அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

27 Feb, 2024 | 02:27 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஆதரவான சர்வதேச சூழ்நிலை இருக்கின்ற போதிலும், இலங்கை இனநெருக்கடியில் ஒரு தேக்கநிலை இருக்கிறது போன்று தெரிகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா தலைமையில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் குறிப்பாக நீண்டகால இனநெருக்கடிக்கு நீதியானதும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதற்கு ஆதரவு வழங்கி வருகிறது.

கையாள முடியாதவையாக காணப்பட எத்தனையோ பிரச்சினைகள் திடீரென்று காணாமல் போன பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவை தாங்களாகவே காணாமல் போகவில்லை. பெருமளவு பணிகள்  கடந்த காலத்தை மறந்து எதிர்கால நலன்களை மனதிற்கொண்ட தலைவர்களினால் திரைக்குப் பின்னால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இலங்கையும் அதன் சந்தர்ப்பத்தை தாமதிக்காமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அரசியல் தலைவர்களும் சிந்தனாவாதிகளும் விவேகமாக நடந்துகொண்டால் அது சாத்தியமாகும். இது விடயத்தில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான மேற்கு ஐரோப்பா இலங்கை பின்பற்றக்கூடிய ஒரு உதாரணமாக விளங்குகிறது.

இரண்டாவது உலகப் போருக்கு முன்னதாக ஐரோப்பிய நாடுகள் நிரந்தரமாக மோதலில் இருந்தன. அவற்றின் கூட்டுக்கள் போட்டி முகாம்களில் ஒன்றில் இருந்து மற்றதுக்கு மாறிக்கொண்டிருந்தன.பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஒரு நூற்றாண்டு கால போரை ஐரோப்பா கண்டது. 

ஆனால், இரண்டாவது உலகப் போரின் விளைவான பேரழிவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கமும் உருக்குலைந்த ஐரோப்பிய பொருளாதாரங்களின் மீட்சிக்கு உதவியது. மேற்கு ஐரோப்பாவில் போர் என்பது நினைத்துப் பார்ககமுடியாததாக  மாறியது.

அண்மையில் காலமான ஜொஹான் கல்ருங் போன்ற உலகப்புகழ்பெற்ற சமாதானச் சிந்தனாவாதிகளை ஐரோப்பா தோற்றுவித்தது. நேர்மறையான சமாதானத்துக்கும் எதிர்மறையான சமாதானத்துக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படையிலான வேறுபாட்டை கல்ருங் விளக்கிக்கூறினார். அத்தகைய தோற்றப்பாடு இலங்கையிலும் கூட இருக்கமுடியும்.

மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரும் அண்மைக்கால பொருளாதார வீழ்ச்சியும் போர்களங்களாக இருந்த  வடக்கு , கிழக்கிற்கு  வெளியே இனநெருக்கடியை பின்னரங்கத்துக்கு தள்ளிவிட்டன. ஆனால், அது எதிர்மறையான சமாதானமே. போர் இல்லையே தவிர, இந்த நாடு தங்களது தாயகம் என்று தாங்கள் அதன் பிள்ளைகள் என்றும் சகல சமூகத்தவர்களும் கொண்டாடக்கூடிய சமாதானம் அல்ல.

இளைஞர்களுக்காக  ' பன்முக சமூகம் ஒன்றில் வாழ்தல் ' பற்றிய கருத்தரங்கு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலங்கையில் உள்நாட்டுப்போர் ஒன்று இடம்பெற்றதைப் பற்றியோ அல்லது அந்தப் போருக்கு வழிவகுத்த காரணங்கள் பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. அது மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கில் இருந்து வந்த இளைஞர்களும் கூட அந்த விடயத்தைப் பற்றி பேசுவதில் பெரிய அக்கறையைக் காண்பிக்கவில்லை.

தேசியவாதிகளின் சீற்றம் எதுவுமின்றி இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பைக் குறைப்பதன் மூலம்  அதன் அளவை குறைப்பதற்கு  அரசாங்கம் எடுத்த தீர்மானம் இந்த புதிய தோற்றப்பாட்டின் மிகவும் 

புதிய தோற்றப்பாட்டின் நேர்மறையான அறிகுறியாகும். மக்களின் கவனம் பொருளாதரம், ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற விடயங்களில் குவிந்திருக்கிறது.

