இலங்கை கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் விடுவிக்கபட்டுள்ளதுடன், இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடுவிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்பகுதியிலுள்ள இரு நாடுகளினதும் எல்லைப் பகுதியில் கைமாற்றப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிவித்து, இந்திய அரசியல்வாதிகள் குற்றச்சாட்டியிருந்ததனர். அதுமாத்திரமின்றி கடந்த வாரத்தில் மீனவர்களின் விடுதலை தொடர்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மீனவர்கள் பிரச்சினை காரணமாக தமிழக மக்கள் கச்சைத்தீவு அந்தோனியார் திருவிழாவிலும் கலந்துக்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.