பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கையில் சிறுவர் யாசகர்கள் அதிகரிப்பு! 

26 Feb, 2024 | 01:05 PM
image

சி.சி.என்

இலங்கையில் யாசகங்களில் ஈடுபடும் சிறுவர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலை வெளியிட்டுள்ளது. இது பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளில்  மிகவும் பாரதூரமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

2020ஆம் ஆண்டிலிருந்து நோக்குகையில் இவ்வாறு யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்து வந்துள்ளதாக  சபை சுட்டிக்காட்டுகின்றது. இது தொடர்பாக தமக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின்படி, 2019ஆம் ஆண்டு 299 முறைப்பாடுகளும், 2020 இல் 200 முறைப்பாடுகளும், 2021இல் 240 முறைப்பாடுகளும், 2022இல் 249 முறைப்பாடுகளும் அதே வேளை  2023ஆம் ஆண்டு இது 323ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பலர் பாடசாலை கல்வியை இடைநிறுத்தி விட்டு வேலைக்கு செல்வதில் அக்கறை காட்டினாலும் இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர்கள்  பணிக்கு அமர்த்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் பலரும் இவர்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வேறு வழியின்றி இந்த சிறுவர்கள் யாசகம் எடுத்து வாழ தலைப்பட்டுள்ளனர். இந்த விடயம் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரியும் என்பது வேதனையான விடயமாகும்.

எனினும் சில சிறுவர்கள் தாம் ஏதோ ஒரு வேலைக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு தமது வசிப்பிடத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு வந்து யாசகத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றது. 

2023ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்களாக 9,436 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். அவற்றில் 2,242 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானவையாகவும்  472 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவையாகவும் 404 முறைப்பாடுகள் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவையாகவும் 51 முறைப்பாடுகள் சிறுமிகள் மீதான வன்முறைகள் தொடர்பானவையாகவும் 6 முறைப்பாடுகள் சிறுவர்களை ஆபாசத்துக்கு பயன்படுத்தியமை தொடர்பானவையாகவும் விளங்குகின்றன. 

மேலும், சிறுவர்களை போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துதல், தொழில்களுக்கு அமர்த்துதல், குடும்ப வன்முறையை அவர்கள் மீது பிரயோகித்தல், காயங்களை ஏற்படுத்துதல், பாடசாலை கல்வியை பெற்றுத் தராதிருத்தல் போன்றவை தொடர்பிலும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, 2022இல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தமக்கு 7,466 முறைப்பாடுகளை கிடைத்திருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பான  முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் யாசகத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது வெளிப்பட்டுள்ளது. 2019இல் 265ஆகவும், 2020இல் 228ஆகவும், 2021இல் 375ஆகவும் இருந்த முறைப்பாடுகள் 2022ஆம் ஆண்டு 214ஆகவும் 2023ஆம் ஆண்டு 182ஆக குறைந்துள்ளது.  

சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் அவர்களை கல்வி நடவடிக்கைகளில் பங்கு கொள்ள செய்யவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளின் அடிப்படையில் கிடைத்த முறைப்பாடுகள் 2022ஐ விட 2023இல் அதிகம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறுகின்றது. 2022இல் இவ்வாறான முறைப்பாடுகள் 1,231ஆக இருந்த அதே வேளை 2023ஆம் ஆண்டு இது 1922ஆக அதிகரித்துள்ளது. இது பாடசாலை இடைவிலகளோடு தொடர்புபட்டதொன்றாக விளங்குகின்றது. இலங்கையில் வறுமை வீதம் அதிகமாவுள்ள மத்திய மாகாணத்திலேயே மாணவர் பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டியிருந்தன. 

மத்திய மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களான மாத்தளை, கண்டி , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 2023ஆம் ஆண்டு அதிக மாணவர் இடைவிலகல்களை கொண்ட மாவட்டமாக நுவரெலியா விளங்குகின்றது. இந்த புள்ளி விபரங்களை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன் படி மத்திய மாகாணத்தில் கடந்த வருடம் மொத்தமாக 1986 மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். அதிகமாக நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா கல்வி வலயத்தில் 570 மாணவர்களும் அட்டன் கல்வி வலயத்தில் 541 மாணவர்களும் கொத்மலை கல்வி வலயத்தில் 319 மாணவர்களும் கம்பளை கல்வி வலயத்தில் 209 மாணவர்களும் இடை விலகியுள்ளனர்.

குறித்த கல்வி வலயங்கள் பெருந்தோட்டங்களை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களாகும். ஆகவே பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை ஆகியன இந்த இடை விலகல்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் 2022ஆம் ஆண்டே மாணவர் இடைவிலகல் கணிசமாக அதிகரித்திருந்தன. அதற்கு கொவிட் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து நாட்டில் உருவான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கூறப்படுகின்றன. 

தலைநகரில் சிறுவர்களுடன் சேர்ந்து அவர்களது பெற்றோர்களும் யாசகத்தில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் தமது பிள்ளைகளை தனியாக ஒரிடத்தில் யாசகம் செய்ய அனுப்பி விட்டு மாலை வேளையில் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் எனக் க;ற்படுகின்றது. சிறு குழந்தைகளை சுமந்து கொண்டு பதின்ம பருவ பிள்ளைகள் பஸ்களில் ஏறி இறங்கி யாசகம் புரிவது அதிகரித்துள்ளது. 

எது எப்படியானாலும் சிறுவர் யாசகர்கள் அதிகரித்துள்ளமை அவர்களின் சகல உரிமைகளும் மீறப்பட்டுள்ளதற்கு சமனாகும். அவர்கள் பல வழிகளில் பாதிப்பை எதிர்கொள்வதற்கு இது அடிப்படையாக உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13