சஷி தரூர்
உலக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்கும் உக்ரெய்ன் மற்றும் காசா போர்களுக்கு வெகு தொலைவில் அராபியக் கடலின் ஒரு மூலையில் இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் விசித்திமான ஒரு இராஜதந்திர நெருக்கடி ஒன்று மூண்டிருக்கிறது. அது இந்தியாவின் கேந்திர முக்கியத்துவ நலன்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
இந்தியாவும் மாலைதீவும் பகைமை நாடுகளாக இருப்பது சாத்தியமில்லை. 12 இலட்சம் சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்தியா வெறுமனே 115 சதுர மைல்கள் பரப்பளவுடைய மாலைதீவை விடவும் 11 ஆயிரம் மடங்கு பெரிய நாடு. இந்தியாவின் சனத்தொகை 140 கோடிக்கும் அதிகமானதாக இருக்கின்ற அதேவேளை மாலைதீவின் சனத்தொக 5 இலட்சமேயாகும்.
அது மட்டுமன்றி, சகல வகையான நெருக்கடிகளின்போதும் ஆதரவுக்கு மாலைதீவு அதன் மிகப்பெரிய அயல்நாடான இந்தியா மீதே தங்கியிருந்திருக்கிறது.
இலங்கைக் கூலிப்படைகள் 1988ஆம் ஆண்டில் மாலைதீவில் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியொன்றில் ஈடுபட்டபோது இந்திய பரா துருப்புக்களே அதை முறியடித்தன.
2004 டிசம்பரில் மாலைதீவை சுனாமி தாக்கியபோது மீட்புப் பணிகளுக்கு இந்திய கப்பல்களும் உதவிப்பணியாளர் குழுக்களுமே விரைந்தன.
2014ஆம் ஆண்டு மாலைதீவின் ஒரேயொரு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை செயலிழந்தபோது இந்தியாவே நீர்க் கொள்கலன்களுடன் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பி உதவியது.
இந்த வகையான இடையறாத உதவிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான இருதரப்பு உறவுகளைப் பிரதிபலிக்கிறது.1965 ஆண்டில் மாலைதீவு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றபோது அதன் சுயாதிபத்தியத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதற்கு பிறகு இரு நாடுகளும் கேந்திர முக்கியத்துவ, பொருளாதார மற்றும் கலாசார களங்களில் பரந்துவிரிந்த பன்முக உறவுமுறையொன்றை வளர்த்துக்கொண்டன.
இரு நாடுகளுக்கும் இருக்கும் பொதுவான கடல்எல்லையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பைப் பேணுவதில் இந்தியாவின் பாத்திரம் மாலைதீவுக்கு முக்கியமானது. இந்தியாவும் மாலைதீவும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) தாபக உறுப்பு நாடுகள் என்பதுடன் தெற்காசிய சுதந்தி வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
மாலைதீவின் முக்கியமான ஒரு பொருளாதாரப் பங்காளி நாடான இந்தியா பரந்தளவு உதவிகளை வழங்குகிறது ; பொருளாதார செயற்திட்டங்களையும் வர்த்தக உடன்படிக்கைகளையும் முன்னெடுப்பதில் உதவுகின்றது.
இவற்றுக்கு மேலதிகமாக, இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டு காலப் பழமைவாய்ந்த இன, மொழி, கலாசார மற்றும் மத ரீதியான தொடர்புகளும் இருந்துவருகின்றன. இந்தியாவுக்கு மாலைதீவுக்கும் இடையில் மிகவும் ஆழமான நல்லெண்ணமும் புரிந்துணர்வும் இருக்கும் என்றே எவரும் எதிர்பார்ப்பர். ஆனால், புவிசார் அரசியல் என்று வரும்போது நன்றியுணர்ச்சி வெறுப்புணர்ச்சியை விடவும் குறைந்தளவு வலிமைகொண்டதாகவே இருக்கிறது.
மாலைதீவு சிறிய அயல்நாடு என்ற உணர்வுப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருக்கிறது போன்று தெரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெக்சிக்கோ தலைவர் போஃபிரியோ டயஸ் அந்த உணர்வை ' மெக்சிக்கோ கடவுளுக்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ அந்தளவுக்கு அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருக்கிறது' என்ற கூற்றின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தினார்.
