போர் - விமர்சனம்

02 Mar, 2024 | 05:46 PM
image

தயாரிப்பு : டி சிரீஸ் & ரூக்ஸ் மீடியா & கேட் வே பிக்சர்ஸ்

நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜன், டி.ஜே. பானு மற்றும் பலர்.

இயக்கம் : பிஜாய் நம்பியார்

மதிப்பீடு : 2.5 / 5 

மணிரத்னத்திடம் சினிமாவிற்கான திரை மொழியை கற்றவர் என்ற அடையாளத்துடன் தனது படைப்பை வழங்கி வரும் இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'போர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தனியார் பாடசாலையில் சிறாராக கல்விப் பயிலும் போதே சீனியர் மாணவரான பிரபு செல்வன் ( அர்ஜுன் தாஸ்) முன்னிலையில் அவரது ஜூனியரும், நண்பருமான யுவா (காளிதாஸ் ஜெயராம்) அவமானப்படுத்தப்படுகிறார். சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் போது, அவர்களை கண்டித்து காப்பாற்றவில்லை என்ற கோபம் யுவா (காளிதாஸ் ஜெயராம்) விற்கு உண்டாகிறது. இதனை கல்லூரியில் படிக்கும் போது அங்கு சீனியர் மாணவராக இருக்கும் பிரபு செல்வனை ஜூனியர் மாணவரான யுவா பழிக்கு பழியாக பிரபுவை அவமானப்படுத்தினாரா? இல்லையா? என்பதுதான் இதன் கதை.

கல்லூரி வளாகத்தில் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான ஈகோவை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதைக்கு இணையாக கல்லூரி மாணவர்களின் தேர்தல், கல்லூரி மாணவிகளுக்கிடையான தன்பாலின காதல், அரசியல் கட்சியின் குறுக்கீடு, சாதிய ஒடுக்கு முறை, பாலியல் வன்முறை  என பல விடயங்களை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும்.., காட்சிகளின் உருவாக்கத்தில் சர்வதேச தரம் இருந்தாலும்.. பாடல்களும், பின்னணி இசையும் இளமைக்குரிய துடிப்புடன் இடம்பெற்றாலும்... முதன்மை பாத்திரங்களான அர்ஜுன் தாசின் நடிப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததாலும்.. காளிதாஸ் ஜெயராமின் அசுர உடல் மொழி அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தாமல் இருப்பதாலும்.. இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பு எதிர்பார்த்த வெற்றியை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை.

தமிழ் மொழியில் நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும்  அரசியல்வாதியின் தோற்றம்.. உச்சகட்ட காட்சியில் கதாநாயகனின் வேட்டி அவதாரம்  சிவப்பு துண்டு அணிவிப்பது  ஆகியவை கேரள மாநில அரசியல் பின்னணியை அப்பட்டமாக விவரிப்பதால்  தமிழ் ரசிகர்களுக்கு அந்நியமாகிறது. 

அர்ஜுன் தாஸ் பெரிதாக எதையோ செய்யவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இறுதியில் 'கோபம் தீர அடி' என சொல்வது ஏமாற்றத்தை தருகிறது.

காளிதாஸ் ஜெயராம் குவின்டால் எடையுள்ள தன் உடலை தூக்கிக்கொண்டு காதலிப்பதும், முத்தமிடுவதும், வில்லத்தனம் செய்வதும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

சஞ்சனா நடராஜன் - விதவிதமான நவீன உடைகளில் தோற்றமளித்து.. கல்லூரி மாணவிகளின் இலக்கில்லா வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது போல் நடித்திருப்பதை பாராட்டலாம்.

அர்ஜுன் தாசின் காதலியாக நடித்திருக்கும் டிஜே பானு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரசிகர்களை தன் கண்களாலோ  இளமையான உடல் மொழியாலோ.. ஈர்க்கவில்லை என்பதுதான் குறை.

கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் இதிலும் இருக்கிறது. எதுவும் மனதைக் கவரவில்லை. இருப்பினும் கதாபாத்திரங்கள் தங்கள் மனதில் தோன்றியதை அது தவறு என்றாலும் துணிந்து பேசுகிறார்கள். இது இன்றைய இளம் தலைமுறை பிரதிபலிப்பு என்பதால் வசனத்தையும், வசனகர்த்தாவையும் பாராட்டலாம்.

போர் - அக்கப்போர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்