இனநெருக்கடிக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றைக் காண்பதற்கான சாத்தியத்தைக் கொண்டுவரும் முன்முயற்சிகள் ஆபத்தில்லாதவையாக நோக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது. அதை அவ்வாறே தொடர்ந்து வைத்திருக்கவேண்டும்.ஆனால், 13 வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு இருக்கும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலம் இதற்கு மாறானதாக இருக்கிறது.

நம்பிக்கையை வென்றெடுத்தல் 

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு ஆதரவும் அங்கீகாரமும் வழங்க பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டிய தேவை குறித்து சகல இன,மத சமூகங்களினதும் தலைவர்கள் மத்தியல் புரிந்துணர்வு அதிகரித்துவருகிறது. சிறப்பான எதிர்காலத்துக்காக சமூகங்களுக்கு வலுவூட்டுதல் என்ற தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய அமைப்பினால் ( International Human Rights Global Mission )நிகழ்வு ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அந்த அமைப்பின் பிரதம ஆலோசகர்  எம்.வை.எம். நியாஸ் தலைமையில் ஏற்பாட்டுக் குழுவினர் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை அழைத்திருந்தனர். ஆனால், அவரால் வந்து பங்கேற்கமுடியாமல் இருந்தபோது அவர்கள்  நடுநிலை உணர்வின் ஒரு வெளிப்பாடாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை அழைத்து பரிசளிப்பு வைபவத்துக்கு தலைமைதாங்க வைத்தனர்.

மாற்றுத்திறனாளிகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அகிம்சைவழி தொடர்பாடலில் மகத்தான சேவை செய்துவரும் கலாநிதி ஜோ வில்லியம் உட்பட  பல்துறைச் சமூக சேவையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிப்பதில் சகலரையும் அரவணைக்கும் ஒரு அணுகுமுறை வெளிக்காட்டப்பட்டது.

தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட இரு அண்மைய முன்முயற்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், கலந்தாலோசனைகளை நடத்த மிகவும் உகந்த முறையில் கையாண்டால் அந்த முயற்சிகள் பிரச்சினைத் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்புச் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றன.

முதலாவது முன்முயற்சியாக உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு சட்டமுலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் குறிப்பாக வடக்கு,கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் சட்டமூல வரைவு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். குறிப்பாக காணாமல் போனவர்களுக்கு நேர்ந்த கதி குறித்தும்  அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்தும் அக்கறையற்ற ஒரு நச்சுத்தனமான சூழ்நிலை இருப்பது குறித்து அவர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

புதிய நல்லிணக்கப் பொறிமுறை குறித்து பொதுவான பிரதிபலிப்பு பெருமளவுக்கு அக்கறையில்லாத ஒன்றாக இருக்கிறது. கடந்த காலத்தில் நடந்தவற்றை விசாரணை செய்வதற்கு இன்னொரு பொறிமுறையை அமைப்பதாகவே சட்டமூல வரைவு நோக்கப்படுகிறது. புதிய பொறிமுறை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்காகப் பேசுகின்ற சிவில் சமூகக் குழுக்களும் நம்பிக்கையில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

பாதாக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் அக்கறை காட்டாமல் இருப்பது முக்கியமான ஒரு குறைபாடு. சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும்  பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்கின்ற அரசியல் கட்சிகள் மத்தியிலும் அந்த பிரதிநிதிகளை அரசாங்கத்தினால் காணமுடியும்.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீண்டும் விண்ணப்பங்களைச் செய்யவேண்டும் என்று கோருவது மிகவும் கொடுமயானதாகும். ஏற்கெனவே அவர்கள் பல தடவைகள் சாட்சியம் அளித்துவிட்டார்கள். அவர்களின் விண்ணப்பங்களை அரசாங்கம் பரிசீலனை செய்யத் தவறிவிட்டது.

இரண்டாவது உலகப் போருக்கு பிறகு ஐரோப்பாவில் நல்லிணக்கம் பல்வேறு பல்வேறு துறைகளில் முனானெடுக்கப்பட்டது. ஆனால், நுரம்பேர்க் விசாரணைகளுக்கு பிறகே அது நடந்தது. அந்த போரில் தோற்கடிக்கப்பட்டவர்களை அவர்களது குற்றச்செயல்களுக்காக( யூதர்கள், ஸ்லேவ்ஸ் மற்றும் ஜிப்சிகளின் இனப்படுகொலை உட்பட)  பொறுப்புக்கூற வைக்கக்கூடியதாக இருந்ததால்  அந்த விசாரணைகள் சாத்தியமானது.

