வந்தாறுமூலையில் கடற்கரைக்கு செல்லும் வழியில் ஓரிடத்தில் வைத்து மக்கள் வழிபடுகிறார்கள்.

"ரம்பை மாநாகுல இராஜ்ஜிய லிங்கம்" 

எம்பிலிப்பிட்டியவுக்கு சற்றே தொலைவில் தென் மாகாணத்தில் ரம்பா விகாரை இருக்கிறது. அங்கு லிங்கம் இன்றி, ஆவுடையார் (லிங்கத்தின் அடிபாகம்) மட்டுமே காணப்படுகிறது.  

அப்பகுதியில் முன்பிருந்த மாநாகுல (மகாநாக குலம்) இராஜ்ஜியத்தை நாகர் குல மன்னர்கள் ஆட்சி செய்தனர். அங்கு கட்டப்பட்ட ரம்பா விகாரையில் வணங்கப்பட்ட லிங்கம், 'ரம்பை மாநாகுல இராஜ்ஜிய லிங்கம்' என குறிப்பிடப் படுகிறது.

இலங்கை வரும் லிங்கங்கள் 

சில லிங்கங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்து இலங்கையில் பிரதிஷ்டை செய்கிறார்கள். சில லிங்கங்கள் இலங்கையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு தாரா லிங்கங்கள் போன்ற லிங்கங்களும் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டவையாக உள்ளன. 

அத்துடன், ஒட்டுசுட்டான், கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களில் அந்த நிலங்களில் தானாக தோன்றிய சுயம்பு லிங்கங்கள் காணப்படுகின்றன. 

லிங்க வழிபாட்டின் தொன்மை 

இலங்கையில் நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், ஆதி இரும்புக்காலம் அல்லது பெருங்கற்கால மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் என்று கருதக்கூடிய பொ.ஆ.மு. 500 முதல் 1000  வரையான காலப்பகுதிக்கு முன்னர்,  இலங்கையில் பிராமி கல்வெட்டுக்கள் எழுதப்பட்ட காலத்துக்கு சற்றே முன்னர்  பெருங்கற்காலம் நிலவியது. 

ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால மையங்களில் சிவலிங்க உருவங்கள் இருந்துள்ளன. இவற்றை சுடு மண் பாவை உருவங்கள் என்பார்கள். சுடு மண் ஆங்கிலத்தில் terrocotta என்று சொல்லப்படும். 

இந்த லிங்கங்கள் அந்த காலத்தில் சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான மிக முக்கிய ஆதாரங்களாகின்றன.

தப்போவ (தவகிரி), மருதன்மடுவ, தல்கஸ்வெவ, உருத்ராபுரம், நிக்காவெவ, பூநகரி, இலுக்குவெவ, பன்சல்லேன, எம்பிலிப்பிடிய, பின்வெல, மிகிந்தலை போன்ற பல இடங்களிலும் சுடு மண் பாவை லிங்கங்கள் பல கிடைக்கப்பட்டுள்ளன.

அச்சகிரி, தவகிரி இந்த இரண்டு இடங்களும் தோணிக்கல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்த சிவலிங்கள் இற்றைக்கு 2000 முதல் 3000 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. இதை தொல்லியல் ஆராய்ச்சியாளர் தெரனியகல தனது ஆய்வுக் குறிப்புகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 

பிராமிக் கல்வெட்டுக்களில் 'சிவ' என்று எழுதப்பட்ட 95 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவ்வாறாயின், பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்ட காலத்தில் சிவ வழிபாடு, சிவன் கோயில்கள் இருந்துள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் சிவனை முக்கிய கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 

சிங்கள கல்வெட்டுக்களில் 'லிங்கம்' 

8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தான் கிரந்த மொழி கல்வெட்டுக்களும் சிங்கள மொழி கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் சில சிங்கள கல்வெட்டுக்களில் 'சிவ' என்கிற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 

லிங்கங்கள் பற்றிய ஆய்வு 

'ஈழத்து லிங்காஷ்டகம்' எழுதப்பட்ட பின்னரும், அதை ஒலிப்பதிவு செய்த பின்னரும் கூட கிட்டத்தட்ட 5, 6 லிங்கங்களை கண்டுபிடித்திருக்கிறேன். பண்டைய காலத்தில் வழிபடப்பட்டு, பின்பு அழிந்து போய் மண்ணில் புதைந்து கிடக்கும்  லிங்கங்கள் காலத்துக்குக் காலம்  வெளிவந்துகொண்டே தானிருக்கும்" என்று வரலாற்றின் சில பக்கங்களை புரட்டி, மறந்துபோன பழங்கால சம்பவங்களையும் ஆதாரக் குறிப்புகளையும் முன்வைத்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38
news-image

கந்தன் துணை : கந்த சஷ்டி...

2024-11-02 13:18:19
news-image

தமிழர்கள் என்பதால் நாம் தமிழ் இலக்கியங்களோடு...

2024-07-15 11:23:10