தவராசா சுபேசன்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 46 வயதான சாதாரண ஒரு கிராமப் பெண் தகவலறியும் உரிமைச் சட்டத்தை சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி தவறிழைக்கும் அதிகாரிகளை நேர்ப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
அநீதிகளும் மோசடிகளும் தலைவிரித்தாடும் உலகில் வாழ்ந்து வரும் எமக்கு, அரச திணைக்களங்களின் தன்னிச்சையான மற்றும் உண்மைக்குப் புறம்பான செயற்பாடுகளைத் தட்டிக் கேட்கவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கிடைத்திருக்கும் ஆயுதமே தகவலறியும் உரிமைச் சட்டம். இன்று அரச அதிகாரிகள் மக்களை மதிப்பதில்லை என்ற பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதுவும் பாமர மக்கள் உதாசீனம் செய்யப்படுகின்றனர். மக்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி தவறிழைக்கும் அதிகாரிகள் ஏராளம். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் மக்கள் சேவகர்களை மக்களே தமது கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய விதத்தில் அமையப்பெற்ற சட்டமே இந்த தகவலறியும் உரிமைச் சட்டம்.நேர்மையான அதிகாரிகள் இந்த சட்டத்திற்கு அஞ்சத்தேவையில்லை.
இலங்கையில் பொதுமக்களும் தகவல்களை அணுகிப் பெற்றுக்கொள்ளும் முகமாக தகவலறியும் உரிமைச் சட்டம் 2016ஆம் ஆண்டு ஜுன் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு- 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 03 திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏழு வருடங்களைக் கடந்து விட்ட போதிலும் பொதுமக்கள் இந்த சட்டத்தை கையிலெடுக்கும் அளவிற்கு விழிப்புணர்வைப் பெறவில்லை.ஆனால் ஒரு சிலர் இந்த தகவலறியும் உரிமைச் சட்டத்தை தமக்கான ஆயுதமாகப் பயன்படுத்தி அநீதிகளை வெளிக்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலும் ஊடகவியலாளர்கள் தகவலுக்காக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது மிக மிக குறைவே. அதுவும் கிராம மட்டங்களில் இந்தச் சட்டம் தொடர்பாக மக்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.
மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான தெளிவின்மையே அதற்கு காரணம் .இதனை கிராம புறங்களைச் சேர்த்த அலுவலகங்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன .மக்கள் மத்தியில் தகவலறியும் சட்டம் தொடர்பில் சரியான தெளிவு ஒன்று ஏற்படுமானால் நாட்டில் அநீதிகளுக்கு இடமிருக்காது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 46 வயதான சாதாரண ஒரு கிராமப் பெண் தகவலறியும் உரிமைச் சட்டத்தை சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி தவறிழைக்கும் அதிகாரிகளை நேர்ப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
தகவலறியும் சட்டம் ஊடாக அநீதிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயல்படும் சுந்தரலிங்கம் கலைச்செல்வியுடனான நேர்காணல் ஒன்றின்போது அவர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார் ;
அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி ; நீங்கள் தகவலறியும் சட்டம் தொடர்பான தெளிவினை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்?
பதில் ; கடந்த 2020ஆம் ஆண்டு சட்டத்திற்கும் சமூக நம்பிக்கைக்குமான அமைப்பு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சி நெறியை வழங்கி என்னை வளப்படுத்தியிருந்தது. அவ்வாறு பயிற்சி நெறியைப் பெற்ற நான் வெறுமனே பயிற்சியோடு நின்று விடாது அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கினேன்.இன்றுவரை தகவலறியும் சட்டம் ஊடாக 36 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளேன்.
கேள்வி ; எவ்வாறான பிரச்சனைகளுக்காக,எந்தெந்த திணைக்களங்களிடம் இந்தச் சட்டம் ஊடாக தகவல்களை கோரியுள்ளீர்கள்?
பதில் ; குறிப்பாக சமுர்த்தித் திணைக்களம்,சமூக சேவைகள் திணைக்களம்,தென்னை அபிவிருத்தி அதிகார சபை,பிரதேச செயலகம்,கூட்டுறவுத் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் சுகாதாரத் திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் அதிகமாக இந்த சட்டம் ஊடாக தகவல்களைக் கோரியிருந்தேன்.
இதன்போது தகுதி அற்றவர்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்த்திருந்தமை,தகுதி உடையவர்கள் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளெடுக்கப்படாமை,சமுர்த்திப் பயனாளிகளுடைய பணத்தை சில உத்தியோகத்தர்கள் கையாடல் செய்திருந்த நிலைமை, மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட கொடுப்பனவு வழங்குவதில் நிலவுகின்ற முறைகேடுகள்,மானிய அடிப்படையில் பசளை வழங்கும் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி,உலக உணவுத் திட்டம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார உதவித் திட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பான எனக்கு பொதுமக்களால் வழங்கப்படுகின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளேன்.
கேள்வி ; மேற்படி மோசடிச் செயற்பாடுகளை தகவலறியும் சட்டம் ஊடாக எவ்வாறு சரி செய்தீர்கள்?
