சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் - வாங்கல் : ஆரம்பகட்ட விசாரணைகள் 14 நாட்களுக்குள் நிறைவடைய வேண்டும் : மாளிகாகந்த நீதவான் அதிகாரிகளுக்கு உத்தரவு

01 Mar, 2024 | 07:10 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்தியக் குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும், மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கின் 8ஆவது சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,  உடல் நலம் தொடர்பில் பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு, கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாவதை அவர் தவிர்த்திருப்பதாக வாதங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவரது உடல்நலக்குறைவு தொடர்பில் நீதிமன்றத்துக்கு போலியான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியர்  தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் குறிப்பிட்டார்.

தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (29) மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபயவிக்கிரம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, “எனது சேவை பெறுநர் நின்று கொண்டிருக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். அவர் ஆசனத்தில் அமர்வதற்கு அனுமதியளியுங்கள்" என கோரிக்கை விடுத்திருந்தார். 

இதற்கு பதிலளித்த நீதவான் “நின்றுகொண்டிருக்க முடியாத எந்த சந்தேக நபரும் குற்றவாளிக் கூண்டில் அமர முடியும்” என குறிப்பிட்டார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருந்த காரணிகளாக குறிப்பிடப்பட்ட உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனையை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்திய குழுவின் அறிக்கையை அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம திறந்த மன்றில் முன்வைத்தார்.

".....கனம் நீதவான் அவர்களே, இதுவரையில் எனது கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள விசேட வைத்திய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு மூச்சு விடுவதற்கும்,  மார்பின் வலது புறத்தில் வருத்தம் காணப்பட்ட போதிலும், அது நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கவில்லை என நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழு குறிப்பிட்டுள்ளது."

அத்துடன் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியருக்கு உரிய கட்டளை பிறப்பிக்குமாறு உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”

இதற்கு பதிலளித்த நீதவான், இதுபோன்ற வழக்குகளில் ஏனைய சந்தேக நபர்களை போன்று அறிக்கை வழங்கக் கூடாது என சிறைச்சாலை வைத்தியர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவ்வாறான அறிக்கை நீதிபதிகளின் தீர்மானங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

எனவே, சட்டமா அதிபர் தலையிட்டு வைத்திய சபையுடன் ஒன்றிணைந்து சிறைச்சாலை வைத்தியர் நீதிமன்றத்துக்கு உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்கும் வகையில் தயார்ப்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு விவகாரத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் தலையீடு எவ்வாறு இருந்தது என நீதவான் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம ...கனம் நீதவான் அவர்களே “முன்னாள் சுகாதார அமைச்சரால் போலியான முறையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்தை வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் கீழ் உள்ள மருத்துவ உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல் பிரிவே தயார்ப்படுத்தி இருக்கிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மேலதிக வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள சி.ஐ.டிக்கு முன்னிலையாகுமாறு அவரது நிரந்தர முகவரிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தோம். அதனை அவரது மனைவி பொறுப்பேற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், அவரது தொலைபேசி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தற்காலிகமாக வசிப்பதாக அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ள முகவரியும் போலியானது.

இவ்வாறான நிலையில் அவர் நேற்றுமுன்தினம் பகல் விசாரணை அதிகாரிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பியிருக்கிறார்.

மேலும் வனாத்துவில் பகுதியில் இருப்பதாகவும் பிறிதொரு நாளில் வருகை தந்து வாக்குமூலம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டபோது இரண்டு நாட்கள் விடுமுறை எனக் கூறிய போதிலும் அவர் காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. ஆகவே இந்த காரணங்களை ஆராய்ந்து நாளை காலை 9 மணிக்கு சி.ஐ.டி.,க்கு ஆஜராகுமாறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான் நபர் ஒருவர் விசாரணைகளை தவிர்ப்பாராயின்  அதற்குரிய விடயதானங்களுக்கு அமைய உரிய  அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுங்கள் என்றார்.

சர்ச்சைக்குரிய இந்த மருந்து கொள்வனவு மற்றும் விநியோகப் பிரிவின் உறுப்பினராக செயற்பட்ட வைத்தியர் ஜெயனாத் புத்திக்க,  விசாரணைகளை புறக்கணித்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் சந்தேக நபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்து அவரை  நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அரச சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதவான் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளையும் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும் மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய  சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோசினி அபேவிக்கிரம உத்தரவிட்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38