ஆதிக்கம் பெறுகின்றனரா கடற்கொள்ளையர்கள்? சர்வதேச கவனம் பெற்றிருக்கும் ஏரிஸ் 13

Published By: Devika

15 Mar, 2017 | 01:50 PM
image

ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் தலைதூக்கியிருக்கும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம், உலக நாடுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (13) கடத்தப்பட்ட கப்பலுடன், அதில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த எட்டு மாலுமிகளும் கடத்தப்பட்டிருப்பதானது இலங்கையர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பிணைக் கைதிகளை விடுவிக்க பெருந்தொகையை கப்பமாகவும் கோரியிருக்கின்றனர் இந்தக் கப்பல் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் கடற்கொள்ளையர்கள்!

கடத்தப்பட்ட கப்பலின் பெயர் எம்.ட்டி. ஏரிஸ் 13. பனாமாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. ஐக்கிய அரபு இராச்சியத்தாலேயே இந்தக் கப்பல் நிர்வகிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட வேளையில் இந்தக் கப்பலில் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. 

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்தக் கப்பல் ஆப்பிரிக்காவில் இயங்கிவரும் கடல்வழிப் பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை என்பதுதான்!

இந்தக் கப்பலில் இருந்து கடைசியாகக் கிடைத்த தகவல், இரண்டு சிறு படகுகள் தம்மைப் பின்தொடர்கின்றன என்பதே! மேலும், இப்படகுகளில் ஒன்றில், ஆயுததாரிகள் சிலர் இருந்ததாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகவல் கிடைக்கப்பெற்ற மிகக் குறுகிய நேரத்தினுள் மேற்படி கப்பலுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது. அதேவேளை, ஏரிஸ் 13 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் ‘நவ்ஃபோர்’ (EU NAVFOR) என்ற அமைப்பு உறுதிப்படுத்தியது. 

நஃவ்போர் என்பது, மேற்கிந்தியக் கடற்பரப்பில் கடற்கொள்ளைக்கெதிராக இயங்கும் ஐரோப்பிய யூனியனின் கடற்படையின் பிரிவாகும். கடத்தப்பட்ட இந்தக் கப்பல் உடனடியாக சோமாலியாவின் பன்ட்லேண்ட் மானிலத்தின் கரையோர நகரமான கலூலாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நஃவ்போர் அறிவித்தது.

ஏரிஸ் கடத்தப்பட்ட கடற்பகுதியும் இங்கு கவனிக்கத்தக்கது.

சோமாலியாவுக்கும், சொகோர்ட்டா என்ற தீவுக்கும் இடையிலான கடல் பகுதியில் ஏரிஸ் 13 பயணித்துக்கொண்டிருந்தபோதே அது கடத்தப்பட்டது. இந்தப் பகுதி கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருந்த பகுதி என்றாலும், செலவு மற்றும் நேர விரயத்தைத் தவிர்ப்பதற்காக இவ்வழியாகவே அனேகமான கப்பல்கள் பயணிப்பது வழக்கம். மேலும், கடந்த ஐந்து வருடங்களாக கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் முழுமையாக முடங்கியிருந்ததால் எவ்விதத் தயக்கமும் இன்றி ஏரிஸ் 13 இவ்வழியாகவே பயணித்தது.

அதைவிட முக்கியமாக, மணிக்கு ஐந்து கடல் மைல் என்ற மிக மெதுவான வேகத்திலேயே ஏரிஸ் 13 பயணித்துக்கொண்டிருந்தது. சிறு படகுகளில் வந்து ஏணிகள் மூலம் கப்பல்களில் ஏறி அவற்றைக் கடத்துவதே கடற்கொள்ளையர்களின் பாணி என்பதால், ஏரிஸ்ஸின் இந்த மிதமான வேகம் கொள்ளையர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இத்தரவுகள் அனைத்தும், கடல்வழிப் போக்குவரத்தின்போது கப்பல் தொழிலில் சிபாரிசு செய்யப்படும் சிறந்த முகாமைத்துவத்தைப் பிரயோகிக்கும் விதிமுறைகளை கப்பல்கள் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகின்றன.

ஏரிஸ் 13 கப்பலைக் கடத்தியவர்கள் ஜக்ஃபர் சாகித் கப்துல்லாஹி என்ற பிரபல கடற்கொள்ளையனின் தலைமையில் இயங்கும் மஜர்ட்டீன் / சிவாக்ரூன் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

2012ஆம் ஆண்டுக்குப் பின் இடம்பெற்ற முதலாவது கடற்கொள்ளையர்களின் கடத்தல் சம்பவம் இது என்றாலும்கூட, கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் முற்றாகத் தமது நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தார்கள் என்று கூறிவிட முடியாது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 11 கப்பல்கள் மீது தாக்குதல்களை இவர்கள் நடத்தியுள்ளனர். எனினும், சர்வதேச கடல் பாதுகாப்புப் படையின் முயற்சியாலும், கப்பல் நிறுவனங்களின் தனிப்பட்ட பாதுகாப்புச் சேவை பயன்பாட்டாலும் இவை முறியடிக்கப்பட்டு வந்தன.

2000ஆம் ஆண்டு முதல் இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாலுமிகள் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, 2010ஆம் ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்தனர். எனினும், இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?

2025-03-15 18:13:45
news-image

பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும்...

2025-03-15 09:52:48
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு...

2025-03-14 20:24:33
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் வீடுகளை களனிபொலிஸின்...

2025-03-14 12:22:27
news-image

தொந்தரவு தரும் மீனவர் தகராறுக்கு தீர்வு...

2025-03-14 08:57:28
news-image

அரசாங்கம் அதன் மந்தவேகத்துக்கு விளக்கம் தரவேண்டியது...

2025-03-13 14:14:51
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவை 58...

2025-03-12 13:39:38
news-image

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?-

2025-03-11 16:44:44
news-image

அட்லாண்டிக்கில் ஏற்படும் பிளவு

2025-03-11 12:02:06
news-image

அண்ணாவையும் எம்.ஜி. ஆரையும் போன்று தன்னாலும்...

2025-03-11 09:26:14
news-image

தடைகள் தகர்க்கப்படுகின்றனவா அல்லது சுவர்கள் எழுப்பப்படுகின்றனவா?

2025-03-10 19:13:31
news-image

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் மருத்துவர் தன்மீதான...

2025-03-10 13:35:49