மாலைதீவு ஜனாதிபதி முஹமட் முய்சு கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கடுமையான இந்திய விரோதப் பிரசாரத்தைச் செய்து வெற்றிபெற்றார். பதவியேற்ற பிறகு அவர் " இந்தியாவே வெளியேறு " என்பது வெறுமனே ஒரு பிரசாரச் சுலோகம் அல்ல என்பதை தெளிவாக வெளிக்காட்டினார். முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குப் போகாத முதல் மாலைதீவு ஜனாதிபதி முய்சுவே.
ஜனாதிபதி றிசெப் தயிப் எரடோகனின் தலைமைத்துவத்தின் கீழ் பெருமளவுக்கு இஸ்லாமியத் தன்மை கொண்டதாகவும் இந்தியாவுடன் குறைந்தளவு நட்புறவைக் கொண்டதாகவும் மாறிவருகின்ற துருக்கி நாட்டுக்கே முய்சு தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். அடுத்து அவர் இந்தியாவின் கடும் போட்டி நாடான சீனாவுக்குச் சென்றார்.
சமூக ஊடகங்கள் இராஜதந்திர பதற்றத்தை தூண்டிவிடுகின்றன. இந்தியாவின் லக்சதீவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டவர்களில் பலர் மாலைதீவை இந்தியர்கள் பகிஷ்கரிக்கவேண்டும் கோரிக்கை விடுக்கிறார்கள். இதற்கு பதிலடியாக ஜனாதிபதி முய்சுவின் மூன்று பிரதி அமைச்சர்களான மஹ்சூம் மஜீத், மால்ஷா ஷரீவ் மற்றும் மரியம் ஷுய்னா ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் 'கோமாளி ' என்றும் 'பயங்கரவாதி' என்றும் பதிவுகளைச் செய்தார்கள்.
இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த இந்தியர்கள் வெளியிட்ட கருத்துக்களை அடுத்து இரு தரப்புகளுக்கும் இடையில் மூண்ட சொற்போர் கட்டுப்பாட்டை மீறியது.
பிறகு மாலைதீவின் பிரதியமைச்சர்கள் மூவரும் பதவிகளில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டபோதிலும்,அவர்கள் மோடிக்கு எதிரான கருத்துக்களை முய்சு சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்துக்கு முன்னதாக தெரிவித்ததை தற்செயலான சம்பவம் என்று கூறமுடியாது. உண்மையில் இந்து சமுத்திரத்தில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு புதிய ஒரு போசகர் நாட்டை வளர்க்கும் சாத்தியத்தை கண்டறிய மாலைதீவை தூண்டியிருக்கிறது.
சீனாவில் இருந்த வேளையில் முய்சு அந்த நாட்டைமாலைதீவின் மிகவும் நெருக்கமான அபிவிருத்திப் பங்காளி என்று வர்ணித்தார்.தற்போது இந்தியாவுக்கு அனுகூலமாக பெருமளவுக்கு அமைந்திருப்பதாக அவர் நம்பும் வர்த்தக உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கான தனது நே்க்கத்தை தெளிவாக வெளிப்படுத்தினார்.
கொவிட் 19 பெருந்தொற்றுக்கு முன்னர் மாலைதீவின் முதல்தரமான சந்தையாக சீனா விளஙகியதாகக் கூறிய முய்சு மீண்டும் அந்த நிலையை எட்டுவதற்கு சீனக் கொள்கை வகுப்பாளர்கள் தங்களது முயற்சிகளைத் தீவிரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். சீனாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இரு நாடுகளும் அவற்றுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை ' அகல்விரிவான மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுப் பங்காண்மையாகவும் உயர்த்தியிருக்கின்றன. சீனாவின் உலகளாவிய பாதுகாப்பு செயற்திட்டத்தில் முய்சு இணைந்து கொண்டுள்ளார். இது சீனா மாலைதீவில் அதன் பிரசன்னத்தை அதிகரிப்பதற்கும் சூழவுள்ள பகுதிகளில் டிஜிட்டல் மற்றும் கண்காணிப்பு ஆற்றல்களை விரிவுபடுத்துவதற்கும் வசதியாக அமையும்.ஏற்கெனவே சீனாவின் ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹொங் 03 மாலைதீவு கடற்பரப்புக்கு வந்திருக்கிறது.
மாலைதீவு அதன் மூலோபாயத் தெரிவுகளைச் செய்வதில் குறிப்பாக, சீனாவுக்கு நெருக்கமாகச் சென்ற பல நாடுகள் கடன்பொறியில் அகப்பட்டிருப்பதை கவனத்திற்கொண்டு -- மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும் என்று இந்தியா அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் இந்தியாவின் இந்த எச்சரிக்கை சுதந்திரமாகச் செயற்படுவதில் முய்சுவுக்கு இருக்கும் உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கிறது போன்றே தெரிகிறது.
இந்தியாவுடன் சேர்ந்து செய்த நீர்ப்பரப்பு ஆய்வை இப்போது இடைநிறுத்தியிருக்கும் மாலைதீவு கொழும்பு பாதுகாப்பு மகாநாட்டையும் (Colombo Security Conclave) பகிஷ்கரித்தது. இந்த மகாநாடு இந்தியாவையும் மாலைதீவு,மொரீஷியஸ் மற்றும் இலங்கையையும் நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
மேலும், தேர்தலின்போது மாலைதீவு மக்களுக்கு வாக்குறுயளித்ததன் பிரகாரம் இந்தியத் துருப்புக்களை தனது மண்ணில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் ஜனாதிபதி முய்சு இறங்கியிருக்கிறார். மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு மேலதிகமாக அந்த படைகளுக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட இரு ஹெலிகொப்டர்களையும் ஒரு ட்ரோனியர் விமானத்தையும் பராமரிக்க 77 இந்தியப் படைகள் அங்கு நிலைகொண்டுள்ளன. அந்த படைகளை மாரச் 15 ஆம் திகதிக்கு முன்னதாக வாபஸ்பெற்று விடவேண்டுமென்று முய்சு காலக்கெடு விதித்திருக்கிறார்.
மாலைதீவின் பல்வேறு சிறிய தீவுகளில் இருந்து தலைநகர் மாலேக்கு நோயாளர்களை ஏற்றிவருவதற்கு பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர்களும் 500 க்கும் அதிகமான நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட சந்தேகத்துக்கிடமான கப்பல்களைக் கண்காணிக்க மாலைதீவு இராணுவம் இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தை பயன்படுத்தியது. மாலைதீவில் உள்ள தனது இராணுவத்தினருக்கு பதிலாக சிவிலியன் தொழில்நுட்ப உதவியாளர்களை இந்தியா இப்போது அனுப்பவேண்டியிருக்கிறது.
மாலைதீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் ரோந்துசெய்யும் பணிகளை மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையின் உதவியுடன் இந்தியாவே கையாண்டுவந்தது. விரைவில் அந்தப் பணிகளை துருக்கி இராணுவ ட்ரோன்களே செய்யவிருக்கின்றன. துருக்கிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது முய்சு அத்தகைய ட்ரோன்களை வாங்குவதற்கு 37 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடன்பாடொன்றைச் செய்தார்.
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைப் போன்று முய்சுவும் தனது நாட்டை பெருமளவுக்கு இஸ்லாமியப் பாதையிலேயே கொண்டுசெல்ல விரும்புகிறார். மாலைதீவு ஜிகாதிகள் இஸ்லாமிய அரசு இயக்கத்தில் இணைந்து ஈராக்கிலும் சிரியாவிலும் போராடுகிறார்கள். முஸ்சுவின் ஆட்சியில் மாலைதீவு சுற்றுலா விடுமுறைப் போக்கிடங்களுக்கு வெளியே கிறிஸ்தவக் கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்திருக்கிறது.
மாலைதீவு அதன் தற்போதைய பாதயைிலேயே தொடர்ந்து செல்லுமாக இருந்தால் சீனாவுக்கு நெருக்கமானதும் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்க்கின்றதும் இந்திய மூலோபாய நலன்களை அவமதிக்கின்றதுமான நாடொன்றுக்கு பக்கத்தில் இந்தியா வாழவேண்டியிருக்கும். இது விடயத்தில் இந்தியா மெத்தனமாக இருக்கமுடியாது.
(சஷி தரூர் இந்திய காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மனிதவள அபிவிருத்தி இணையமைச்சருமாவார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM