ரணில் பொது வேட்பாளராக பொது சின்னத்திலேயே போட்டி 

Published By: Vishnu

25 Feb, 2024 | 07:52 PM
image

நேர் கண்டவர் – ரொபட் அன்டனி 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். ஆனால் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட மாட்டார். அவர் கட்சி பேதமற்ற பொது வேட்பாளராக சின்னத்தில் களமிறங்குவார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.  

சமகால அரசியல் விவகாரங்கள், ஜனாதிபதி தேர்தல், பொருளாதார மீட்சி நடவடிக்கைகள், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு விவகாரம்,  ஐக்கிய தேசிய கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தமை உள்ளிட்ட பல்வேறு விடைகள் தொடர்பாக அவர் இந்த செவ்வியின் போது பதிலளித்தார். 

முக்கியமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொது சின்னத்தில் ரணில் களமிறங்குவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தலில் இவ்வருட இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக பொது சின்னத்தில் போட்டியிடுவார் என்ற விடயத்தை கட்சியின் முக்கிய பிரதிநிதியான  ரவி கருணாநாயக்க  பகிரங்கமாக அறிவித்துள்ளார்.   

செவ்வியின் முக்கிய விடயங்கள் வருமாறு  

கேள்வி : ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு தயாராகிக் கொண்டிருக்கிறது?  

பதில் : ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டின் மிகப் பழமையான கட்சி.  நாட்டை முன்னிலைப்படுத்தியே எப்போதும் நாங்கள் அரசியல் செய்வோம். மக்களுக்கு ஏற்றவாறான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்வைப்போம்.  உண்மையைக் கூறியதால் ஒரு சில சந்தர்ப்பங்களை நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம். 2005 ஆம் ஆண்டு இதற்கு சிறந்த உதாரணம்.   பிரிவினைவாதம் இனவாதம் மதவாதம் என்பவற்றைத் தவிர்த்து இலங்கை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் பலமான பொருளாதாரத்தை கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.  அதற்கேற்ற வகையில் நாங்கள் தேர்தலுக்கு தயாராகிறோம். 

கேள்வி : ஜனாதிபதி மற்றும் உங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தான் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை  ஏன் இன்னும் பகிரங்கமாக கூறாமல் இருக்கிறார்? 

பதில் : இது நியாயமான கேள்விதான். இந்த நாட்டில் விழுந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே அவருக்கு வழங்கப்பட்ட முதலாவது பொறுப்பாக இருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.    விரைவில் இலங்கை வங்குரோத்து  நிலையிலிருந்து மீண்டு வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டதும் எமது தலைமையின்   அறிவிப்பு வெளியாகும். 

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த தேர்தலில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பதில் : நிச்சயமாக அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். ஆனால் ஜனாதிபதி எமது ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட மாட்டார். அவர் கட்சி பேதமற்ற பொது வேட்பாளராக  களமிறங்குவார். பொது சின்னத்தில் போட்டியிடுவார்.   மக்களுக்கு இன்னும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால் ஜனாதிபதி  நாட்டை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.  மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் பெறுவதற்கு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது.  எனவே ஜனாதிபதி நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார். 

கேள்வி : அப்படியானால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில்  விக்ரமசிங்க யானை சின்னத்தில் போட்டியிட மாட்டாரா? 

பதில் :  இல்லை  பொதுவான சின்னம் ஒன்றில் தான் போட்டியிடுவார். யானை சின்னத்தில் போட்டியிடும் சாத்தியம் மிக குறைவு.  சகலரும் இணைந்து பணியாற்றக் கூடிய வகையிலான ஒரு சின்னம் தெரிவு செய்யப்படும்.  அப்போது அங்கு எந்த விதமான முரண்பாடுகளும் இருக்காது. இதற்குப் பின்னர் இந்த நாட்டில் ஒரு தனி கட்சியினால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. 

கேள்வி : அப்படியானால் பல்வேறு கட்சிகள் உங்களுடன் அதாவது ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனவா 

பதில் : பல கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். தேர்தல் அறிவிப்பு வெளியாகிதும் அவற்றை நாம் வெளிப்படுத்துவோம். 

கேள்வி : ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ரணில் அறிவித்ததன் பின்னர் ஆதரவு வழங்குவதாக பல தரப்பினர் தற்போது கூறி இருக்கின்றார்களா?

