பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி உறுதியும்! 

28 Feb, 2024 | 01:52 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமையவுள்ள பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 1300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை பத்து மாவட்டங்களில் 45 தோட்டப்பகுதிகளில் இடம்பெற்றன. இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமையே வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன. 

இதில் பிரதானமான விடயம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பி வேலுகுமார் எழுப்பியிருந்த கேள்வியாகும். மேற்படி வீட்டுத்திட்டம் ஏழு பேர்ச்சிலா அல்லது பத்து பேர்ச்சிலா முன்னெடுக்கப்படுகின்றது என அவர் கேள்வியெழுப்ப அதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பத்து பேர்ச் என பதில் வழங்கியிருந்தார். 

இந்த பத்தாயிரம் வீட்டுத்திட்டமானது பத்து பேர்ச் காணியிலேயே முன்னெடுக்கப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டும் அதற்கான அங்கீகாரம் இன்னும் கிடைத்ததாக செய்திகள் இல்லை. எனினும் தற்போது வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே  குடியிருப்புகளை அமைக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக  பத்து  பேர்ச்  காணிக்கான   அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் இவ்விடயத்தில் மலையகப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து  அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டியவர்களாக உள்ளனர்.

பத்து பேர்ச் காணி அங்கீகாரம் என்றால் ஏழு பேர்ச் காணியில் வீடும் மிகுதி மூன்று பேர்ச் நிலத்தில் தொழிலாளர்கள் காய்கறி செய்கை அல்லது வேறு எந்த வீட்டுக் கைத்தொழில் ஒன்றையாவது மேற்கொள்வதற்கான வசதிகளா அல்லது அமையவிருக்கும் குடியிருப்புகள் முழுவதுமாக பத்து பேர்ச் காணியில் அமைக்கப்படுமா என்பது குறித்த தெளிவுகள் அவசியம். 

இதே வேளை ஏப்ரல் மாதமளவில் காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் அறிவித்துள்ளார். மேற்படி உறுதி பத்திரத்தில் இந்த காணியின் அளவு பற்றிய தெளிவைப் பெறலாம். எனினும் காணி உரிமை மற்றும் பத்து பேர்ச் காணியில் வீட்டுத்திட்டம் என்ற இரண்டு விடயங்களுக்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை முக்கிய விடயம். இதில் தொழிலாளர்களின் வேதன விடயமும் உள்ளடங்கியுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களின் நிலம் அது சார்ந்த உரிமை மற்றும் வாழ்வாதார உரிமை என்ற மூன்று அடிப்படை  உரிமைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் சாராராக கம்பனிகள் உருவெடுத்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் அனைத்து மலையக கட்சிகளும் ஒன்று சேர வேண்டியதொரு கட்டாயம் எழுந்துள்ளதை மறுக்க முடியாது. பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தை நாமே பெற்றுத்தந்தோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணி கூறியிருந்தது. அதற்கு முன்பதாக 2014 ஆம் ஆண்டு  நான்காயிரம் வீட்டுத்திட்டம் இலங்கை தொழிலாளர் கங்கிரஸாரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாயினும் குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் பல்வேறு காரணங்களால் பிற்போடப்பட்டே வந்தன.  

பின்பு நல்லாட்சி காலத்தில்   இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன்  (மலை நாட்டு புதிய கிராமங்கள்  அமைச்சு) புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இத்திட்டத்தை ஆரம்பித்தது. எனினும் இவ்வீட்டுத்திட்டங்களும் முழுமையாக பூர்த்தியடைவதற்கு முன்பதாக நல்லாட்சியின் காலம் நான்கு வருடங்களில் முடிவுக்கு வந்தது. 

அவ்வீட்டுத்திட்டம்  2023 இன்று இறுதியிலேயே பூர்த்தியடைந்தது. ஆகவே இவ் வீட்டுத்திட்டம் பூர்த்தியடைய பத்து வருடங்கள் எடுத்துள்ளன. அதே போன்று 2017 ஆம் ஆண்டே இந்திய அரசாங்கமானது மேலதிகமாக பத்தாயிரம் வீட்டுத்திட்டத்துக்கான ஒப்புதலை அளித்திருந்தது. எனினும் நான்காயிரம் வீட்டுத்திட்டம் முழுமையடைந்த பின்னர் இது ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் , கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஆறு வருடங்களுக்குப்  பிறகே இத்திட்டம் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இங்கு யார் ஆரம்பித்து வைத்தார்கள் யார் பூர்த்தி செய்யப்போகின்றார்கள் என்ற வாதங்கள் அவசியமற்றவை. 

பெயர் போட்டுக்கொள்ளும் அரசியலை மக்கள் உட்பட தற்கால இளைஞர் யுவதிகள் வெறுக்கின்றனர் என்பதை மலையக அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களின் உணர்வுகளை தற்போது சமூக ஊடகங்களில் தாராளமாக பார்க்கக் கூடியதாக உள்ளது. 

 பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக  1300 வீடுகளை  இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்துக்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது. எது எப்படியானாலும் வருடத்துக்கு ஐந்நூறு வீடுகள் அமைக்கப்பட்டாலும்  பத்தாயிரம் வீடுகளையும் பூர்த்தி செய்ய இருபது வருடங்கள் செல்லும். இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த 14 ஆயிரம் வீடுகளும் மலையக பெருந்தோட்டப்பகுதியில் தற்காலிக குடில்கள் மற்றும் லயன் தொகுதிகளில் வசிக்கும் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் குடியிருப்புப் பிரச்சினைகளை தீர்க்கப்போவதில்லை.

ஆகவே பெருந்தோட்டப்பகுதி வீடமைப்புதிட்டங்களில் இந்தியாவை மாத்திரம் எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை. இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பு இந்த மக்களுக்கு அவசியமாகவுள்ளது. அல்லது காணி உரித்தை வழங்கினால்  தொழிலாளர்கள்  வங்கிக்கடன் ஊடாகவாவது தமது நிலத்தில் தமக்கு ஏற்ற குடியிருப்பை அமைத்துக்கொள்ள வழிபிறக்கும். ஆகவே  இந்த சமூகத்தின் எதிர்கால  குடியிருப்புப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இப்போதிருந்தே ஆராயவேண்டியுள்ளது. 

இரண்டு இலட்சம் குடியிருப்புகளை  பெருந்தோட்டப்பகுதிகளில் புதிதாக அமைக்க வேண்டியிருக்கின்றது. இதில் இந்திய நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் 14 ஆயிரம் வீட்டுத்தொகுதிகளுக்கு அடிபட்டுக்கொண்டிருப்பது நியாயமா? அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இடம்பெற்று மலையக மக்களுக்கென ஜனாதிபதி செயலணி   அமைக்கப்பட்டு தான் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றில்லை. மலையக பெருந்தோட்ட மக்களின் ஆதரவு அல்லது வாக்கு வங்கிகள் தமக்கு பயன்படுத்தப் பட்டால் மாத்திரமே அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற எண்ணத்தை சிங்கள தேசிய கட்சிகளின் தலைமைகளின் மனதில், மலையக கட்சிகள் வளர்க்க ஆரம்பித்துள்ளமையானது மிகவும் அபாயகரமானதாகும். பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமானால் மக்களின் வாக்குகள் தமக்கு வேண்டும் என நினைப்பவர்களை எவ்வாறு தலைவர்கள் என அடையாளப்படுத்துவது? 

தமக்கு வாக்களிக்கும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும், மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் மலையக கட்சிகள் உள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21