இயக்குநர் மிஷ்கின் வெளியிட்ட 'டபுள் டக்கர்' பட டீசர் வெளியீடு

24 Feb, 2024 | 06:32 PM
image

'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இதய சத்திர சிகிச்சை நிபுணரான நடிகர் தீரஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் 'டபுள் டக்கர்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டபுள் டக்கர்' திரைப்படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனீஸ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, கருணாகரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஏஞ்சல்ஸ் எனும் பெயரில் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களும் நாயகனுடன் இணைந்து நடித்திருக்கிறது. 

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எயர் ஃப்ளிக் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் நாயகன் தீரஜின் வலது மற்றும் இடது தோளில் அமர்ந்திருக்கும் ஏஞ்சல்ஸ் எனும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களின் சேட்டைகளும் குறும்புகளும் டைமிங் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

''பிள்ளையார் சுழி எனும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நடிகர் மைம் கோபி மூலம் நாயகன் தீரஜை சந்தித்தேன். அவர் 'ஐந்து நிமிடத்திற்குள் எம்மை இம்ப்ரஸ் செய்தால்.. தொடர்ந்து கதை கேட்கிறேன்' என்றார். எமக்கு கிடைத்த ஐந்து நிமிடத்திற்குள் அவரை சிரிக்க வைத்து, ஒரு மணி நேரம் வரை கதையை கேட்க வைத்து, இப்படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றேன். இப்படத்தில் இடம்பெறும் அனிமேஷன் கதாபாத்திரங்கள் சுவாரசியமானவை என்றாலும், அதை உருவாக்குவதற்கு அதிக பட்ஜட் தேவைப்பட்டது. அப்போது இணை தயாரிப்பாளரும், இணை கதாசிரியருமான சந்துரு நம்பிக்கை அளித்ததால்... இப்படம் இந்தியாவில் முதன்முறையாக லைவ் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் 'டபுள் டக்கர்' எனும் படமாக தயாராகி இருக்கிறது. இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right