பதில் : அரசியல் தெரிந்தவர்கள் அதனை சரியாக செய்வார்கள்.   அரசியல் தெரியாதவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.  அதாவது  அறிவிப்பு வெளியானதன் பின்னர் அதிகமான தரப்பினர் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள். 

கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்கு பல உறுப்பினர்கள் வருவார்களா? 

பதில் :  ஒரு கட்சி என்றல்ல.  பல கட்சிகளில் இருந்தும் அதிகமானோர் ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு முன்வருவார்கள்.

கேள்வி : எதிர்காலத்தில்   ரணில் - சஜித் இணைந்து செயல்படும் சாத்தியம் இருக்கிறதா ?

பதில் : அந்த தரப்பில் இருக்கின்ற 95 வீதமானவர்கள் எம்முடன் இணைந்து செயல்படலாம்.  ஆனால் இந்த கட்சியை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த தேர்தலில் செயற்பட்டவர்களுடன்   இணைவது தொடர்பில் சிக்கல் இல்லாமல் இல்லை.  இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வேதனையுடன் இருக்கின்றார்கள்.  அவ்வாறானவர்கள் இணைய முயற்சிக்கும்போது சில பிரச்சினைகள் தோன்றும். 

கேள்வி : அப்படியானால் ரணில் மற்றும் சஜித் ஆகியோர் இணைந்து செயல்படும் சாத்தியமில்லை என்று மறைமுகமாக கூறுகிறீர்களா?

பதில் : சாத்தியம் இல்லை என்று கூறவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின்  95 வீதமானவர்கள் எம்முடன் மீண்டம் இணையும் சாத்தியம் இருக்கின்றது. இங்கு ஐக்கிய தேசிய கட்சியை அழித்த  பாவ செயலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் இணைவது  சிக்கலாகும்.  

கேள்வி : ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்ற கருத்து சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது.  இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

பதில் : அனுர குமார பிரபலமான அரசியல் தலைவர் என்று யார் கூறுவது?  அவர்களுடைய கட்சியினர் தான் அதனை கூறுகின்றனர்.  100 பேர் இருக்கின்ற இடத்தில் 97 பேர் மௌனமாக இருக்கின்றனர்.  மூவர் இவர் பிரபலமானவர் என்று கூறுகின்றனர்.  97 பேர் மௌனமாக  இருக்கின்றனர் என்பதற்காக இவர் பிரபலமான தலைவர் என்று அர்த்தம் இல்லை.  அவர்கள் பல்வேறு விடயங்களை கூறுகின்றார்கள்.  முதலில் தேர்தல் நடத்தப்படாது என்று கூறினார்கள்.  பின்னர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்று கூறினார்கள்.  தற்போது மற்றுமொரு விடயத்தை கூறுகின்றனர். 

கேள்வி : ஜே.வி. பி.  யின் இந்திய விஜயத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

பதில் : அதனை நான் மிகவும் மகிழ்ச்சியாக பார்க்கிறேன்.  அன்று வாக்கை விட  தோட்டா மீது நம்பிக்கை வைத்தவர்கள் பின்னர் தேர்தலுக்கு வந்தனர்.  தேர்தலுக்கு வந்து அனைவர்  மீதும் விமர்சனங்களை முன் வைத்தனர்.  இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்தனர். கூடாதவர்களாக  கூறப்பட்டவர்கள் இன்று நல்லவர்கள் ஆகிவிட்டார்கள்.  மக்களை ஏமாற்றுகின்ற வேலையைத்தான் அவர்கள் செய்கிறார்கள். 

கேள்வி : நீங்கள் ஏன் மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறீர்கள்? 

பதில் : அன்று விமர்சித்தவர்கள் இன்று நல்லவர்கள்.   அந்த உண்மை  வெளிப்பட்டமைக்காக மகிழ்ச்சி அடைகிறோம். 

கேள்வி : 2022 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நீங்களும் பொறுப்பு கூற வேண்டும் அல்லவா?

பதில் : சுதந்திரத்தின் பின்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த சகலரும் பொறுப்பு கூற வேண்டும். அரசியல் செய்த அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.  ஆரம்பத்திலேயே தமிழ் சிங்கள பிரிவினையை உருவாக்கினர். அன்று ஒரு நாடு இரண்டு மொழி  அல்லது   ஒரு மொழி இரண்டு நாடு என்ற விடயம் காணப்பட்டது. எப்படியிருப்பினும் இந்த நாட்டுக்கு மிகப்பெரிய சேவையை ஐக்கிய தேசிய கட்சி ஆற்றியிருக்கிறது. 

