இலங்கை அரசைப் போலவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசும், இலங்கைத் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நோக்குகிறதா என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை யுத்த வடுக்களுடன் பலத்த துன்ப துயரங்களுடன் வாழும் இலங்கையின் வட பகுதித் தமிழ் மீனவர்களின் பாதிப்பு நிலைகளை உணர்ந்து தமிழ்நாடு அரசும், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களும் செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால், இலங்கையின் வட பகுதி மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையின் குறித்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாட்டில் மீனவர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், இம்முறை தமிழ்நாட்டு மக்கள் கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வழிபாடுகளையும் புறக்கணித்திருந்தனர்.
இது குறித்து முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய இழுவைப்படகுகள் அத்து மீறி எல்லை தாண்டி, இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழைந்து தமது சட்ட விரோத கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இலங்கையின் வட பகுதி கடற்பரப்புக்களான முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் கடற்பரப்புகளுக்குள் இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இழுவைமடி மீன்பிடிச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய மீனவர்களின் இத்தகைய அத்துமீறிய வருகையால் இன்றளவும் யுத்த வடுக்களுடன் வாழும் வட பகுதித் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தென்னிலங்கை மீனவர்களுடைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எமது வட பகுதி மீனவர்கள் மிக மேசமாகப் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், இந்திய மீனவர்களது அத்துமீறிய மற்றும் சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் எமது கடல் வளங்கள் அழிக்கப்பட்டு, எமது மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேவேளை தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் எமது மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகிற சம்பவங்களும் பதிவாகின்றன.
இவ்வாறாக எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு, வாழ்வாதார மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்ற உபகரணங்களும் சேதமாக்கப்பட்டால், எமது மீனவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு கொண்டுசெல்வது?
எனவே, தயவுசெய்து எல்லை தாண்டி வந்து எமது கடல் வளங்களையும், எமது மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தாமல், எமது மீனவர்களை வாழவிடுங்கள் என்றுதான் கேட்கின்றோம்.
தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகளாலும், இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலாலும் மிக மோசமாக எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்கள் எமக்கு உதவுவார்கள் என எண்ணிக்கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும் சில இழுவைமடித் தொழிலாளர்களால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறது.
எமது மீனவர்களின் இத்தகைய பாதிப்பு நிலைமைகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மீனவர்களுக்கு புரியவில்லையா? தமிழ்நாடு முதல்வருக்கும், அங்குள்ள ஏனைய அரசியல் பிரதிநிதிகளுக்கும் எமது மீனவர்களின் இத்தகைய அவலநிலைகள் புரியவில்லையா?
எம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நோக்கும் இலங்கை அரசைப் போலவே, தமிழ்நாடு அரசும், அங்குள்ள எமது தொப்புள்கொடி தமிழ் உறவுகளும் எம்மை மாற்றான்தாய் மனப்பான்மையோடு நோக்கினால் நாம் என்ன செய்வது?
இவ்வாறான நிலையில், தற்போது இலங்கை அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து எம்மை அழித்துவிடுங்கள் என்று கூறுவதைத் தவிர எம்மால் வேறேதும் கூற முடியாதுள்ளது.
எனவே, தொப்புள்கொடி உறவுகளான இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் பாதிப்பு நிலையை உணர்ந்து, பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM