றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

28 Feb, 2024 | 01:57 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (27) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தின் 5ஆவது போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 8 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் இலகுவாக வெற்றிகொண்டது.

கடந்த வருடப் போட்டியின் ஆரம்பத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், இந்த வருடம் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி தனது முயற்சியை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த வருடப் போட்டிளில் இதுவரை அணி ஒன்று பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

குஜராத் ஜயன்ட்ஸ் அணி சார்பாக மூவர் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் மத்திய வரிசை வீராங்கனை தயாளன் ஹேமலதா திறமையை வெளிப்படுத்தி 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவரை விட ஆரம்ப வீராங்கனை ஹாலீன் டியோல் 22 ஓட்டங்களையும் பின்வரிசையில் ஸ்நேஹ் ராணா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சொபி மொலினெஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேனுகா சிங் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 12.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா 43 ஓட்டங்க ளையும் சபினெனி மேகனா ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் எலிஸ் பெரி ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்று தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்