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச  அனுரகுமார திசாநாயக்க போன்றோர் போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றனர். சவால் எப்படி இருக்க போகிறது?

பதில் : இங்கு யாரும் சவாலாக இருக்க மாட்டார்கள்.  பிரச்சினைக்கு சரியான தீர்வே    பெரிய சவாலாக இருக்கப் போகிறது.  நாம் போராட்டம் நடத்தி வெள்ளைக்காரனிடமிருந்து நாட்டை மீட்டோம்.  ஆனால் எம்மால் இன்னும் ஒற்றுமையை நிலைநாட்ட முடியவில்லை. எனவே தேர்தலில் முன்வைக்கப்போகின்ற வேலைத்திட்டமே முக்கியமாக இருக்கப்போகிறது. 

கேள்வி : நீங்கள் முன்னாள்  நிதி அமைச்சர்.2022 ஆம் ஆண்டு  பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணங்கள் என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

பதில் : அனுபவமற்ற நிபுணர்களை கொண்டு வந்து தவறான தத்துவங்களை முன்வைத்து உலகத்தில் இல்லாத விடயங்களை இங்கு செய்ய முயற்சித்தமையே மிக முக்கியமான காரணமாகும்.  தலைவர் என்பவருக்கு சகல விடயங்களும் தெரியாமல் இருக்கலாம்  அப்படியானால் அவர்கள் நிபுணத்து அறிவை பெற வேண்டும்.  அவ்வாறு நிபுணத்துவ ஆலோசனையை வழங்குகின்றவர்கள் சரியாக அதனை வழங்க வேண்டும்.  மறுபுறம் கொரோனா வைரஸ் தொற்றும் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அரசாங்க வருமானம்   குறைவடைந்தமையும் அதற்கு முக்கிய காரணமாகும். 

கேள்வி : உங்களது நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அதிகளவு கடன்களை பெற்றதாக கூறப்படுகிறதே? அதாவது பினைமுறி கடன்களும் அதிகளவு பெறப்பட்டதாக கூறப்படுகிறது?

பதில் : இல்லை எமது காலத்தில்  1.5  பில்லியன் டொலர் அளவில் பெறப்பட்டது. அதற்கு முன்னரும் கடன் பெறப்பட்டது  எமது காலத்தில் இருதரப்பு கடன்கள் பெறப்பட்டன. 

கேள்வி : நீங்கள் நிதியமைச்சராக இருந்தீர்கள்.   2022 ஆம் ஆண்டு மக்கள் வரிசைகளில் நின்றபோது அதனை எப்படி உணர்ந்தீர்கள்?

பதில் : அப்போது நாங்கள் ஒரு விடயத்தை உணர்ந்தேன்.  அதாவது எமது ஆட்சியில் நாங்கள் மேற்கொண்ட ஒரு சில விடயங்கள் காரணமாகத்தான் நிலைமை ஓரளவுக்காவது மீண்டு  வந்தது. இல்லாவிடின்  நெருக்கடி மேலும் அதிகரித்திருக்கும்.  ஆனால் 2020 ஆம் ஆண்டு   நாங்கள் கூறிய விடயங்கள் நடந்தன.    எங்கள் மீது களங்கம் ஏற்படுத்தி சிலர் அரசியல் செய்ததால் நாங்கள் 2020 இல் சரிவை  சந்தித்தோம்.

கேள்வி : உங்கள் மீது உங்கள் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருந்ததே?

பதில் : எனது கட்சிக்குள்ளேயே எனக்கு எதிராக பலர் செயற்பட்டனர்.    எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத நபர்கள்  எனக்கு எதிராக செயல்பட்டனர். ஜே. ஆர். ஜயவர்த்தனவுக்கு  எதிராக செயல்பட்டனர்.  லலித் அத்துலத் முதலி காமினி திசாநாயக்க போன்றோருக்கு எதிராகவும் அன்று சிலர்  செயல்பட்டனர்.   வரலாறு அப்படி இருக்கிறது. 