பதில் ; தகவலறியும் சட்டம் ஊடாக சரியான தகவல்களைப் பெற்று அதனை ஆதாரமாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.அதனூடாக சமுர்த்தி உதவித் திட்டம் பெறும் தகுதி அற்ற பயனாளிகளை நீக்கி, மீளாய்வு நடவடிக்கை மூலமாக தேவைப்பாடுடைய குடும்பங்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது,மேலும் சமுர்த்திப் பணம் பயனாளிகளுடைய கைகளில் உத்தியோகத்தர்களால் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டு ஒன்லைன் ஊடாக பணத்தை பெறக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டது.இதனால் உத்தியோகத்தர்கள் மக்களின் பணத்தை கையாடல் செய்ய முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை விட அரச சுற்றறிக்கைகளில் கூறப்பட்டுள்ளபடி சரியான பயனாளிகள் யார் என்பதனை அறிந்து அந்தச் சுற்றறிக்கைக்கு புறப்பாக உதவித்திட்டங்களைப் பெறுகின்றவர்கள் நிறுத்தப்பட்டு-சரியான பயனாளிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது.குறிப்பாக இதனூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உண்மையான மாற்றுத்திறனாளிகள் பலர் உதவித்திட்டம் பெற தகுதியானவர்களாக கருதப்பட்டு உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.
கேள்வி ; இதுவரை தகவலறியும் சட்டம் ஊடாக நீங்கள் கோரிய தகவலுக்கு பதில் கிடைக்காத சந்தர்ப்பம் உள்ளதா?
பதில் ; ஆம்,
எரிபொருள் தட்டுப்பாட்டு வேளையில் அதிகளவு எரிபொருள் வைத்திருந்ததாக தெரிவித்து பிரதேச செயலகம் ஒன்றில் இருந்து பொலிஸார் ஒருதொகை எரிபொருளை மீட்டிருந்தனர்.இந் நிலையில் ஓர் அரச திணைக்களம் எவ்வளவு எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்க முடியும் என பொலிஸ் திணைக்களத்தைக் கோரியிருந்தேன்.இருப்பினும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.
கேள்வி ; தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தும் போது நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்ன?
பதில் ; தகவல்களை தமிழ் மொழியில் கோருகின்ற போதிலும் சில திணைக்ளங்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலேயே தகவல்களை அனுப்புகின்றன.சில திணைக்களங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு சிறிய எழுத்தில் தகவல்களை வழங்குவதனால் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
கேள்வி ; நீங்கள் மக்களுக்கு கூற விரும்புவது என்ன?
பதில் ; இது மக்களுக்கு கிடைத்த வரம்.ஆனால் மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வு இல்லை.பொது அமைப்பில் உள்ள பிரதிநிதிகளுக்கு தகவலறியும் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மக்களை விழிப்படையச் செய்ய முடியும்.மோசடிகளையும் குறைக்க முடியும்.இந்தச் சட்டம் ஊடாக கோரும் தகவலுக்கு 14 நாட்களுக்குள் தகவல் கிடைக்கும்.திணைக்கள தகவல் அலுவலரிடம் கோரி தகவல் கிடைக்காத பட்சத்தில் அல்லது தகவலில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் ஆர் .ரி .ஐ -10 என்ற விண்ணப்பப் படிவம் ஊடாக திணைக்கள தலைவரிடம் மேல்முறையீடு செய்து தகவல் கோர முடியும்.அதிலும் திருப்தி இல்லையெனில் ஆணைக்குழுவை நாட முடியும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எம் மக்கள் மத்தியில் உள்ள பாரிய குறைபாடு என்னவென்றால், இருப்பதனை கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் கிடைக்காத ஒன்றிற்கு ஆதங்கப்படுவார்கள்.பொதுமக்கள் கைவசம் உள்ள மிகச்சிறந்த ஆயுதம் தகவல் அறியும் சட்டம்.
உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிகச் சிறப்பான நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் மக்கள் தமக்கு கிடைத்த இந்த உரிமையைப் பயன்படுத்தாமல் உள்ளனர்.
தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான தெளிவை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். அதனூடாக ஆரோக்கியமான, நேர்வழியில்
எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.நாட்டில் மோசடிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் இருக்காது.உத்தியோகத்தர்கள் விரும்பியோ/விரும்பாமலோ உண்மையாகவும்-நேர்மையாகவும் பணியாற்ற வேண்டிய நிலைமைக்குள் தள்ளப்படுவார்கள்.
தற்போது நிகழ்நிலை காப்புச் சட்டம்,பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் எம் சமூகம் நாட்டில் தகவல் பெறும் உரிமையை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட ,மக்களே இலகுவாக செலவின்றிக் கையாளக் கூடிய இந்த தகவல் அறியும் சட்டத்தின் வலிமையை அறிந்தும் பயன்படுத்தாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
தகவல் அறியும் சட்டத்தில் இராணுவத் தகவல்கள்,தனிப்பட்ட நபரின் அந்தரங்க விடயங்கள்,தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியாவிட்டாலும் பொதுமக்கள் தமக்கு அரச அதிகாரிகளால் அநீதி இழைக்கப்படும் போது,கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்கப் பெறாத போது,தகவல் மறுக்கப்படும் போது இந்த வலுவான சட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எனவே பொதுமக்கள் அரச உதவித்திட்டங்கள்,அபிவிருத்திகளில் முறைகேடு இடம்பெறுவதாக சந்தேகம் கொண்டால் உடனடியாக இந்த சட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.பொதுமக்கள் அனைவரும் தகவல் அறியும் சட்டத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் இலஞ்சம்-ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM