விமானம் மூலம் போதைப்பொருளுடன் தப்பிச்செல்ல முயன்ற கடத்தல்காரர்களை பிரேசில் பொலிஸார் தடுத்து நிறுத்திய சிறு காணொளியொன்று இணையதளங்களில் பரபரப்பாகப் பரவி வருகிறது.

பிரேசிலில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு அந்நாட்டரசு பெருமுயற்சி எடுத்து வருகிறது. என்றபோதும், தீவிர வலையமைப்பைக் கொண்ட பிரேசில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பொலிஸாருக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பெருவெளி ஒன்றில் இலகு ரக விமானம் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலர் தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், இவர்களைப் பின்தொடர்ந்து வந்த பிரேசில் பொலிஸார் சடுதியாக இயங்கி அந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தினர்.

விமானம் பறப்பதற்குத் தயாராக இருந்தபோதும், தமது காரை வேகமாகச் செலுத்திய பொலிஸார், விமானத்தின் இறக்கைகளுடன் மோதி விமானத்தை செயலிழக்கச் செய்ய நினைத்தனர். என்றபோதும், விமானத்தைக் கடந்து வந்து காரை நிறுத்திவிட்டு துப்பாக்கியுடன் சடாரென வெளியே குதித்த பொலிஸார், விமானியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தக் காணொளி இதுவரை பதினெட்டு இலட்சம் முறை பார்வையிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.