கேள்வி : கொழும்பு மாவட்டம் என்பது உங்கள் கோட்டை போன்று தான் இருந்தது. ஆனால்  2020 ஆம் ஆண்டு உங்களுக்கு என்ன நடந்தது?

பதில் : உண்மையில் அது மிகவும் வேதனையான விடயம்.  நான் மட்டுமின்றி எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தோற்கடிக்கப்பட்டார். அந்த சந்தர்ப்பத்தில் எமக்கு எதிராக வைராக்கியம் பரப்பப்பட்டது.  எமக்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் எமது கட்சியை அழிப்பதற்கு மேற்கொண்ட செயல்பாடுகள் காரணமாக எமது கட்சி தோற்கடிக்கப்பட்டது.  அதாவது எமது கட்சியை மக்கள் சபித்தனர்.  ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே தாம்  செய்தது தவறு என்பதை  கட்சி ஆதரவாளர்கள் புரிந்து கொண்டனர். 

கேள்வி : 2025 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அல்லது அடுத்த நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நிலைமை எவ்வாறு இருக்கும்?  மீண்டும் பழைய நிலைக்கு வருவீர்களா?

பதில் : மீண்டும் பழைய நிலைமையை விட பலமான நிலைமைக்கு எமது கட்சி வரும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.   

கேள்வி : நீங்கள் இன்னும் தொகுதிக்கு   செல்கின்றீர்களா?  மக்களை   சந்திக்கும் போது அவர்கள் என்ன கூறுகிறார்கள்? 

பதில் : மக்களை சந்திக்கின்றேன். மக்கள் எனக்கு வாக்களித்ததாக கூறுகின்றார்கள்.  ஆனால் வாக்களித்திருந்தால் நான் தெரிவு செய்யப்பட்டு இருப்பேனே?  அரசியல் என்பது அப்படித்தான்

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது.  காரணம் இந்த பிரச்சினையை அவர் நன்றாக அறிந்திருக்கின்ற ஒரு தலைவராக இருக்கின்றார்.   ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  ஆனால் தற்போது தீர்வு கிடைக்குமா  என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

பதில் : சில விடயங்களை வெளிப்படையாக பேசவேண்டும். வடக்கு கிழக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்கும் ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதியின்  நோக்கமாக இருக்கின்றது. இங்கு தமிழ் – சிங்கள,  தமிழ் -  முஸ்லிம்,  முஸ்லிம் - சிங்கள பிரச்சனை இல்லை என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். மாறாக இங்கு சமத்துவமின்மை பிரச்சனையே காணப்படுகிறது.  கொழும்பில்  தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள்.  இங்கு தமிழ் மக்களுக்கு இருக்கின்ற அதே பிரச்சினை சிங்கள மக்களுக்கும் இருக்கின்றது.  சமூக நீதி தொடர்பான பிரச்சனையே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.  இங்கு அரசியல் பிரச்சினை அல்ல.  மாறாக பொருளாதார அபிவிருத்தி பிரச்சினையே  பிரதானமாக காணப்படுகிறது.  இனவாதம் மதவாதத்தை காட்டி அரசியல் செய்ய முடியாது.  மதவாதத்தை கையில் இருக்கின்ற நாடுகள் சீரழிந்து போய்விடும்.  அதாவது கொழும்புக்கு வெளியே இருக்கின்றவர்கள் தமது வேலைகளை செய்து கொள்வதற்கு ஏன் கொழும்புக்கு வரவேண்டும்?  தமது பிரதேசங்களில் அந்த வேலைகளை செய்து கொள்ள முடியுமான நிலைமையை  உருவாக்க வேண்டும். அதாவது நாம் நிர்வாகத்தை பரவலாக்கம் செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். 

ஆனால் மற்றுமொரு விடயத்தையும் கூற வேண்டும்.  2013 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு மாகாண சபை காணப்பட்டது. நானும் நிதியமைச்சர்ராக செயல்பட்டேன். அவர்கள் அங்கு செயல்திறனாக செயல்படவில்லை. நான்   பட்ஜெட்டில் ஒதுக்கி அனுப்பிய நிதி மீண்டும் எனது அலுவலகத்தை வந்து சேர்ந்தது.

கேள்வி : நீங்கள் ஒதுக்கி அனுப்பிய நிதி மீண்டும் உங்களை வந்து சேர்ந்தது என்பதை பொறுப்புடன் கூறுகின்றீர்களா?

பதில் : ஆம்.  நான் ஒதுக்கி வடக்குக்கு  அனுப்பிய நிதி பயன்படுத்தப்படாமல் மீண்டும் என்னையே வந்து சேர்ந்தது. 

கேள்வி : வடக்கு மாகாண சபையில் இருந்த முக்கியஸ்தர்கள் அதனை மறுக்கின்றார்களே ?

பதில் : எவ்வாறு மறுப்பது ? நான் நான் கூறுகின்றேன்.  இங்கு சிறந்த ஒரு நிர்வாக கட்டமைப்பு தேவைப்படுகிறது. நீங்கள் எழுப்பிய கேள்வி கேள்விக்கு இதுவே சிறந்த பதிலாக இருக்கும் என்று கருதுகிறேன். 

கேள்வி :  பாராளுமன்றத்தில்   அங்கம் வகிக்காத கடந்த நான்கு வருடங்களை  எப்படி உணர்கிறீர்கள்? 

பதில் : உண்மையை கூற வேண்டும் என்றால் அழுத்தங்கள் இல்லாத ஒரு சிறந்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.  அரசியல் என்பது மிக கடினமான ஒரு பயணம்.  தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபுறம் வைத்துவிட்டு விமர்சனங்களை எதிர்கொண்டு செய்ய வேண்டிய பயணம்.  நான் அரசியலுக்கு வரும் முன்பதாகவே எனக்கு வர்த்தகம் இருந்தது.  நான் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பட்டயை கணக்காளர்.  எனவே நாங்கள் அரசியலில் வாழவில்லை. 

கேள்வி :  நிகழ்நிலை காப்பு சட்டம் மூலத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில் : இதில் அச்சமடைவதற்கு ஒன்றுமில்லை.  நீங்கள் ஒருவரை பைத்தியக்காரர் என்று   கூறுகின்றீர்கள் என்றால் அதன் பொறுப்பை நீங்கள் எடுக்க வேண்டும்.  அதனைத் தான் இந்த சட்டம் கூறுகிறது.  பொறுப்பு கூறுவதற்கு என் அச்சப்பட வேண்டும்?

கேள்வி : 2019 ஆம் ஆண்டு நீங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முழுமையான ஆதரவை வழங்கவில்லை என்று கூறப்படுகின்றதே ?

பதில் : நாங்க ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் அவரை வேட்பாளராக நியமித்தோம்.  மாற்று கருத்துக்கள் இருந்தன. எனினும்  கட்சி தீர்மானத்ததன் பின்னர் அவருக்காக நாம் அனைவரும் உழைத்தோம்.  அப்போது இருந்த எதிர்க்கட்சி பொய்யை உருவாக்கி வெற்றி பெற்றது.  அதில் சஜித் தோல்வியடைந்தார். அத்துடன் அந்த அத்தியாயம் முடிந்தது.  ஆனால் அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை சிதறடிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டனர்.  இதனால் எமது  வாக்குகள் பிரிந்தன.  ஐக்கிய தேசியக் கட்சியினர்  எம்மை சபித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை பஸ்ரியன் கொல்லப்பட்டு 40 வருடங்கள்...

2025-01-16 12:16:57
news-image

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை,...

2025-01-15 18:48:30
news-image

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவளித்து ஒற்றுமையை வெளிப்படுத்திய...

2025-01-15 16:35:02
news-image

அடர்ந்த காட்டுக்குள் இப்படி ஒரு அவலமா? ...

2025-01-15 21:24:26
news-image

மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் போராட்டமும் பட்டிப்...

2025-01-15 15:58:47
news-image

'கேணல்' கிட்டுவின் செயலினால் விஜய குமாரதுங்க...

2025-01-15 12:43:42
news-image

புதிய அரசாங்கத்தின் நெறிமுறைகளுடன் அரச பொறிமுறைகள்...

2025-01-15 10:08:35
news-image

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் -...

2025-01-12 17:38:39
news-image

உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில்...

2025-01-12 16:35:46
news-image

தாய்வானை சீன மாகாணம் என்பதால் அமெரிக்கா...

2025-01-12 16:26:02
news-image

ஐ.தே.க.வுடன் இணைவதற்கு மனம் இன்றி சம்மதித்த...

2025-01-12 16:19:41
news-image

திணறடிக்கும் பொருளாதாரம்

2025-01-12 15:41:46