மறுபுறத்தில், இலங்கையில் பொறுப்புக்கூறவைக்கப்பட வேண்டியவர்கள் போரில் வெற்றிபெற்ற தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அத்தகைய விசாரணைகள் பெரும் கடினமானவையாக இருக்கும். இது ஒரு உள்நாட்டு மோதல் என்பதால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரக்கூடியதாக அவர்களுக்கு வலுவூட்ட பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காணவேண்டிய ஒரு குழப்பகரமான நிலை காணப்படுகிறது.

அரசியல் தீர்வு 

இரண்டாவது முன்முயற்சி ' இமாலயப் பிரகடனத்துக்கான ' அடிப்படையாக அமைந்த பும்பெயர் சமூகத்துக்கும் பௌத்த மதகுருமாருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் வடிவில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாகும். இந்த உடன்படிக்கை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் வேறு பிரிவினராலும் இலங்கையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் சமூகக் குழுக்களினாலும் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், கடந்த காலத்தில் பல விவகாரங்களில் எதிரெதிரான தீவிர நிலைப்பாடுகளக் கொண்டவர்கள் என்று கருதப்பட்டவர்களுக்கு இடையில் பகிரங்கமாகக் காணப்பட்ட சொற்ப எண்ணிக்கையான உடன்படிக்கைகளில் இது ஒன்றாகும். பிரதமர்களினாலும் ஜனாதிபதிகளினாலும் கைச்சாத்திடப்பட்ட போதிலும் இந்த உடன்படிக்கைகள் நின்றுபிடிக்கவில்லை.

இமாலயப் பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பவை பொதுப்படையான விவகாரங்களே தவிர எந்த பிரச்சினையையும் விசேடப்படுத்திய விளக்கங்கள் இல்லை.

இமாலயப் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட பௌத்த பிக்குமார் தங்களது மத ஒழுங்கில் சிரேஷ்ட அந்தஸ்தைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களினால் பிரகடனம் குறித்து பௌத்த குருமாருடனும் படிநிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் மிகவும்  சிரேஷ்ட பௌத்த மத தலைவர்களுடனும்   பேசக்கூடியதாக இருந்தது. இந்த  தலைவர்கள் நாட்டில் இன,மத நல்லிணக்க நிலையை ஏற்படுத்துவதற்கு கூடுதல் நேரத்தைச் செலவழிக்கத் தயாராயிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இமாலயப் பிரகடனத்தின் ஆறு அம்சங்களில் ஒன்று " ஐக்கியப்பட்டதும் பிளவுபடாததுமான நாட்டுக்குள் அதிகாரப் பரவலாக்கலுக்கு " அழைப்பு விடுக்கிறது. இத்தகைய அதிகாரப் பரவலாக்கம் இந்தியாவிலும் பல இனங்களையும் பல மதங்களையும் கொண்ட  மலேசியா , இந்தோனேசியா போன்ற எமது பிராந்திய நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது.

நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை வேறுபட்ட இன,மத சமூகங்கள் பகிர்ந்துகொள்வதற்கு வழியொன்றைக் கண்டுபிடிப்பது போரும் மோதல்களும் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அடிப்படையானதாகும்.

பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் முன்னுரிமைக்கூரிய விடயமாகும். ஆனால் முழுமையாக தமிழர்களைப் பொறுத்தவரை, தங்களது சொந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தங்களுக்காக தீர்மானங்களை எடுப்பதற்கும் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் இன,மத சிறுபான்மைச் சமூகங்கள் அதிகாரமற்றவையாக இருப்பதே அவர்களின் அதிருப்திக்கான  மூலவேர்க் காரணியாகும். இது தேர்தல்களுக்குப் பிறகு  அரசியமைப்புச் சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டிய தேவையை உணர்த்துகிறது.

இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் பங்கேற்புடனும் அவர்களுடனான கலந்தாலோசனையுடனும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது நடைமுறை யதார்த்தமாக வருமானால் ஐரோப்பாவில் நடந்ததைப் போன்று இலங்கையினாலும் இனமோதலை கடந்த காலத்திற்குள் தள்ளிவிடக்கூடியதாக இருக்கும்.

அவ்வாறு இல்லையானால் (1980 களில் தொடங்கி மூன்று தசாப்தங்கள் நீடித்த போருக்கு பொறுப்பான ) அரசியல் தலைவர்கள் முன்வைத்த  சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் கருத்தொருமிப்பு ஏற்படமுடியாத காரணத்தால் நல்லிணக்கச் செயன்முறைக்கு  மிக நீண்ட காலம் எடுக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18