(நா.தனுஜா)
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய சகல அதிகாரங்களையும் வழங்குவதற்கு தனது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்து நேர்மையானதல்ல. அவருக்கு ஜெனிவாவில் சர்வதேச சமூகத்தை சமாதானப்படுத்தவேண்டும். அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டும். அதனைத் தாண்டி பொலிஸ் அதிகாரங்களுடனோ அல்லது பொலிஸ் அதிகாரம் இன்றியோ அவர் எந்தவொரு அரசியல் உரிமையையும் தமிழர்களுக்கு வழங்கமாட்டார் என தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய சகல அதிகாரங்களையும் வழங்குவதற்குத் தனது அரசாங்கம் தயாராக இருப்பதாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் கூறியிருப்பதாவது:
இது வேடிக்கையாக உள்ளது. அரசாங்கம் தருவதற்கென எதுவுமில்லை. 13ஆவது திருத்தம் என்பது எமது நாட்டு அரசியலமைப்பின் ஓரங்கமாகும். அதனை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அவ்வாறிருக்கையில் அவ்வதிகாரங்களைத் தருவதாக ஜனாதிபதி கூறுவதன் மூலம் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் 'சிங்களவர்களால் தெரிவுசெய்யப்பட்ட - சிங்களவர்களுக்கான சிங்கள அரசாங்கம்' எனும் இனவாதப்போக்கிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்துவந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அடையாளம் காண்பது தொடர்பில் ஜனாதிபதி எம்முடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை முன்னெடுத்தார். இருப்பினும் அவை கலந்துரையாடல் என்ற எல்லையை தாண்டவில்லை. மாகாண சபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அல்லது மீள வழங்கப்படவேண்டிய அதிகாரங்களைக் கண்டறிவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக இப்பணிகளை முன்னெடுப்பதற்கு விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமிப்பதாகவும், மாகாண சபைகளுக்கு அவசியமான சட்டங்களை வகுப்பதாகவும் ஜனாதிபதி உத்தரவாதம் அளித்தார்.
எது எவ்வாறிருப்பினும் தற்போது ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து அரசியல் சார்ந்த தன்மையைக் கொண்டிருக்கின்றது. அவர் ஜனாதிபதி தேர்தலின்போது எமது மக்களில் குறிப்பிட்டதொரு தரப்பினரிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கின்றார். ஆனால் வெற்றி பெற்றதன் பின்னர் அவர் கொண்டிருக்கும் கடப்பாட்டை மறந்துவிடுவார். நான் தற்போதைய ஜனாதிபதியை மாத்திரம் குறைகூறவில்லை. முன்னைய ஜனாதிபதிகளும் இதனையே செய்தனர். அவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் வேண்டும்.
அதனைத் தாண்டி தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதில் அவர்களுக்கு நாட்டமில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதிலிருந்து வேறுபட்டவர் என்பதை நான் கூறியாகவேண்டும். அவரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு வரைபு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியினால் பாராளுமன்றத்தில் வைத்து எரிக்கப்பட்டது.
பொலிஸ் அதிகார விவகாரத்தில் தமிழ் மக்கள் அவர்களுக்குள் பிளவுபட வேண்டுமென ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார். மாகாண சபைகளுக்கான வரையறுக்கப்பட்ட அளவிலான பொலிஸ் அதிகாரம் அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் இறையாண்மையுடைய இரு தேசங்களுக்கு இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் விளைவாகும். எனவே ஏற்கனவே சட்டத்தில் இருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி எவ்வாறு பேரம் பேசுகின்றார் எனப் புரியவில்லை.
என்னைப் பொறுத்தமட்டில் ஜனாதிபதியின் கருத்து நேர்மையானதல்ல. மாறாக அவருக்கு ஜெனிவாவில் சர்வதேச சமூகத்தை சமாதானப்படுத்த வேண்டும். அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டும். அதனைத் தாண்டி பொலிஸ் அதிகாரங்களுடனோ அல்லது பொலிஸ் அதிகாரம் இன்றியோ அவர் எந்தவொரு அரசியல் உரிமையையும் தமிழர்களுக்கு வழங்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM