சி.சி.என்
உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது ஏழு நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை வழங்கியதால் பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு உல்லாசப்பயணிகள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்தே உல்லாசப்பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து வருகை தரும் பெண்கள் பலர் ஒருமாத காலம் இலங்கையில் தங்கியிருந்து பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த ரஷ்ய பெண்கள் செல்வந்தர்கள் மற்றும் உயர்மட்டத்திலுள்ளவர்களுடன் மாத்திரம் ஒரு பொழுதையோ அல்லது சில மணித்தியாலயங்களையோ செலவழிப்பதற்கு ஐம்பதினாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணம் வசூலிப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், கொவிட் தொற்று மற்றும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து கடுமையான பின்னடைவைச் சந்தித்த சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிப்பதை இலக்காகக் கொண்டு ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும், சட்டவிரோத நோக்கங்களுக்காக இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் தனிநபர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து இப்போது கவலைகள் எழுந்துள்ளன.
உத்தியோக பூர்வ தகவல்களின் படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜனவரி மாதம் உல்லாசப்பயணிகளின் வருகையானது 103 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளமை முக்கிய விடயம். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு 208,253 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் 34,399 இந்தியர்களும் 31,159 ரஷ்யர்களும் அடங்குவர்.
இதில் இலங்கைக்கு வருகை தரும் ரஷ்யர்களில் பலர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கென சில முகவர்களும் இணைத்தளங்கள் மூலம் உருவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் சிலரும் இவ்வாறு தமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் ஒரு மணித்தியாலத்துக்கு வாடிக்கையாளர்களை பொறுத்து 15 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை உள்ளூர் பாலியல் வர்த்தகமும் அதிகத் தேவையை கொண்டுள்ளதாகவும் ரஷ்ய அழகிகளின் வருகையால் உள்ளூர் பாலியல் வர்த்தகம் மிகவும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கையில் இப்போது ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கடந்த வருடம் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியிருந்தமை முக்கிய விடயம்.
இதே வேளை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவும் இந்த பிரச்சினைகளை கையாள்வதில் அதிகாரிகள் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இல்லாமல் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கின்றோம். ஆனால் அவர்களால் 30 நாட்கள் மாத்திரமே நாட்டில் தங்க முடியும். எனினும் சிலர் இந்த காலக்கெடுவைத் தாண்டி நாட்டிலிருந்து வெளியேறி விட்டு மீண்டும் வருகை தருகின்றனர்.
இவ்வாறானவர்களை எங்களால் கைது செய்ய முடியும். மேலும் இங்கு வருகை தரும் உல்லாசப்பயணிகள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கெதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனினும் சில உல்லாசப்பயணிகள் பற்றிய தகவல்களைப் பெறுவதில் நாம் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம். குறிப்பாக கொழும்பு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குபவர்களை நாம் இலகுவில் நெருங்க முடியாது. அது வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.
மேலும் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும். சட்டவிரோத பணப்பறிமாற்றம், போதை பொருள் பாவனை மற்றும் விநியோகம், பணமோசடி குற்றங்களுக்காக சில உல்லாசப்பயணிகளை கைது செய்து நாடு கடத்தியுமுள்ளோம். ஆனால் பாலியல் தொழில் போன்ற விடயங்களில் அவர்களை கைது செய்வதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அது அவர்களது தனிப்பட்ட அந்தரங்க விடயங்களாகும். அதை சவாலுக்குட்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெருக்குவதற்கு உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் இவ்வாறான கலாசார சீர்கேடுகளைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என சில பெளத்த அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. ஆனால் உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிப்பதாக இருந்தால் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க முடியாது என அரசாங்கத்தரப்பு அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
உல்லாசப்பயணத்துறையோடு இணைந்த நூற்றுக்கணக்காக உபதொழில்களை செய்பவர்களின் வாழ்வாதாரத்தோடும் இது சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே அதிக கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்க முடியாது. எனினும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM