மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கான விஜயம் இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு பிரச்சினையா? அல்லது வேறு பின்னணியா என்று மீரா மக்காம் பள்ளிவாசலின் நிர்வாகச் சபைத் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சி.எம்.யாகூப் கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பு, பாகிஸ்தான் தூதுவராலயத்திலிருந்து பாகிஸ்தான் தூதுவர் கண்டிக்கான பாகிஸ்தான் கவுன்சிலர் அப்சால் மரிக்கார் உள்ளிட்ட குழுவினர் பள்ளிவாசலுக்கு வருகை தந்து எம்மை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்  கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளும்போது கண்டி மீராமக்காம் பள்ளிக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று கூறியிருந்தனர். இதன் பொருட்டு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பள்ளிவாசலில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 06 ஆம் திகதி முற்பகல் 11.00 மணியளவில் சுமார் 15 நிமிட நேரங்களுக்குள் வரவேற்புரை, பள்ளிவாசல் தொடர்பான வரலாறு உரை, நன்றியுரை போன்ற நிகழ்ச்சி நிரல்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமருக்கு பள்ளிவாசலை சுற்றிக்காட்ட வேண்டும் என்றும் எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

முன்னதாக எமக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் பாகிஸ்தான் தேசியக்கொடிகளும் அனுப்பிவைக்கப்படாததால் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்த போது பாக் பிரதமரின் மீராமக்காம் பள்ளிவாசல் விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. விஜயம் தவிர்க்கப்பட்டதற்கான காரணத்தை வெளிவிவகார அமைச்சிடம் கேட்குமாறு தெரிவித்தனர்.

இன்றைய சுமுகமான காலகட்டத்தில் மீராமக்காம் பள்ளிவாசலில் பாதுகாப்பு காரணத்தை காரணம் காட்டுவது ஆச்சரியமாகவுள்ளது என தெரிவித்த யாக்கூப், பாக் பிரதமரின் வருகை இங்கு தவிர்க்கப்பட்டமை குறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் ஜமாத்தாரும் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக கவலையுடன் தெரிவித்தார்.