சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள மரபணு நெருக்கம்

Published By: Vishnu

01 Mar, 2024 | 05:27 PM
image

  • தெற்காசியாவில் வேறு எந்த இனக் குழுமங்களுக்கும் இடையில் இத்தகைய நெருக்கம் கிடையாது என்று ஆய்வில் கண்டுபிடிப்பு 

பி.ரி.ஐ. (புதுடில்லி ) இலங்கையின் இரு பெரிய இனக்குழுமங்களான சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் மரபணு ஒப்புடைமை தெற்காசியாவில் வேறு எந்த இனக்குழுமங்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய மரபணு ஒப்புடைமையை விடவும் மிகவும் நெருக்கமானது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த மரபணு விஞ்ஞானிகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 'ஐ சயனஸ் ' (i Science)என்ற சஞ்சிகையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகள் இலங்கையின் இனக்குழுமங்களின் தோற்றுவாய்களையும் அவற்றுக்கு இடையிலான சமூக ஊடாட்டங்களையும் தெளிவுபடுத்துகிறது.

குறிப்பிடத்தக்க கலாசார மற்றும் மொழியியல் வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கடந்த காலத்தில் பல நூற்றாண்டுகளாக கலந்து வாழ்ந்திருப்பதன் விளைவாக அவர்களுக்கிடையில் மரபணு ஒப்புடைமை ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

" பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினரான இலங்கை தமிழர்களுக்கும் இடையில் பரஸ்பர அவநம்பிக்கையும் பகைமையும் இருந்துவருகின்ற போதிலும், உள்நாட்டுப் போரொன்றில் அவர்கள் ஈடுபட்டபோதிலும் எமது கண்டுபிடிப்புக்கள் மிகுந்த வியப்பைத் தருகின்றன " என்று இந்தியாவின் வாரணாசியில் உள்ள பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் இலாகாவை சேர்ந்த பேராசிரியர் கியனேஷ்வர் ஷோபே கூறுகிறார்.

லக்னோவில் உள்ள பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தையும் மங்களூர் பல்கலைக்கழகத்தையும் இலங்கையின் கொழும்பு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்களும் பெனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இலங்கையின் மிகப்பெரிய இனக் குழுமத்தினரான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களும்  உள்நாட்டில் சோனகர் என்று அறியப்படும் முஸ்லிம்களும் முறையே 11.1 சதவீதத்தினராகவும் 9.3 சதவீதத்தினராகவும்  இருக்கின்ற அதேவேளை இந்தியத் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராக இருக்கிறார்கள். மிகவும் சிறிய ஒரு சதவீதத்தில் பறங்கியரும் மலாயர்களும் வேடர்களும் ( ஆதிவாசிகள்) இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கி.பி.500 அளவில் அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

"சிங்களவர்கள் இந்தியாவின் மேற்கு பாகத்தில் இருந்து குடிபெயர்ந்த அதேவேளை இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தார்கள். இரு இனத்தவர்களின் குடிபெயர்வுகளும் ஏககாலத்தில் இடம்பெற்றது. இரு தரப்புகளில் இருந்தும் பல நூறு வருடங்களாக மரபணு பரவல் அல்லது மரபணு ஓட்டம் ( Flow of genes) இடம்பெற்றிருப்பதாக தோன்றுகிறது. அதன் விளைவே இந்த மரபணு ஒப்புடைமை" என்று கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விஞ்ஞானி ஆர். ரணசிங்க கூறினார்.

இந்த துறையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மரபணு விபரங்களில் ஆழமானவையாக இருக்கவில்லை. அதனால் அவை தீர்க்கமான முடிவாகக் கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள்.

"ஒரு தனிநபரில் ஒரு ஐந்து இலட்சம் மரபணு  மாற்றம் அல்லது மரபணு  விகாரம் ( Genetic mutations ) மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வாக இது அமைந்திருக்கிறது.

இந்த பணியின் முனைப்பு மற்றும் பரந்தளவிலான வீச்செல்லை காரணமாக  எமது ஆய்வின் முடிவுகள் தீர்க்கமானவையாகவும் 

வலுவானவையாகவும் இருக்கிறது என்று நம்புகிறோம்" என்று ஷோபே கூறினார்.

ஒரு தனிநபரின் மரபணு  விபரங்கள் அவரைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மரபணு விபரங்களுடன் பொதுத்தன்மையை வழமையாகக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

" உதாரணமாக நாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த ஒருவரின் வட இந்தியாவில் உள்ள வேறு  நகரங்களில் இருப்பவர்களுடன் பெருமளவுக்கு மரபணு ஒற்றுமையைக் கொண்டிருப்பார். ஆனால் இலங்கை ஆய்வில் தென்னிந்தியாவை விடவும் இந்தியாவின் மேற்கு பாகத்தின் மரபணுக் கூறுகளைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும் மராட்டியர்களுக்கும் ஒரு பொதுவான வேருக்கான தடயங்கள் இருக்கின்றன " என்று ரணசிங்க கூறினார்.

இனத்துவ மற்றும்  மொழியியல் எல்லைக்கு அப்பால் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வலுவான மரபணு பரவல் இருப்பது  வியப்பைத் தருகின்ற இன்னொரு அம்சமாகும். தெற்காசியப் பின்புலம் ஒன்றில் இது வழமைக்கு மாறானதாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள சிங்கபுரவில் இருந்து சிங்களவர்கள் வந்தார்கள் என்றும் புராணக்கதைகள் கூறுவதை அவதானித்த விஞ்ஞானிகள் குழு அது சரியான இடம் அல்ல என்று மறுத்துரைக்கிறார்கள்.

" இரண்டு சிந்தனைகளைக் கொண்ட பிரிவினர்  இருக்கிறார்கள்.  ஒரு பிரிவினர்  அந்த இடம் வடமேற்கு இந்தியா என்று கூறுகிறார்கள். மற்றையவர்கள் மேற்கு வங்காளம் என்று கூறுகிறார்கள்.எமது ஆய்வு அவர்களின் தாயகம் வடமேற்கு  இந்தியா என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது." என்று பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் புராதன மரபணு ஆய்வுகூடத்தைச் சேர்ந்த இன்னொரு மரபணு விஞ்ஞானி நிராஜ் ராய் கூறினார். 

இந்த ஆய்வை நடத்த முடிக்க ஐந்து வருடங்கள் சென்றது. இலங்கைத் தமிழர்கள் (88), சிங்களவர்கள் (129 ), இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (56),  இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள்  (562 ) ஆகியோரிடமிருந்து 834 மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13